பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்
பாரதிராஜாவின் அறிமுகமாக சினிமாவில் நடிக்க வந்த தென்னவன், பன்முக கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் தனக்கென இடம்பிடித்தவராக உள்ளார். விருதுகளை வெல்லாவிட்டாலும், மக்களால் கொண்டாடப்படும் திரை கலைஞனாக திகழ்கிறார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் தனது அற்புத நடிப்பால் முத்திரை பதித்து வரும் நடிகராக இருந்து வருபவர் தென்னவன். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகமாக சினிமாவில் கிராண்ட் என்ட்ரி கொடுத்தபோதிலும், பெரிதாக ஹீரோவாக ஜொலிக்காமல் போன இவர் தற்போது பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார்.
சினிமா பயணம்
கோவையை சேர்ந்த தென்னவன் சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்துள்ளார். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாத இவர் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஒருவராக உள்ளார். 1990இல் வெளியான என் உயிர் தோழன் படத்தில் நடிகர் பாபுவுடன், மற்றொரு ஹீரோவாக அறிமுகமானார். சிரித்த முகத்துடன் பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.
இந்த படத்தில் ராசாத்தி ராசாத்தி என்ற புகழ் பெற்ற பாடலில் சிரித்தவாறே தோன்றும் இவர், ஸ்டைலான நடனத்தாலும் கவர்ந்திருப்பார். முதல் படத்தில் ஹீரோவாக நடித்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாமல் போக கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்தார். 1992இல் வெளியான முதல் குரல், 1995இல் வேலுச்சாமி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
