எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்

எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 03, 2025 07:00 AM IST

சினிமாவில் வில்லன், நிஜத்தில் பல நடிகர்களோடு நட்புடன் பழககூடியவராகவும், பல இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராகவும் இருப்பவர் ஓ.ஏ.கே. சுந்தர். ஜனவரி 3ஆம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது சினிமா பயணத்தை பார்க்கலாம்

எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்
எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்

பழம்பெரும் சினிமா வில்லன் நடிகர் ஓ.ஏ.கே. தேவர் மகனான இவர் சினிமாக்களில் 1990களில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமா பயணம்

தமிழ் சினிமாவில் வெண்கல குரலோன் என்று அழைக்கப்பட்டவர் ஓ.ஏ.கே. தேவர். நாடக நடிகராக இருந்து, சினிமாவுக்கு வந்து வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தார். இவரது மகனான ஓ.ஏ.கே. சுந்தரை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த சங்கிலி முருகன் நடிகராக்கினார். 1992இல் வெளியான நாடேடி பாட்டுக்காரன் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து செந்தூர பாண்டியன், தேவா, ரகசிய போலீஸ் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

இதைத்தொடந்து டிவி சீரியல்களிலும் முக்கிய நடிகராக உருவெடுத்தார். சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் மக்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களில் தோன்றினார். சினிமாக்களில் வில்லத்தனமான வேடம் என்றால் சீரியல்களில் காமெடி வில்லனாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில் உருவான 'ரோமாபுரிப் பாண்டியன்', சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'மகாபாரதம்' தொடரிலும் நடித்து தொலைக்காட்சி வழியே ஒவ்வொரு இல்லத்தையும் தேடி சென்றடைந்தார். சினிமாக்களை போல் சீரியல்களிலும் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெறும் விதமாகவே அமைந்திருந்தது.

அதேபோல் பொன்னியின் செல்வன் படம் உருவாவதற்கு முன்னர் இரண்டு முறை அந்த கதையை படமாக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் சில நாள்கள் ஷுட்டிங்கும் நடைபெற்றது. இதில் ஒரு முறை பார்த்திபனாகவும், மற்றொரு முறை பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

விருமாண்டி தந்த பாடம்

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் கோட்டைசாமி என்ற கேரக்டரில் வில்லன் பசுபதியின் பங்காளிகளில் ஒருவராக வரும் ஓ.ஏ.கே. சுந்தர், எதார்த்தமான நடிப்பில் கலக்கியிருப்பார். விருமாண்டி படம் தான் இவரது சினிமா கேரியரில் மிக பெரிய பிரேக் கொடுத்தது என கூறப்பட்டாலும், அந்த படம் தனக்கு பெரிய பாடம் என பல பேட்டிகளில் இவர் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார். இந்த படத்தில் நடிக்க கமிட்டான போது கமல்ஹாசன் இவரை பார்த்து உண்மையான தேவர் மகன் இவர்தான் என்று கலகலப்பாக பேசியுள்ளார். விருமாண்டி ரிலீஸான 2004ஆம் ஆண்டுக்கு பிறகு பிஸியான நடிகராக மாறிய ஓ.ஏ.கே. சுந்தர் ஆண்டுக்கு குறைந்தது 3 படங்கள் வரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகரானார். இடையே சீரியல்களிலும் நடிப்பை தொடர்ந்து வந்தார்.

இயக்குநரின் நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான ஹரி, செல்வா, சிறுத்தை சிவா உள்பட பல நடிகர்களின் ஆஸ்தான நடிகராக இருந்து வருகிறார். பல இயக்குநர்களின் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிக்கும் நடிகராக இருந்துள்ளார்.

"நான் ஒரு இயக்குநரின் நடிகனாகவே என்றும் என்னை நினைத்துக் கொள்வேன் அப்படியே எப்போதும் உணர்வேன். அவர்களுக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்க முடியுமோ அதை செய்ய முயற்சிப்பேன். இயக்குநர்களுக்கு திருப்தி வரும் வரை எத்தனை முறை கேட்டாலும் நடித்துக் கொடுப்பேன். அந்தப் பாத்திரம் நன்றாக வருவதற்காக என்னால் முடிந்தளவு ஹோம் ஒர்க் செய்வேன் .இதனால் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைக்கிறார்கள்" என்றார்.

இயக்குநர்களை போல் சக நடிகர்களிடம் மிகவும் நட்புடன் பழகும் தன்மை கொண்டவராக இருந்து வரும் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.

ராணுவத்தினர் பிடியில் சிக்கிய தருணம்

சினிமா படப்பிடிப்பின்போது ஓ.ஏ.கே. சுந்தரை, தீவிரவாதி ஒசாமா பின் லேடன் என தவறாக நினைத்து ராணுவத்தினர் சுற்றி வளைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி பேட்டி ஒன்றில் ஓ.ஏ.கே. சுந்தர் கூறியபோது, "சுந்தர் சி உடன் இணைந்த வாடா என்ற படத்தில் நடித்தேன். ரிஷிகேஷில் ஒரு பாலத்தில் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. நான் பின்லேடன் கெட்டப்பில் இருந்தேன். என்னை சுந்தர் சி துரத்துவதுபோல் படமாக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மிலிட்டரி ஜீப்பில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் கீழே இறங்கிய ராணுவத்தினர் வந்து என்னை பிடித்தனர். உடனடியாக படப்பிடிப்பில் இருந்தவர்கள் உண்மையை எடுத்து கூறினர். சில நிமிடங்கள் அந்த சூழ்நிலை அச்சமாக காணப்பட்டோம். பின்னர் படப்பிடிப்பை தொடர்ந்தோம்" என்றார்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட சினிமா படங்கள், 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். சிட்டி கதைகளில் வில்லன், போலீஸ், அரசியல்வாதி, கிராமத்து கதைகளில் ஊர் மதிக்கும் பெரியவர், குடும்ப கதைகளில் அண்ணன், சித்தப்பா போன்ற பல்வேறு பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் எதார்த்த நடிகராக குடிபுகுந்திருக்கும் ஓ.ஏ.கே சுந்தர் பிறந்தநாள் இன்று.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.