தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd T. Rajendhar: தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர்! டிரெண்ட் செட்டராக இருந்த டி.ராஜேந்தர்

HBD T. Rajendhar: தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர்! டிரெண்ட் செட்டராக இருந்த டி.ராஜேந்தர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 09, 2024 05:45 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், எடிட்டர் என பல்வேறு பரிணாமங்களில் வலம் வந்தவர் டி. ராஜேந்தர். சுருக்கமாக சொல்வதென்றால் தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டர், டிரெண்ட் செட்டராக இருந்து தனக்கென தனியொரு ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டவராக இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக இருந்த டி.ராஜேந்தர்
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக இருந்த டி.ராஜேந்தர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு தலை ராகம் மூலம் தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியாகவும், நடிகராகவும் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது கூட டி. ராஜேந்தர் தான் என்றாலும், இயக்குநர் டைட்டிலை தனது நண்பர் ஈ.எம். இப்ராஹிக்கும் விட்டுக்கொடுத்தார்.

இந்த படத்தின் ஹிட் காரணமாக அடுத்த வாய்ப்பு கிடைக்க வசந்த அழைப்புகள் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி, உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் என அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

அடுக்கு மொழி வசனங்கள், தனித்துவ நடிப்பால் கவனம் ஈரத்தி டி. ராஜேந்தர், டி.ஆர். என அழைக்கப்பட்டதுடன் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார்.

டி.ஆர். ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய பெருமை டி.ஆருக்கு உண்டு. அதன்படி 80களி இறுதியிலும், 90களின் தொடக்கத்திலும் சினிமாவில் கோலோச்சிய அமலா, நளினி, ஜீவிதா போன்றோர் இவரது அறிமுகங்கள் தான். கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவில் ஜொலித்த மும்தாஜை அறிமுகப்படுத்தியதும் டி.ஆர். தான்.

தமிழ் சினிமாவுக்கு புதுவித ட்ரெண்டை கொண்டுவந்தவர் டி.ஆர். ஒரு தலை காதல், கல்லூரி காதல், தங்கை பாசம் என்கிற விஷயத்தை சுற்றிய அமைந்திருக்கும் இவரது படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாச அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருந்தன. ஒரு கட்டத்தில் இவர் அமைந்த ட்ரெண்ட் செட்டிங்கே ஓவர் டோஸாக மாறி காலாவதியானது. இதனால் இவரின் படங்களும் வரவேற்பை பெறாமல் போயின.

திரையுலகில் பீக்கில் இருந்தபோதே நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்ட செட்டிலான டி.ஆருக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா என மூன்று பிள்ளைகள்.

டி.ராஜேந்தர் கம்பேக்

தாய் தங்கை பாசம் என்ற படத்தை 1995இல் இயக்கி வெளியிட்டார் டி. ராஜேந்தர். இதன் பின்னர் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி அரசியல் பக்கம் சென்ற டி, ராஜேந்தர், 1999இல் மோனிசா என் மோனோலிசா படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து சொன்னால்தான் காதலா படத்தில் தனது மகன் சிலம்பரசனை பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்தார். பின்னர் 2002இல் காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக்கியதோடு அவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் அளித்தார்.

கடைசியாக 2007இல் வெளியான வீராசாமி படத்தை இயக்கை நடித்தார். நடிகனாக 2017இல் வெளிவந்த கவண் படத்தில் நடித்தார்.

பிற படங்களுக்கு இசையமைப்பு

தனது படங்கள் மட்டுமில்லாமல் பிற படங்களுக்கும் டி.ராஜேந்தர் இசையமைத்துள்ளார். மோகன் நடித்த கிளிஞ்சல்கள், விஜயகாந்த நடித்த கூலிக்காரன் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதேபோல் பல இசையமைப்பாளர்களுக்கு பாடலும் பாடியுள்ளார்.

அரசியலில் டி.ஆர்.

திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் டி.ராஜேந்தர். அவரை 1991இல் கட்சியை விட்டு நீக்கியபோது தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கி, பின்னர் 1996இல் அதை மீண்டும் திமுகவுடன் இணைத்தார்.

2004இல் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து, 2007ஆம் ஆண்டில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட டி.ஆர். சினிமா, அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தாலும், சினிமா நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதையும், அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன் வைப்பதிலும் தவறாமல் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவை செதுக்கியதில் முக்கிய பங்காற்றிய கலைஞனாக இருந்து வரும் டி.ராஜேந்தர் 69வது பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்