சகுனி பட இயக்குநர் மரணம்.. பாவம்.. ஆசை ஆசையாய் படம் எடுத்து புரொமேஷன் பண்ண வந்தவருக்கா இந்த நிலை!
சகுனி, வீர தீர சூரன், குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் வெளிவந்த அரசியல் நையாண்டி படங்களின் பட்டியலைக் கேட்டால் முதலில் வரும் பெயர் அமைதிப்படை. அதற்கு அடுத்தபடியாக வரும் பெயர்களில் ஒன்று தான் சகுனி. இந்தப் படத்தில், கார்த்தி, ராதிகா, நாசர் ஆகியோர் பேசும் வசனங்கள் எல்லாம் எந்த கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
சகுனி எனும் அரசியல் நையாண்டி
2012ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில், கார்த்திகிற்கு ஜோடியாக பிரணிதா நடித்திருப்பார். இவர்களுடன் சந்தானம், ராதிகா, நாசர், பிரகாஷ் ராஜ், ரோஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் பின்னாளில் இந்தப் படத்தின் பேச்சு முக்கிய அங்கம் வகித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் தான் சங்கர் தயாள்.
சகுனி படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் இதையடுத்து, 2016ம் ஆண்டு விஷ்ணு விஷ்ணு விஷாலை வைத்து வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் பெரிதாக மக்களிடம் பேசப்படாததால் சில ஆண்டுகளாக படம் எடுக்காமல் இருந்தார்.
அடுத்த அதிரடி காட்டிய சங்கர் தயாள்
இந்த சமயத்தில் தான் இவர் நடிகர் யோகி பாபுவை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தினை இயக்கி வந்தார். இந்தப் படத்திலும் அரசியலை மையப்படுத்திய கருத்துகள் வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தார் இயக்குநர் சங்கர் தயாள். இந்நிலையில், இன்று அவர் நுங்கம்பாக்கத்தில் தனது வரவிருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்திற்கான புரொமோஷனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
புரொமோஷன் நிகழ்ச்சியில் நெஞ்சுவலி
பின், இந்நிகழ்ச்சிக்கு வந்த அவர், சில நிமிடங்களிலேயே நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன படக்குழுவினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சங்கர் தயாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
திரையுலகில் சோகம்
இவர் இறந்த செய்தி கேட்டு, திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 47 வயதே ஆன சங்கர் தயாள் சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2016ம் ஆண்டுக்கு பின், பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சங்கர் தயாள் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் வேலைகளைத் தொடங்கி பிஸியானார்.
தன் முழு உழைப்பையும் இந்தப் படத்தில் கொட்டிய அவர், படம் ரிலீஸ் ஆகும் முன்னரே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா ஸ்டணட் மாஸ்டர் மறைவு
முன்னதாக, பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமான செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியாக்கிய நிலையில் அடுத்த உயிரழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் கோதண்டராமன். இவர் கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கலகலப்பு என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல படங்களில் துணை வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டாபிக்ஸ்