67 Years Of Mayabazar: மறக்க முடியுமா?.. மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மாயாபஜார்' ரிலீஸான நாள் இன்று!
67 Years Of Mayabazar: ஜெமினிகணேசன், என்.டி.ராமாராவ், சாவித்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற "மாயாபஜார்" திரைப்படம் வெளியான நாள் இன்று (ஏப்ரல் 12) இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தென்னிந்திய சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. இருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். சில திரைப்படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத வகையில் ரசிகர்கள் மனதில் இடம்பெறுவது உண்டு.
மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், பிரமாண்ட சண்டைக் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், அந்தக் காலத்துப் படம் என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட முடியாத திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது மாயாபஜார்.
கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த 'மாயாபஜார்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, டி.பாலசுப்பிரமணியம், ஆர்.பாலசரஸ்வதி, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.
