HBD Vijayalakshmi Navaneethakrishnan: "கொலுசு கடை ஓரத்திலே, சிங்சா சிங்சா.." நாட்டுப்புற கலையின் நாயகி.. வித்தைக்காரி
HBD Vijayalakshmi Navaneethakrishnan: கிராமிய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் மக்களை டிவி பெட்டியில் கட்டிப்போட்ட வித்தைக்காரியாக இருந்தவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு இணையாக மக்கள் பார்த்து ரசித்தது விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடிய தெம்மாங்கு பாடல்களே.

தமிழகத்தின் தொன்மையான கலையாக இருந்து வரும் நாட்டுப்புற இசை, பாடல்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த பாடகியும், இசைக்கலைஞராகவும் இருப்பவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புற இசை, பாடல்கள்,= போன்றவை தொன்றுதொட்டு இருந்து வந்தாலும் தொலைக்காட்சி பெட்டி அறிமுகமான புதிதில், அதன் வழியே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த கலையை கொண்டு சேர்த்த விதத்தில் நாட்டுப்புற நாயகியாக திகழ்கிறார். நெற்றியில் விபூதியுடன் சேர்த்து பொட்டு, சந்தனம் வைத்து, கழுத்தில் ஆன்மிக பாசி மாலைகள் அணிந்து கிராமத்து பெண் போல் சேலை அணிந்து எப்போதும் தோன்றுவது விஜயட்சுமியின் ஐகானிக் தோற்றமாகவே அமைந்துள்ளது.
இசை மீதான ஆர்வம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், இளம் வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
கிராமிய பாடல்களை இயல்பாக பாடுபவராக இருந்த இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நாட்டுபுற கலை பேராசிரியையாக பணிபுரிந்துள்ளார். நாட்டார் மக்களின் இயல், இசை, நாடகம் கலைவடிவங்களை கண்டறிந்து ஆராய்ச்சி ஈடுபட்டுள்ளார். பாட்டு தவிர நடனம், ஓவியம், சிறுகதை எழுதுதல் போன்றவற்றிலும் வல்லமை பெற்றவராக உள்ளார்.
கிராமிய ராமாயணம் உருவாக்கம்
தனது கணவர் நவநீதிகிருஷ்ணனுடன் இணைந்து 1970களில் மரபு சார்ந்த கலைகளான தெருக்கூத்து, ஆடல் பாடல், நாட்டுப்புற பாடல் போன்ற வாய்மொழி வழியாக உலாவி கொண்டிருந்த கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். பின்னர் கிராமிய கலைகளாக இருந்து வரும் பாவை கூத்து, ஏற்றப்பாட்டு, தாலாட்டு, கோலாட்டம், இசை நாடகம் உள்ளிட்டவற்றை தொகுத்து கிராமிய ராமாயணம் என்ற படைப்பை தனது கணவருடன் அரங்கேற்றி தமிழக மக்களின் உள்ளங்களில் நுழைந்தார்.
சூழ்நிலை பாரதம் என்ற தெருக்கூத்தை உருவாக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பச்சை கோவில் என்ற ஆடியோ கேசட்டை வெளியிட்டுள்ளார். விஜயலட்சுமி, அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தம்பதிகள் என்பதை காட்டிலும் அறிவுத் தோழர்களாக பயணித்துள்ளனர். இதன் மூலம் கிராமிய இசைக்கு தனித்துவ வடிவம் கொடுத்து அதை மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். இருவரும் இணைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடியோ கேசட், 300க்கும் மேற்பட்ட விடியோக்களும் வெளயிட்டுள்ளனர்.
மக்களை டிவி பெட்டியில் கட்டிப்போட்ட வித்தைக்காரி
கேபிள் டிவி வருகைக்கு முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பெரும்பாலான மக்களை கவர்ந்த முக்கிய நிகழ்ச்சியாக ஒளியும் ஒலியும் இருந்து வந்தது. இதற்கு இணையாக மக்கள் அதிகம் பார்த்து ரசித்ததாக விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடிய கிராமிய மற்றும் தெம்மாங்கு பாடலின் நிகழ்ச்சி அமைந்து இருந்தது. தோட்ட கடை ஓரத்திலே என்ற விஜயலட்சுமி கணீர் குரலில் ஒலிக்கும் பாடல் இன்றும் பலரின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் பாடலாக இருந்து வருகிறது.
இதை போல் எண்ணற்ற பாடல்களை துர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் தனது கணவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் குழுவினருடன் பாடி மக்களை டிவி பெட்டியில் கட்டிப்போட்ட வித்தைக்காரியாக இருந்துள்ளார். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடியிருக்கும் பாடல்களை ஒரு முறை ரீவிசிட் செய்து பார்த்தால் நிச்சயமாக வைப் மெட்டீரியல் கியாரண்டி என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறலாம்.
சினிமாவிலும் கலக்கிய விஜயலட்சுமி
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மண்ணின் கலைகளை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனை சேரும். 1990இல் வெளியான புது புது ராகங்கள் என்ற படத்தில் கதாநாயகி சித்தாராவின் தாயார் வேடத்தில் நடித்திருப்பார் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். இந்த படத்திலும் மாலை மயங்கிடுச்சு என்று புகழ் பெற்ற கிராமிய பாடலை பாடியிருப்பார்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய சேவைக்கு 2018இல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் கலைமாமணி விருதை அளித்துள்ளது. நாட்டுப்புற கலையின் நாயகியாகவும், பலருக்கு முன்னோடியாகவும் இருந்து வரும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்தநாள் இன்று.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்