நடிப்பு, இசை, பாடகி.. சினிமாவில் பன்முகத்தை வெளிப்படுத்தும் சிட்டு! ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆண்ட்ரியா
HBD Andrea Jeremiah: நடிப்பு, இசை, பாடகி என சினிமாவில் பன்முக திறமையை வெளிப்படுத்தும் சிட்டாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. மேடை பாடகியாக பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் தோன்றி உலகம் சுற்றும் வாலிபியாக திகழ்கிறார்.

சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் மாடல், நடிகையாக தனது அழகு, நடிப்பு, திறமை மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் ஆங்கிலோ இந்திய பெண்ணாக இருந்து வரும் ஆண்ட்ரியா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடிகையாக ஜொலித்துள்ளார்.
நடிகையாகும் விருப்பம் இல்லை
சினிமாவில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா. சென்னையை அடுத்த அரக்கோணத்தை சேர்ந்த, பெரம்பூரில் உள்ள ஆங்கிலேோ இந்தியன் பள்ளியில் பள்ளிப்படிப்பும், உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
கல்லூரியில் பல்வேறு மேடை நாடகங்களில் தோன்றி தனது நடிப்பை திறமையை வெளிப்படுத்திய இவருக்கும், கல்லூரியில் படிக்கும்போது நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல், நடிகையாகும் விருப்பம் இல்லை என கூறி நிராகரித்துள்ளார்.
