ஏ பிலிம் பை சேரன்! உறவுகளின் ஆழத்தை உரக்கச் சொல்லும் படங்கள்! யதார்த்த சினிமா இயக்குநர் சேரனின் பிறந்தநாள்!
அந்த சமயங்களில் ஏ பிலிம் பை சேரன் எனப் போட்டிருந்தால் போதும் தாராளமாக படத்திற்கு சென்று விடலாம். அந்த அளவிற்கு சேரனின் படைப்பு மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
ஒரு திரைப்படம் என்ன செய்து விடும்? மிஞ்சிப் போனால் ஒர் 3 மணி நேரங்கள் சிரிக்க வைக்கும், ரசிக்க வைக்கும். ஆனால் இவர் இயக்கிய படங்கள் உங்களது வாழ்க்கையின் ஒரு காட்சியை அப்படியே பிரதிபலிக்கும், உங்களிடம் இருந்து பிரிந்து போன ஒரு உறவை அப்படியே உங்கள் முன் நிறுத்தும். படத்தின் காட்சிகளோடு ஒன்றி உங்கள் கண்களில் இருந்து அன்பை கண்ணீராக வடியச்செய்யும். அவர் தான் யதார்த்த சினிமா இயக்குநர் சேரன், இவரது படங்களில் திரை மொழியும் கதாப்பாத்திரங்களும் இணைந்து நமது மனதை எளிதாக ஆட்கொண்டு விடும். இவரது 59 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
உயிரோட்டமான படங்கள்
இயக்குனர் சேரன் முதலில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் நடிகர் கமல் ஹாசனின் மகாநதி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக பாரதி கண்ணம்மா படத்தின் வாயிலாக தமிழ் இயக்குநரக அறிமுகமானார். இதே ஆண்டில் இவரது இரண்டாவது படமான பொற்காலமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் சமூகத்தில் இருந்த பிற்போக்கு நடைமுறைகளால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை எடுத்துக் காட்டும் வண்ணம் இருந்தன.
அடுத்ததாக இவரின் படங்களான வெற்றிக் கொடி கட்டு என குடும்பங்களின் உறவையும் அதன் வலிமையையும் அழகாக காட்சி படுத்தியிருப்பார். இருப்பினும் பாண்டவர் பூமி படத்தில் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட காட்சிகள் இன்று வரை விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆட்டோகிராப் எனும் ஒரு ஆதர்சன படைப்பு
அடுத்ததாக இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே இப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆனது. இன்று வரை சேரனின் திரைப்பயணத்டில் மைல்கல்லாக விளங்குகிறது. ஒரு தசாப்தத்தின் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டால் ஆட்டோகிராப் நிச்சயமாக அதில் இடம்பெறும். அப்பேர்ப்பட்ட படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜயின் கால்ஷிட்டிற்காக நீண்ட காலம் சேரன் காத்திருந்ததாக அவரே தெரிவித்துள்ளார்.
மேலும் அப்படம் அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கதாநாயகனின் 4 வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் இப்படத்திற்கு விஜய் மில்டன், ரவி வர்மன் உட்பட மொத்தம் 4 ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பார்கள். தற்போதைய இளைஞர்கள் கொண்டாடிய பிரேமம் படத்திற்கு ஆட்டோகிராப் படமே முன்னோடி என்றும் கூறலாம்.
ஏ பிலிம் பை சேரன்
அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளிவந்த தவமாய் தவமிருந்து திரைப்படம் அப்பா மகன் உறவை துல்லியமாக எடுத்துக் கூறிய ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது வெளிவரும் படங்களில் நீளம் 3 மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விடும். ஆனால் இவரது படமும் மூணு மணி நேரத்திற்கும் மேல் இருந்தும் ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கத்தில் தங்களை மறந்து படத்தை ரசிப்பார்கள்.
2009 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த பொக்கிஷம் வெளியானது. காவியக் காதலுக்கு வழக்கமாக சொல்லும் உதாரணங்களை தள்ளிவைத்து விட்டு இனி லெனின், நதிராவைத் தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இலக்கியத்தின் வாயிலாக நடந்த ஒரு கிளாசிக் லவ் ஸ்டோரி என்றால் அதுதான். அந்த சமயங்களில் ஏ பிலிம் பை சேரன் எனப் போட்டிருந்தால் போதும் தாராளமாக படத்திற்கு சென்று விடலாம். அந்த அளவிற்கு சேரனின் படைப்பு மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
நடிகராக
இயக்குநாராக மட்டுமில்லாமல் நடிப்பிலும் சேரன் புகுந்து விளையாடி இருப்பார். சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்கள் இவரின் அற்புதமான நடிப்பிற்கு சிறந்த சான்றாகும். சேரன் பிக்பாஸ் சீசன் 3 லிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதில் இவரது சிறப்பான போட்டிக்கு ரசிகர்களால் பாராட்டப்பெற்றார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்றும் இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது உண்மையே. இவரின் பிறந்தநளிற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கிறது.
டாபிக்ஸ்