Actor Jeyaselan: விஜய் சேதுபதியுடன் நட்பு.. புதுப்பேட்டையில் தனுஷ் அடியாள்.. மஞ்சள்காமலை நோய் பாதிப்பால் ஜெயசீலன் மரணம்
Actor Jeyaselan Died: தமிழ் சினிமாக்களில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜெயசீலன். அவரத திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன்களின் அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் ஜெயசீலன். இதையடுத்து 40 வயதாகும் நடிகர் உயிரிழந்துள்ளார்.
உடல்நல பாதிப்பால் மரணம்
நடிகர் ஜெயசீலனுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ஸ்டான்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சில நாள்கள் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் ஜெயசீலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் ஜெயசீலன் சினிமாக்களில் வில்லன்களில் அடியாள், ரவுடி என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாகவே உடல்நல பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக அவர் இருந்து வந்துள்ளாராம். சின்ன வேடங்களில் நடித்த போதிலும் மக்கள் மனதில் பதியும் விதமாக சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளப்படுத்தியுள்ளார்.
புதுப்பேட்டை படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஜெயசீலன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் புதுப்பேட்டை படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜெயசீலன்.
படத்தின் தொடக்கத்தில் அன்பு (பாலா சிங்) அடியாளாக வரும் இவர், பின்னர் கொக்கி குமார் (தனுஷ்) முக்கியமான கரங்களில் ஒருவராக தோன்றுவார்.
முதலில் தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் தோன்றும் ஜெயசீலன் பின்னர் அவர் சொல் பேச்சுக்கு கட்டுப்படும் அடியாளாக கடைசி வரை வந்திருப்பார். படத்தில் இவர் தனுஷை கலாய்க்கும் விதமாக "தொண்டைல ஆபரேஷன்", பின் இன்னொரு காட்சியில் "சுடு தண்ணிய மேல ஊத்திடுச்சுப்பா" போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம்.
விஜய் சேதுபதியுடன் நட்பு
புதுப்பேட்டை படத்தில் விஜய் சேதுபதியும், அன்பு அடியாள்களில் ஒருவராக தனுஷுடன் இணைந்து தோன்வார். அப்போது இருந்து ஜெயசீலனுக்கும், விஜய் சேதுபதிக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கேங்ஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் ஜெயசீலனும் அடியாள் கதாபாத்திரத்தில் தோன்றி கலக்கியிருப்பார். விஜய் சேதுபதியுடன், ஜெயசீலன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல் தளபதி விஜய்யின் தெறி படத்திலும் கிளாஸ் ரூமில் விஜய் ரவுடிகளை புரட்டி எடுக்கும் காட்சியில் பயமும், காமெடியும் கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக அந்த காட்சியில், பள்ளியில் ரவுடிகள் சரக்கடித்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சியில் அவர்களை நடிகர் விஜய் உள்ளே வந்து பாடம் எடுப்பது போலவும், வாத்தியார் ஸ்டூண்ட்ஸை பிரம்பால் அடிப்பது போல் ரவுடிகளை பிரம்பால் அடித்து விரட்டும் காட்சியில் நடிகர் ஜெயசீலன் "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" ரைம்ஸ் பாடுவதற்கு பதிலாக காமெடியாக வசனத்தை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.
அத்துடன் பிகில் படத்திலும் விஜய் குரூப்பில் இருக்கும் அடியாள்களுடன் ஒருவராக தோன்றியிருப்பார் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் ஏராளமான படங்களில் தோன்றி மனதில் பதித்த ஜெயசீலன் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்