தமிழ் சினிமா ரீவைண்ட்: 90ஸ் காலத்தில் அதிக செலவில் உருவான படம்.. ஏப்ரல் 24 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான சூப்பர் படங்கள்
ஏப்ரல் 24ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, பிரசாந்த் போன்ற ஹீரோக்களின் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. 90ஸ் காலத்தில் அதிக செலவில் உருவான படம் முதல் இந்த நாளில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி இருக்கும் இந்த ஹீரோக்களின் படங்களை பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஏப்ரல் 24, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த பணக்கார குடும்பம், சிவாஜி கணேசன் நடித்த அமரகாவியம், விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே, பிரபு நடித்த சின்னவர், பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் போன்ற ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
பணக்கார குடும்பம்
டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, நாகேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த காதல் கலந்த காமெடி படமாக உருவாகி 1964இல் வெளியான படம் பணக்கார குடும்பம். எம்ஜிஆரின் குறும்புத்தனமான நடிப்பு, காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் 150 நாள்கள் திரையரங்கில் ஓடியது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. எம்ஜிஆரின் காமெடி படங்களில் ஒன்றாக இருந்து வரும் பணக்கார குடும்பம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
அமரகாவியம்
அமிர்தம் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா மற்றும் மாதவி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க பேமிலி ட்ராமா படமாக 1981இல் ரிலீசான படம் அமரகாவியம். இந்தியில் சூப்பர் ஹிட்டான முகதர் கா சிக்கந்தர் படத்தின் ரீமேக்காக உருவாகியது அமரகாவியம், ஒரிஜனல் பதிப்பை விட மிகவும் எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன் கைதட்டல்களை வாங்கினார். பல்வேறு திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையுடன் அமைந்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
அம்மன் கோவில் கிழக்காலே
ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரெமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 1986இல் ரிலீசான படம் அம்மன் கோவில் கிழக்காலே. ரஜினிகாந்தை மனதில் வைத்து படத்தின் கதையை உருவாக்கிய ஆர். சுந்தர்ராஜன், பின்னர் விஜயகாந்தை நடிக்க வைத்து இந்த படத்தை உருவாக்கினார். பாட்டு வாத்தியாராக வரும் விஜயகாந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்துக்காக சிறந்த நடிகர் பிலிம்பேர் விருதையும் வென்றார்.
திமிர் பிடித்த பெண்ணாக தொடக்கத்திலும், பின்னர் அடக்கமான பெண்ணாகவும், விஜயகாந்த் உருகி காதலிப்பவராகவும் ராதா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இளையராஜா இசையில் சின்னமணி குயிலே, பூவ எடுத்து, உன் பார்வையில் போன்ற பாடல் கிளாசிக் மெலடியாக இன்று வரையிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் ஹிட்டானது.
சின்னவர்
கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு, சந்திரசேகர், கஸ்தூரி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து காதல் கலந்த ட்ராமா படமாக உருவாகி 1992இல் ரிலீசான படம் சின்னவர். மீனவர்கள் பற்றிய கதையம்சத்தில் உருவாகியிருந்த இந்த படம் காதல், காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் என ஜனரஞ்சமாக அமைந்திருந்தது. கவுண்டமணி, செந்தில், கோவை சரளா காம்போ காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக இருந்தன.
இளையராஜா இசையில் அந்தியிலே வானம் என பாடல் சிறந்த மெலடியாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. பிரபுவின் சினிமா கேரியரில் ஹிட் படங்களில் ஒன்றாக சின்னவர் அமைந்தது.
ஜீன்ஸ்
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் நாசர் இரட்டை வேடத்தில் நடிக்க, உலக அழகி ஐஸ்வர்யா ராய், ராதிகா, லட்சுமி, செந்தில், ராஜுசுந்தரம் உள்பட பலர் நடித்து 1998இல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ரெமாண்டிக் காமெடி படம் ஜீன்ஸ். 90ஸ் காலகட்டத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவான இந்திய படமாகவும், அந்த காலகட்டத்தில் கோடிகளில் வசூலை ஈட்டிய படமாகவும் ஜீன்ஸ் உள்ளது.
தமிழ்நாடு அரசின் விருது, பிலிம்பேர் விருது, தேசிய விருதுகளை வென்ற இந்த படம், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகவும் உள்ளது.
ரொமாண்டிக் கதையை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர். அமெரிக்காவில் பாதி படத்தின் படப்பிடிப்பு, உலகின் 7 அதிசயங்களில் ஒரு பாடல், விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராபிக் காட்சிகள் என பல்வேறு சர்ப்ரைஸ்கள் இந்த படத்தில் ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக அமைந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் உலகம் முழுவதும் ஒலித்தன. ஒரு கம்ளீட் பேமிலி எண்டர்டெயினர் பேக்கேஜ் ஆக அமைந்திருந்த ஜீன்ஸ் படம் தமிழ் சினிமாவின் பெருமை பேசிய படமாக இருந்தது.
