T. P. Gajendran: முதல் படத்திலேயே மரபுகளை உடைத்த இயக்குநர்.. பேமிலி படங்களில் முத்திரை பதித்த எதார்த்த கலைஞர்
T. P. Gajendran Death Anniversary: "மனுஷங்களோட தேவைக்கு சட்டத்தையே மாத்துறாங்க. சாஸ்திர, சம்பிரதாயங்களை மாத்துறது தப்பில்ல" என தனது முதல் படத்திலேயே புரட்சிகரமான வசனம், காட்சியை வைத்து கவனிக்க வைத்தவர் இயக்குநர் டி.பி. கஜேந்திரன். இயக்குநர், நடிகராக தமிழ் சினிமாவில் எதார்த்த கலைஞராக திகழ்ந்தார்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தவர் டி.பி. கஜேந்திரன். 1983 முதல் 2023 வரை தமிழ் சினிமாவில் பயணித்த முக்கிய நபராக இருந்துள்ளார். இவரது அண்ணியும் பழம்பெரும் நடிகையுமான டி.பி. முத்துலட்சுமி தான், இவர் சினிமாவில் நுழையவும், தனக்கென தனி இடத்தையும் பிடிக்கவும் காரணமாக இருந்தார்ம என சொல்லப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் டி.பி. கஜேந்திரன், 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமா பயணம்
1980களின் தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர், விசு ஆகியோரின் உதவியாளாராக பணியாற்றினார். விசுவின் டவுரி கல்யாணம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், அதன் பின்னர் அவரது சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம், அவள் சுமங்கலிதான், காவலனஅ என் கோவலன் என அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
1988இல் வெளியான வீடு மனைவி மக்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், நடிப்பில் இருந்து ஒதுங்கி இயக்கத்தில் கவனம் செலுத்தினார். மினிமம் கியாரண்டி இயக்குநர் என பெயரெடுத்த இவர் 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு மூன்று படம் என இரண்டு ஆண்டுகளில் தலா 6 படங்களை இயக்கி முத்திரை பதித்தார்.
ராமராஜன், கார்த்திக், பிரபு, ராஜ் கிரண், ரமேஷ் அரவிந்த் போன்ற ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். பிரபுவை வைத்து மட்டும் 4 படங்களை இவர் இயக்கியுள்ளார். விசுவின் உதவியாளர் என்பது இவரது பல படங்களும் அவரது சாயலிலேயே குடும்ப திரைப்படங்களாக அமைந்திருந்தன. அத்துடன் கிராமத்து பின்னணியில் காதல், காமெடி கலந்த பேமிலி படங்களை இயக்குவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.
நடிப்புக்கு கம்பேக்
1988இல் தனது இயக்கத்தில் வந்த முதல் படமான வீடு மனைவி மக்கள் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த டி.பி. கஜேந்திரன், பின்னர் இயக்கத்தில் கவனம் செலுத்திய நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1992இல் வெளியான அண்ணன் என்னடா தம்பி என்னடா படம் மூலம் நடிப்புக்கு கம்பேக் கொடுத்தார்.
அதன் பின்னர் படங்கள் இயக்கம், நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்தார். பம்மல் கே சம்மந்தம் படத்தில் டைரக்டர், பார்த்திபனின் இவன் படத்தின் மினிஸ்டர், சூர்யாவின் பேரழகன் படத்தில் குட்டை சினேகாவாக வரும் பெண்ணின் அப்பா போன்ற இவரது சில கதாபாத்திரங்கள் அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
சிறப்பான டயலாக் டெலிவரி, மாடுலேஷன், பாடி லாங்குவேஜ் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் இருந்து வந்த டி.பி. கஜேந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஏதாவதொரு காமிக் கதாபாத்திரங்களில் தோன்றுபவராக இருந்தார். குட்டையாகவும், குண்டான தோற்றத்தில் இவர் இருந்தாலும் அதையே ப்ளஸ் ஆக வைத்து பல படங்களில் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.
டி.பி. கஜேந்திரனின் முத்திரை பதித்த படங்கள்
குறைந்த அளவில் படங்களை டி.பி. கஜேந்திரன் இயக்கியிருந்தாலும், அவை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த படங்களாகவும், அவரது படங்களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்களின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்துள்ளன. அந்த வகையில் எந்த காலத்துக்கும் பொருந்து விதமாக இவரது வீடு மனைவி மக்கள், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்கள் இருந்து வருகின்றன. மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு - விவேக் காம்போவின் எதார்த்தமான காமெடி தமிழ்நாட்டில் பெரும்பலான குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே இருந்தது.
அதேபோல் வீடு மனைவி மக்கள் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் வரும் நடிகர் விசு இறந்த தனது மனைவியை, அவர் வீடு கட்ட விரும்பிய இடத்தின் அருகிலேயே மகன்கள் இருந்தாலும் அவர்களை ஒதுக்கிவிட்டு மகளை வைத்து கொள்ளி வைக்கும் செய்யும் காட்சியை வைத்து மரபுகளை உடைத்தெறிந்த புரட்சி இயக்குநராகவும் தன்னை முதல் படத்திலேயே அடையாளப்படுத்தி கொண்டார் டி.பி. கஜேந்திரன். க்ளைமாக்ஸில், "மனுஷங்களோட தேவைக்காக சட்டத்தையே மாத்துறாங்க. சாஸ்திர, சம்பிரதாயங்களை மாத்துறது தப்பில்ல" என்ற விசுவின் வசனம் மிகவும் பிரபலமானது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கல்லூரி தோழரான டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி காலமானார். இயக்கம், நடிப்பு என இரண்டிலும் ரசிகர்களை மகிழ்வித்த எதார்த்த கலைஞராக தன்னை நிலைநிறுத்தி கொண்ட டி.பி. கஜேந்திரன் நினைவு நாள் இன்று.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்