HBD Writer Balakumaran: தமிழ் இலக்கிய உலகின் எழுத்துச்சித்தர்..! இளைஞர்களை கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்தநாள்
தமிழ் இலக்கிய உலகின் எழுத்துச்சித்தர் என்று கொண்டாடப்பட்ட பாலகுமாரன் சினிமாத்துறையிலும் வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பங்களிப்பு வெளிப்படுத்தியுள்ளார். இளைஞர்களை பெரிதும் கவர்ந்த எழுத்தாளராக திகழ்ந்தார்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கிய எழுத்தாளராகவும், திரையுலகிலும் வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியராகவும் பங்களிப்பை வெளிப்படுத்தி தனக்கென வாசகர், ரசிகர் வட்டத்தை கொண்டவர் பாலகுமாரன்.
தமிழில் வெளியாகும் பிரதான வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி முதல் பல்வேறு இதழ்களில் தனது எழுத்து மூலம் பங்களிப்பை வழங்கிய இவர், ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை உருவாக்கம், வசனம் போன்றவற்றுக்கும் பங்களிப்பு அளித்துள்ளார்.
கவிதையில் தொடங்கிய எழுத்து ஆர்வம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி பிறந்தார் பாலகுமாரன். பள்ளி இறுதிப் படிப்புவரை மட்டுமே படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
1969 காலகட்டத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கிய பாலகுமாரன், முதலில் கசடதபற என்ற இதழுலுக்காக எழுதினார் எனவும் கணையாழி என்கிற இதழுக்காக கவிதை எழுதினார் எனவும் இருவேறு தகவல்கள் உண்டு. இதன் பின்னர் பல்வேறு இதழ்களிலும் தனது எழுத்து பணியை தொடர்ந்தார். 70, 80களின் காலகட்டத்தில் இளைஞர்களை மிகவும் கவர்ந்ததாக பாலகுமாரனின் படைப்புகள் இருந்தன.
அதிலும் குறிப்பாக பாலகுமாரனின் நாவல்கள் புத்தக வாசிப்பாளர்களை பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவே இருந்தன. இப்போது செல்போன்கள் எப்படி ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இருக்கிறதோ, அந்த காலகட்டத்தில் பாலகுமாரனின் நாவல்கள் பாக்கெட்டில் தவறாமல் இடம்பெறுபவையாக இருந்தன.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய நாவல் இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக உள்ளது.
அதேபோல் இவர் எழுதிய நாவல் மற்றும் சிறுகதைகளான பந்தயப் புறா, ஆசை என்னும் வேதம், இனிது இனிது காதல் இனிது, மெளனமே காதலாக, ஆசைக்கடல், தலையணைப் பூக்கள் போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியாக அமைந்தன.
இவரது முதல் நாவலாந மெர்குரி பூக்கள் மற்றும் இரண்டாவது நாவலான இரும்பு குதிரை ஆகியவை முறையை சாவி மற்றும் கல்கி இதழ்களில் தொடர்கதைகளாக வெளியாக மிக பெரிய வரவேற்பை பெற்றன.
சினிமா பயணம்
இலக்கியத்தில் இருந்து சினிமா மீது ஆர்வத்தை வெளிப்படுத்திய பாலகுமாரன், கமல்ஹாசன் நட்பை பெற்று அவருடன் விவாதங்களில் பங்கேற்றார். இது அவரது சினிமா பயணத்தின் ஆரம்பமாக அமைந்தது. அதன் பிறகு பாலகுமாரனின் கதை நுட்பத்தை பார்த்து, இயக்குநர் கே.பாக்யராஜ் தன் படங்களின் கதை விவாதங்களுக்கு இவரை அழைத்துக்கொண்டார்.
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, சிந்துபைரவி, புன்னகை மன்னன் உள்பட சில கன்னட படங்களிலும் பணிபுரிந்தார். கே.பாக்யராஜின் மேற்பார்வையில் உருவான இது நம்ம ஆளு படத்தை பாலகுமாரன் தான் இயக்கினார்.
தொர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்துக்கு இவர்தான் வசனம் எழுதினார். இதையடுத்து கமலின் கல்ட் கிளாசிக் திரைப்படமான குணா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மரண மாஸ் ஹிட் படமான பாட்ஷா படங்களுக்கும் இவர் வசனம் எழுதினார். பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ்,
அஜித் நடித்த உல்லாசம், முகவரி, சிட்டிசன், சிம்புவின் மன்மதன், வல்லவன், தனுஷ் நடித்த புதுப்பேட்டை என தமிழில் பல்வேறு முக்கியமான படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.
மக்கள் மனதை கவர்ந்த எழுத்தாளர்
‘எழுத்துச்சித்தர்’ என்று கொண்டாடப்பட்ட பாலகுமாரன், கலைமாமணி’ உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். 200க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20க்கும் மேற்பட்ட சினிமாக்கள் என தமிழ் இலக்கியத்திலும், திரைத்துறையில் பங்களிப்பை தந்து மக்கள் மனதை கவர்ந்த எழுத்தாளராக திகழ்ந்த பாலகுமாரன் பிறந்த நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்