Game Changer: ஜகா வாங்கிய ரேவந்த் ரெட்டி.. 2 நாளில் மாறிய அறிக்கை.. கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை..
Game Changer: கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Game Changer: ஷங்கரின் முதல் தெலுங்கு திரைப்படமான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ளனர். இந்தப் படத்தை தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜு தயாரித்தார். பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.
தெலங்கானா அரசு திட்டவட்டம்
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இனி தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளுக்கும், படங்களின் மீதான டிக்கெட் விலை ஏற்றத்திற்கும் இனி தெலங்கானா அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.
முதல்வருடன் ஆலோசனை
இதனால், அதிர்ச்சி அடைந்த தெலுங்கு திரையுலகத்தினர் பலரும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது தெலங்கானா அரசுக்கும் சினிமாத் துறையினருக்கும் சில சுமூக முடிவுகள் எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கை
இதையடுத்து, தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக தலைவரான தில் ராஜு, தான் தயாரித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளிக்குமாறும், டிக்கெட் விலையை ஏற்ற அனுமதி தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனை பரிசீலித்த தெலங்கானா அரசு, படம் வெளியான முதல் நாள் மட்டும் திரையங்கில் 6 காட்சிகளை திரையிடவும், பின் 2 ம் நாளில் இருந்து 5 காட்சிகளை திரையிடலாம் எனவும் கூறியது. மேலும் டிக்கெட் விலையை உயர்த்தியும் அரசாணை வெளியிட்டது.
டிக்கெட் விலை உயர்வு ரத்து
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் அதிகாலை 4 மணி காட்சி மற்றும் டிக்கெட் விலை உயர்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யும் புதிய அரசாணையை தெலங்கானா அரசு சனிக்கிழமை நிறைவேற்றியது.
சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 நெரிசல் வழக்கிற்குப் பிறகு, அரசாங்கத்தின் முடிவை கேள்விக்குள்ளாக்கி சதீஷ் கமால் மற்றும் கோர்லா பாரத் ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தெலங்கானா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா அரசு உறுதி
தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பானது ஜனவரி 16ம் தேதி முதல் அமலுக்கு வரும். பொது நலன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக, அதிகாலை காட்சிகளுக்கு எதிர்காலத்தில் அனுமதி அளிக்கப்படாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
முந்தைய அரசாணை
ஜனவரி 8 ஆம் தேதியிட்ட அரசாணையில், கேம் சேஞ்சர் படம் வெளியான முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட தொடங்கி 6 காட்சிகள் வரை திரையிடலாம் எனத் தெரிவித்திருந்தது.
பின்னர், 11ம் தேதி முதல் 19ம் தேதிவரை ஒன்பது நாட்களுக்கு ஐந்து காட்சிகளை திரையிடலாம் எனக் கூறியது.
படத்தின் முதல் நாளில், ஜிஎஸ்டி உட்பட, மல்டிபிளக்ஸ்களில் ரூ.150 மற்றும் தியேட்டர்களில் ரூ.100 டிக்கெட் விலையை உயர்த்தியது. அடுத்த ஒன்பது நாட்களுக்கு மல்டிபிளக்ஸ்களில் ரூ.100 மற்றும் தியேட்டர்களில் ரூ.50 உயர்த்தப்படும் என்றது.
புஷ்பா 2 நெரிசல் சம்பவம்
டிசம்பர் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சியில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கலந்து கொண்டார். ரசிகர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தபோது, நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் இறந்தார், அவரது மகன் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் முன் அனுமதியின்றி பிரீமியர் காட்சியில் கலந்து கொண்டதாகக் கூறி அரசாங்கமும் காவல்துறையும் அவரை டிசம்பர் 13 ஆம் தேதி கைது செய்தனர், பின் அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

டாபிக்ஸ்