Tamil Release Rewind: மணிரத்னம், மிஷ்கின் கல்ட் கிளாசிக் படங்கள்.. விஜயகாந்துக்கு ஸ்டார் அந்தஸ்து - பிப்ரவரி 14 ரிலீஸ்
Tamil Release Rewind on Feb 14: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் ஆகியோரின் கல்ட் கிளாசிக் படங்கள், விஜயகாந்துக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்த படம் ஆகியவை வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 14, 2025க்கு முன், இதே பிப்ரவரி 14ஆம் தேதியில் விஜய்காந்தை ஸ்டார் ஆக்கிய படம், வெள்ளிவிழா கண்டு வசூலை குவித்த படம், இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் ஆகியோரின் கல்ட் கிளாசிக் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு
சட்டம் ஒரு இருட்டறை
எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி, வாசுமதி, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்து 1981இல் வெளியான ஆக்ஷன் திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. தந்தை மற்றும் மூத்த சகோதரி இறப்புக்காக பழிவாங்க மூன்று பேரே கொல்ல முயற்சிக்கும் ஹீரோ, அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஹீரோவின் சகோதரியும் சட்ட வழியில் அதை தடுக்க எவ்வாறு முயற்சிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் வெளியான இந்த படம் வெற்றியையும் பெற்றது.
இதன் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய்காந்த் சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்த படம் அவரை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் படமாக சட்டம் ஒரு இருட்டறை படம் அமைந்திருந்ததோடு, இதன் கதையை இன்ஸ்பயர் செய்து ஏராளமான படங்களும் அடுத்து வெளியாகின.
எட்டுப்பட்டி ராசா
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நெப்போலியன், குஷ்பூ, ஊர்வசி, மணிவண்ணன், பொண்வண்ணன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த எட்டுப்பட்டி ராசா 1997இல் வெளியானது. கிராமத்து பின்னணியில் காதல், ஆக்ஷன் கலந்து உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தேவா இசையில் பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடல் இந்த காலகட்டத்தில் ரீல்ஸ் மற்றும் வைப் பாடலாக உருவெடுத்துள்ளது.
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதை நடிகர் நெப்போலின் இந்த படத்துக்காக பெற்றார். கிராமத்து பின்னணியில் இருக்கும் சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக இருந்து வரும் எட்டுப்பட்டி ராசா 175 நாள்களுக்கு மேல் திரையில் ஓடியது
கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் மகன் கீர்த்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ஈழ பின்னணியை கொண்ட கதையம்சத்தில் உருவாகி ரசிகர்களை கலங்கடித்த படம் கன்னத்தில் முத்தமிட்டால்.2002ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் ஆறு தேசிய விருது, மூன்று பிலிம்பேர் விருது, 7 தமிழ்நாடு அரசின் விருதுகளை வாங்கி குவித்தது.
மறைந்த எழுத்தாளர் அமுதாவும் அவனும் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் சிறந்த உணர்வுபூர்வமான படங்களில் ஒன்றாக கன்னத்தில் முத்தமிட்டால் இருந்து வருகிறது.
அஞ்சாதே
போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை சொல்லும் படமாக அஞ்சாதே படம் அமைந்திருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் 2008இல் வெளியான இந்த படத்தில் நரேன், அஜ்மல், விஜயலட்சுமி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். பிரசன்னா, பாண்டியராஜன் ஆகியோர் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
மிஷ்கினின் சிக்னேச்சர் மஞ்சள் சாரி பாடலாக கத்தாழ கண்ணால பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. 3 மணி நேரத்துக்கும் மேலாக ஓடும் திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதையாக ரசிகர்களை கவர்ந்து அந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக அஞ்சாதே படம் உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்