Tamil Releases Rewind: அண்ணாதுரையின் முதல் படம்.. தமிழ் சினிமாவின் தரமான த்ரில்லர்.. பிப்ரவரி 4 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
Tamil Releases on Feb 4, Throwback: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து பார்த்தால் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

பிப்ரவரி 4, 2025ஆம் தேதிக்கு முன் இதே பிப்ரவரி 4ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர், பிரபுதேவா ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ரிலீஸ் சூப்பர் ஹிட் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு
நல்லதம்பி
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1949இல் வெளியான படம் நல்லதம்பி, என்.எஸ். கிருஷ்ணன் - டி.ஏ. மதுரம் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி மற்றும் சமூக சிந்தனை படமாக உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா கதை, திரைக்கதை எழுதிய முதல் படம் என்ற பெருமையை கொண்ட நல்லதம்பி, 1936இல் வெளியான மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன் என்ற அமெரிக்க படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.
நான் ஆணையிட்டால்
டபி சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர் - கேஆர் விஜயா நடிப்பில் 1966இல் வெளியான படம் நான் ஆணையிட்டால். ஆர்எம் வீரப்பன் திரைக்கதையில் உருவான இந்த படம் எம்ஜிஆர் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருந்த நிலையில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது
சங்கே முழங்கு
எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் பி. நீலகண்டன் இயக்கத்தில் 1972இல் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் சங்கே முழங்கு.ஜிபான் மரிட்யூ என்ற பெங்காலி படத்தின் ரீமேக்கான உருவான இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லட்சுமி நடித்திருப்பார். கமல்ஹாசன் இந்த படத்தின் நடன உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதேபோல் நடிகை ஸ்ரீதேவியும் சிறுமியாக நடித்திருப்பார். எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக சங்கே முழங்கு இருந்து வருகிறது
ஏழையின் சிரிப்பில்
மறைந்த இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் 2000ஆவது ஆண்டில் வெளியான படம் ஏழையின் சிரிப்பில். பிரபுதேவா, ரோஜா, கெளசல்யா, சுவலட்சுமி, நாசர், விவேக் என பலர் நடித்து பக்கா கமர்ஷியல் படமாக அமைந்திருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. லியோ படத்தில் இடம்பெறும் கரு கரு கருப்பாயி பாடல் இந்த படத்தில் தான் இடம்பிடித்திருந்தது. படத்தில் இடம்பிடித்த காமெடி, தேவா இசையில் பாடல்கள் என இன்று வரையில் ரசிக்கப்படும் படமாக உள்ளது
தூங்கா நகரம்
கெளரவ் நாரயணன் இயக்கத்தில் 2011இல் வெளியான படம் தூங்கா நகரம். விமல், அஞ்சலி, பரணி பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் மதுரையை பின்னணியாக கொண்ட கதையமத்தில் அப்போது வெளியான ட்ரெண்டிங் படங்களில் ஒன்றாக இருந்தது. இருப்பினும் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரவேற்பையும் பெற்றது.
யுத்தம் செய்
மிஷ்கின் இயக்கத்தில் 2011இல் வெளியாகி தமிழ் சினிமாவில் தரமான த்ரில்லர் படங்களில் ஒன்றாக யுத்தம் செய் இருந்து வருகிறது. சேரன், ஜெய பிரகாஷ் தீபா ஷா, ஒய்.ஜி. மகேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், செல்வா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் விறுவிறுப்பான சீட் எட்ஜ் திரில்லராக ரசிகர்களை மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெறும் கன்னித்தீவு பொண்ணா என்ற குத்து பாடலில் இயக்குநர் அமரீன் டான்ஸும், மிஷ்கினின் ட்ரேட்மார்க்கான மஞ்சள் சேலையுடன் நீது சந்திரா நடனமும் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்புடையை செய்திகள்