தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  76 Years Of Chandralekha: அந்த காலத்து பிரமாண்டத்தின் உச்சம்..தமிழ் சினிமாவின் மைல்கல் 'சந்திரலேகா' வெளியான நாள் இன்று!

76 years of Chandralekha: அந்த காலத்து பிரமாண்டத்தின் உச்சம்..தமிழ் சினிமாவின் மைல்கல் 'சந்திரலேகா' வெளியான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Apr 09, 2024 07:46 AM IST

காலங்கள் உருண்டோடி 76 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தமிழ் சினிமாவின் பிரமாண்டத்தின் மைல்கல் சந்திரலேகா.

சந்திரலேகா
சந்திரலேகா (IMBb)

ட்ரெண்டிங் செய்திகள்

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், பிரமாண்ட காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

அந்த வகையில், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் வெளியான முதல் பிரம்மாண்ட படைப்பு என்றால் அது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரலேகா' என்ற திரைப்படம்தான். தென்னிந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவையே உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த படம் தான் சந்திரலேகா. இந்தப் படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கினார். எம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் வி.என்.ஜானகி உள்பட பலர் நடித்திருந்தனர். எஸ்.ராஜேஸ்வரராவ் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். எம்.டி பார்த்தசாரதி பின்னணி இசை அமைத்திருந்தார். கமல்கோஷ், கே.ராம்நாத் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

தமிழ்த் திரைப்படங்கள் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது 'சந்திரலேகா'. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், தன் சொத்துக்கள் அனைத்தையும் முதலீடு செய்தார் எஸ்.எஸ்.வாசன். ஏராளமாகக் கடன் வாங்கியும் இந்தப்படத்தை வாசன் உருவாக்கினார். சந்திரலேகா படத்தின் பட்ஜெட்டிற்கு அவர் ஒதுக்கிய தொகை 30 லட்சம் ரூபாய். இன்றைய மதிப்பில் ரூ.300 கோடி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். படத்தை தயாரிக்க மூன்றரை ஆண்டுகாலம் பிடித்தது. படத்தின் உச்சகட்ட காட்சியாக வந்த முரசாட்ட நடனத்தை படமாக்க மட்டுமே 5 லட்சம் ரூபாய் செலவானது. இதில் 400 நடனக்கலைஞர்கள் பங்கு கொண்டனர். இந்த ஒரு காட்சியை படமாக்கவே ஆறு மாத காலம் ஆயிற்று.

பிரமாண்ட அரங்கம், சர்க்கஸ் காட்சிகள், 50 யானைகள், 500 குதிரைகளுடன் போர் காட்சிகள், பிரமாண்ட முரசு நடனம், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், டிஆர்.ராஜகுமாரியின் பேரழகு என படம் பிரமாண்டம் காட்டியது. படத்தின் விளம்பரத்துக்கு அந்த காலத்திலேயே 5 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. அதுவரையில் ஒரு படத்துக்கு அதிகபட்சமாக இருபது பிரிண்ட் போட்டு ரிலீஸ் செய்வார்கள். சந்திரலேகா 120 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறையாக தினசரிகளின் முதல் பக்கங்களில் முழுப்பக்க விளம்பரம் செய்தது மட்டுமல்லாது ஒரே நேரத்தில் இலங்கை, மலேஷியா, ரஷ்யா, பர்மா போன்ற நாடுகளிலும் இப்படம் வெளியானது.

தமிழில் வெற்றி பெற்ற பின், சில மாற்றங்கள் செய்து, ஹிந்தியிலும் வெளியிட்டு வெற்றிக் கொடி நாட்டினார் வாசன். ஹிந்தி சந்திரலேகாவும் சக்கை போடு போட்டது. கோடிக்கணக்கில் வசூல் குவிந்தது. பிரமாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட சந்திரலேகா 1948 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 9 ஆம் நாளில் வெளியாகியது. காலங்கள் உருண்டோடி 76 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தமிழ் சினிமாவின் பிரமாண்டத்தின் மைல்கல் சந்திரலேகா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்