Tamil Movies Rewind: பிரிண்ட் மிஸ்ஸான கிளாசிக் படம்.. கார்த்தியின் எதார்த்த நடிப்பு.. மார்ச் 25இல் ரிலீசான தமிழ் படங்கள்
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 25ஆம் தேதி வெளியான ரசிகர்களை கவர்ந்து கிளாசிக் படம் மற்றும் 2000ஆவது ஆண்டுக்கு பின் வெளியான இரண்டு படங்கள் பற்றி பார்க்கலாம்

மார்ச் 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவக்குமார் நடித்த சிறந்த கிளாசிக் படம், கார்த்தி நடித்த காமெடி கலந்த உணர்வுபூர்வமான படங்கள் வெளியாகியிருக்கின்றன. மார்ச் 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு
இவன் அவனேதான்
1960களில் பிரபலமாக இருந்த தெலுங்கு நடிகர் உதயகுமார், மலையாள நடிகை அம்பிகா, தேவிகா, சாரங்கபாணி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்து சைக்காலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் வெளியான படம் இவன் அவனேதான். பி. ஸ்ரீதர் இயக்கத்தில் 1960இல் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது.
ஆனால் இந்த படத்தின் ப்ரிண்ட் தொலைந்து போன நிலையில், தமிழ் சினிமாவில் காணாமல் போன படங்களில் ஒன்றாக உள்ளது. எம். ரங்காராவ் இசையில் படத்தின் 9 பாடல்கள் இடம்பிடித்திருந்தன. இதில் மூன்று பாடல்கள் டான்ஸ் காட்சிகளுடன் இடம்பிடித்திருக்கும் நிலையில், இவை கெவா கலர் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டிருந்தது.
முழுமையான பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பாடல்கள் அல்லது சில காட்சிகள் மட்டும் முக்கியத்துவம் கருதி வண்ண நிறத்தில் படமாக்கப்பட இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் அவுட்டோர் லொக்கேஷன்களில் இந்த கெவாகலர் பயன்படுத்தப்படும் நிலையில், சிவப்பு, நீலம் அல்லது பச்சை நிறத்தை மையப்படுத்தி காட்சிகள் இதில் படமாக்கப்படும்.
குள்ளநரி கூட்டம்
ஸ்ரீபாலாஜி இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன், சூரி, அப்புக்குட்டு உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் காமெடி படமாக 2011இல் ரிலீசான படம் குள்ளநரிக்கூட்டம். வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றிக்கு பின்னர் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் சில மீண்டும் இணைந்த இந்த படம், காமெடி, காதல், பேமிலி சென்டிமெண்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது.
விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற குள்ளநரி கூட்டம் படம் ஓரளவு வசூலையும் ஈட்டியது. விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்த படமாக அமைந்தது. செல்வகணேஷ் இசையில் படத்தில் இடம்பிடித்த விழிகளிலே என்ற மெலடி பாடல் மிகவும் பாப்புலர் ஆனது.
தோழா
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கார்த்தி, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தமன்னா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் தோழா. 2016ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் ஸ்ரேயா சரண், அனுஷ்கா ஷெட்டி, நோரா படேகி போன்றோரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
பிரான்ஸ் மொழி படமான தி இன்டச்சபிள்ஸ் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி ரிலீசானது. பையா படத்துக்கு பின் கார்த்தி - தமன்னா ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதையம்சத்தில் உருவாகியிருந்த படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தெலுங்கில் படம் ஓபிரி என்ற பெயரில் வெளியானது. படத்தின் தமிழ் பதிப்பான தோழா வசனத்தை ராஜு முருகன் எழுதினார். இரு மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் ஹிட்டானது. வழக்கமான தெலுங்கு மசாலா சினிமாக்களில் இருந்து மாறுபட்ட இருந்த ஓபிரி, அந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த தெலுங்கு படம் எனவும் போற்றப்பட்டது. 64வது பிலிம் பேர் விருதுகளில், சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளருக்கான விருதும் தெலுங்கு பதிப்புக்காக கிடைத்தது. இந்த படத்துக்காக கார்த்தி தெலுங்கில் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசினார். கார்த்தியின் சிறந்த படங்களில் ஒன்றாக தோழா படமும் இருந்து வருகிறது.
