D Imman Birthday: ‘வாழ்க்கை ரொம்ப கசப்பா.. இப்ப திருந்தி..’ - டி இமான் பேட்டி!
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புதிய உலக சாதனை படைத்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு, உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த நிகழ்வில் இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இமான், “இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன.
சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கிறது. இனிப்பான விஷயங்கள், கசப்பான சம்பவங்கள் என நிறைய பார்த்தாயிற்று.
அதையெல்லாம் தாண்டி என்னை கொண்டு செல்வது எது என்றால் இசை என்கிற இறை சக்தி தான். என்னுடைய ஒவ்வொரு நகர்வையும் அதுதான் நகர்த்தி சென்று கொண்டிருக்கிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது.
‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம்.
அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம்.
சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். நீங்கள்தான் என்னை திருந்தி வாழவைக்கிறீர்கள்.‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
டாபிக்ஸ்