Tamil Movies Rewind: விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி முதல் முறையாக இணைந்த படம்.. மார்ச் 26இல் ரிலீசான தமிழ் படங்கள்
Tamil Movies Rewind: 2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 26ஆம் தேதி விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று டாப் தமிழ் சினிமாக்களில் ஒன்றாக இருந்து வரும் அங்காடி தெரு படம் வெளியாகியுள்ளது. இது தவிர சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் நடித்த சிறந்த கிளாசிக் படம் ஒன்றும் வந்துள்ளது.

மார்ச் 26, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இடம்பிடித்த அங்காடி தெரு, சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் இணைந்து நடித்த கிளாசிக் படம் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் தளபதி விஜய் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் உருவான விஜய் படம், பெட்டிக்குள் முடங்கி கிடந்து தாமத ரிலீஸாக வெளியானது. மார்ச் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு
குலமா குணமா
கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், பத்மினி, வானிஸ்ரீ, எம். என். நம்பியார், நாகேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க 1971இல் வெளியான குடும்ப திரைப்படம் குலமா குணமா. தெலுங்கில் வெளியான தள்ளி பிரேமா என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் அண்ணன், தம்பி உறவை பற்றியை உணர்வுபூர்வமான கதையம்சத்தில் உருவாகியிருந்தது.
மேலும் படிக்க: டபுள் ஆக்டிங்கில் ஒன் மேன் ஷோ காட்டிய சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் - ஜெய்சங்கர் இணைந்து நடித்த இந்த படத்தில் இருவரும் போட்டிபோட்டு நடிப்பை திறமையை வெளிப்படுத்தியிருப்பார்கள், குடும்ப உறவின் மகத்துவத்தை மிகவும் எமோஷனலாக சொன்ன இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் ஆனது. கே.வி. மகாதேவன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் வரவேற்பை பெற்றன.
உதயா
அழகம் பெருமாள் இயக்கத்தில் விஜய், சிம்ரன், விவேக், நாசர், ராஜேஷ் உள்பட பலர் நடித்து ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த உதயா 2004இல் வெளியானது. 1998இல் தொடங்கிய இந்த படம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.
ஏற்கனவே, இயக்குநர் அழகம்பெருமாள் அரவிந்த் சாமி - கரிஷ்மா கபூர் நடிப்பில் இயக்குவதாக இருந்த முதல் முதலாக என்ற படமும் நின்று போனது. இதன் காரணமாக அழகம் பெருமாள் அதிர்ஷ்டமில்லா இயக்குநர் என முத்திரை குத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனது குரு மணிரத்னம் தயாரிப்பில், மாதவன் - ஜோதிகா நடிப்பில் டும் டும் டும் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்த படத்துக்கு பின்னர் நின்று போன உதயா படத்தில் மீதமிருந்த பாடல்கள் படமாக்கப்பட்டது.
மேலும் படிக்க: இத்தோட எல்லாத்தையும் நிறுத்திகோங்க.. கொந்தளித்த சிம்ரன்
அப்போது, டாப் நடிகையாக இருந்த சிம்ரன் திருமணம் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தை முடித்து கொடுக்குமாறு தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாட, பின்னர் சிம்ரன் எஞ்சியிருந்த பாடல்களில் நடித்து முடித்து கொடுத்தார்.
விஜய்யின் சினிமா கேரியரில் திருப்பமுனையாக அமைந்த கில்லி ரிலீஸுக்கு சில நாள்கள் முன்னதாகவே வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
உதயா படத்தில் தான் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி முதல் முறையாக இணைந்தது. படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன. திருவல்லிகேனி ராணி என்ற குத்து பாடலில் அப்போது பிரபலமாக இருந்த ஹாலிவுட் நடிகையான சோபியா ஹக் நடனமாடியிருப்பார். விஜய் ரசிகர்களுக்கே தெரியாத அளில் உதயா படம் வந்து போனது
அங்காடித்தெரு
வசந்த பாலன் இயக்கத்தில் புதுமுகம் மகேஷ், அஞ்சலி, இயக்குநர் வெங்கடேஷ், பழ. கருப்பையா, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்து காதல் கலந்த எமோஷனல் ட்ராமா படமாக உருவாகியிருந்த அங்காடித்தெரு 2010ஆம் ஆண்டில் வெளியானது. சென்னையின் ஷாப்பிங் அடையாளமாக இருந்து வரும் ரெங்கநாதன் தெரு மற்றும் அங்கிருக்கும் பிரபல கடையின் பின்புலமாக வைத்து அமைந்திருந்த படத்தின் கதை தமிழ் சினிமாவின் வித்தியாச முயற்சியாக இருந்தது.
எதார்த்த கதைகளத்துடன், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி என இரண்டு இசையமைப்பாளர்கள் படத்துக்கு இசையமைத்திருந்தனர். படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
சிறந்து படத்துக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றது இந்த படம். அதேபோல் நடிகை அஞ்சலிக்கு தமிழ்நாடு அரசு சிறந்த நடிப்புக்கான ஜூரி விருதும் கிடைத்தது. இது தவிர உன் பெயரை சொல்லும்போதே பாடலுக்காக பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு பிலிம் பேர் விருது கிடைத்து. இதுதவிர பல்வேறு விருதுகளை இந்த படமும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களும் பெற்றனர். இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இடம்பிடித்த இந்த படம் தேர்வு செய்யப்படவில்லை. தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் டாப் சினிமாக்கள் லிஸ்டில் ஒன்றாக இடம்பிடித்தது அங்காடி தெரு.
