காமெடியை செவி வழி விருந்தாக கொடுத்தவர்.. குடும்ப சினிமாக்களின் நாயகன்.. நாடகம், சினிமா என ஜொலித்த கலைஞன் எஸ்.வி. சேகர்
நாடகம், சினிமா என கடந்த நான்கு தசாப்தங்களாக கலையுலகில் ஜொலித்து வரும் கலைஞனாக இருப்பவர் எஸ்.வி. சேகர். தனது தனித்துவமான பஞ்ச், வார்த்தை விளையாட்டு காமெடிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், நடிப்பு தவிர அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.
மேடை நாடக நடிகர், தமிழ் சினிமாக்களில் ஹீரோ, குணச்சித்திர நடிகர், எம்எல்ஏ மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவராக இருப்பவர் எஸ்.வி. சேகர். 1980களில் இருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக கலப்பயணம் செய்து வரும் நடிகர் எஸ்.வி. சேகர் சமீப காலகமாக திரைப்படங்களில் நடிக்காத போதிலும், அரசியல் விமர்சகராக திகழ்ந்து வருகிறார்.
கலைப்பயணம்
தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட எஸ்.வி. சேகர் பெயரான சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் என்பதின் சுருக்கம் தான். சென்னை திருவல்லிகேணியில் தான் இவரது பள்ளி வாழ்க்கை சென்றது. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் டிப்ளமோ படித்த எஸ்.வி. சேகர், தனது தந்தை நடத்தி வந்த கற்பகம் கலா மந்திர் நாடக குழுவில் உதவியாளராக இணைந்தார். உதவியாளராக இருந்தாலும் நடிப்பு முதல் தொழில்நுட்ப சார்ந்த அனைத்து பணிகளையும் செய்து நாடகக் கலையை கற்று தேர்ந்தார்.
1974இல் நாடகப்பிரியா என நாடக குழுவை தொடங்கிய எஸ்.வி. சேகர் பல்வேறு காமெடி நாடகங்கள் மூலம் பிரபலமானார். சென்னையில் இயங்கி வந்த நாடக குழுக்களில் காமெடி பாணியிலான நாடகங்களை உருவாக்கிய ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
மறைந்த வசனகர்த்தாவும், நடிகர், திரைக்கதை ஆசிரிருமான கிரேஸி மோகன், எஸ்.வி. சேகருடன் இணைந்து நாடகப்பிரியா ட்ரூப்பில் தான் தனது கலை பயணத்தை தொடர்ந்தார். நாடகத்தில் உச்சத்தில் இருந்தபோதே பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். இருப்பினும் பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்தார்.
தனது நாடக ட்ரூப் மூலம் 24 நாடகங்களை அரங்கேற்றிய நாடகப்பிரியா குழு வார்த்தை ஜாலங்களை வைத்து காமெடி செய்வதில் புகழ் பெற்றதாக இருந்தது. காதுல பூ, வால் பையன், கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், எல்லாமே தமாஷ்தான் போன்ற பல எஸ்.வி. சேகரின் நாடகங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அத்துடன் இவரது நாடகங்கள் 80, 90களின் காலகட்டத்தில் ஆடியோ கேசட்களாகவும், ரேடியாக்களிலும் ஒலித்து அனைவரையும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தது. காமெடியை செவி வழி விருந்தாக கொடுத்தில் முக்கிய பங்கு எஸ்.வி. சேகருக்கு உண்டு.
குடும்ப சினிமாக்களின் நாயகன்
சினிமாக்களில் நடிக்க வந்த புதிதில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்த எஸ்.வி. சேகர் பின்னர் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோவாக உயர்ந்தார். அந்த காலாகட்டத்தில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த மற்றொரு கலைஞரான விசுவுடன் நடிப்பு ஏற்பட்டு, அவரது படங்களின் ஆஸ்தான நடிகரானார். விசு படங்கள் என்றாலே கண்டிப்பாக எஸ்.வி. சேகருக்கு ஏதாவதொரு கதாபாத்திரம் இருக்கும் என்கிற ரீதியில் பெரும்பாலான விசுவின் படங்களில் நடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அப்போது டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்தாலும் தனது நாடக பணியிலிருந்து முழுவதுமாக விலகி விடாமல் அதிலும் பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
90ஸ் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராக உருவெடுத்த எஸ்.வி. சேகர், அப்பா, மாமனார் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே இவரது நாடக குழுவும் ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் நாடகம் அரங்கேற்றி உலகப் புகழ் பெற்றது. காலை 7.47 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.49 வரை தொடர்ச்சியாக 8 நாடகங்களை நடத்தி லிம்கா புக் ஆஃப் ரெக்காட்டில் இடம்பிடித்தது. மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், பயணங்கள் முடிவதில்லை, கதாநாயகன், ஜீன்ஸ், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா உள்பட பல படங்கள் எஸ்.வி. சேகர் பெயரை சொன்னால் நினைவுக்கு வரும் படங்களாக உள்ளன.
அரசியல்வாதியாக எஸ்.வி. சேகர்
2006இல் அதிமுக கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் எஸ்.வி. சேகர். மைலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட இவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன் பின்னர் 2009இல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின் கட்சி நடவடிக்கையை மீற செயல்பட்டதாக அங்கிருந்தும் நீக்கப்பட்டு. 2009 இல் தென்னிந்திய பிராமண சங்கங்களின் கூட்டமைப்பை தொடங்கினார். 2013இல் பாஜகவில் இணைந்தார்.
இதன்பின்னர் 2015இல் தென் மண்டல சென்சார் குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசின் கலைவாணர் விருதை வென்றிருக்கும் எஸ்.வி. சேகர், இதுவரை தனது நாடகங்கள், காமெடி வசனங்கள், ஜோக்குகள் அடங்கிய 32 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சிறந்த காமெடியன் விருது, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சிறந்த புரோகிராம் புரொடியூசர் விருது வென்றவராகவும், நாடகம், சினிமா என கலையுலகில் ஜொலித்த மகா கலைஞனாக திகழ்பவருமான எஸ்.வி. சேகர் 74வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்