தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்.. கடவுளை கண்முன் நிறுத்திய இயக்குநர்.. வெற்றி நாயகன் ஏ.பி. நாகராஜன் நினைவு தினம்
AP Nagarajan death anniversary: தமிழ் சினிமாவை மற்றவர்கள் கண்டு வியக்கும் அளவிற்கு கொண்டு சென்ற இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா பிரம்மாண்டத்தின் வழிக்காட்டி ஏ.பி. நாகராஜன் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன் தான் சுருக்கமாக ஏ.பி.நாகராஜன் என அழைக்கப்படுகிறார்.
சேலம் சங்ககிரி அருகே உள்ள அக்கம்மாபேட்டைதான் இவரது சொந்த ஊர். 1928ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்த அவர் இளம் வயதிலேயே நாடகங்களில் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குநராக ஆனார்.
சினிமாவில் இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. தனது ஏழாவது வயதிலேயே, டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" , திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே, அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. 1955ஆம் ஆண்டில் , 'நம் குழந்தை' மற்றும் 'நல்ல தங்காள்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1956இல் சிவாஜி கணேசன் நடித்த, 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுதியபோது, அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் அறிமுகமானார்.
'திருவிளையாடல்' படத்தில், ஏ.பி.நாகராஜன் 'புலவர் நக்கீரர்' வேடத்தில் நடித்தார். 'மாங்கல்யம்' படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் , நடிக்கவும் செய்தார். நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களை பெற்ற மகராசி, நல்ல இடத்து சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.
புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", "கந்தன் கருணை", "திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு, கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் சென்னையில் ஏப்ரல் 5ம் தேதி காலமானார். தமிழ் சினிமா வரலாற்றில் இவரது பெயரும், இவர் இயக்கிய படங்களும் என்றென்றும் நினைவில் இருக்கும்.
சிவாஜி 100வது படம்
நவரசங்களான அற்புதம், பயம், கருணை, கோபம், சாந்தம், அருவருப்பு, சிங்காரம், வீரம், ஆனந்தம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக சிவாஜி கணேசனின் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து சிவாஜிகளையும் ஒரே ப்ரேமில் தோன்ற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ப முகபாவனைகளை வெளிப்படுத்தி அற்புதமான நடிப்பில் நவரசத்தை கொண்டுவந்திருப்பார்.
நாகேஷ், மனோரமா, குட்டி பத்மினி, விகே ராமசாமி, டிபி முத்துலட்சுமி, சிகே சரஸ்வதி போன்ற பலரும் படத்தில் நடித்திருந்தாலும், சிவாஜி மற்றும் சாவித்திரியுமே படம் நெடுகிலும் நடிப்பால் ஆக்கிரமித்திருப்பார்கள்
சிவாஜி கணேசனின் 100வது படமான நவராத்திரியை ஏ.பி. நாகராஜன் இயக்கியிருப்பார். இந்தப் படத்துக்கு முன்னர் சிவாஜியை வைத்து வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை ஆகிய படங்களை இயக்கியிருப்பார் ஏ.பி. நாகராஜன். இதன் பின் தனது மூன்றாவது படத்திலேயே சிவாஜியின் நடிப்பாற்றலை கொட்டி கொடுக்கும் விதமாக அமைந்த இந்தக் கதையில் நடிக்க வைத்திருப்பார். இந்த காம்போ பின்னாளில் திருவிளையாடல் உள்பட பல்வேறு இதிகாச கதைகளையும், தில்லான மோகனாம்பாள் போன்ற ஹிட்களையும் கொடுத்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் இயக்கிய படங்கள் பின்வருமாறு:
நவராத்திரி, சம்பூர்ண ராமாயணம், மக்களை பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம், குருதட்சணை, பாவை விளக்கு, குலமகள் ராதை, விளையாட்டு பிள்ளை, வடிவுக்கு வளைகாப்பு, ராஜ ராஜ சோழன், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், திருவருட்செல்வர்.
தமிழ் சினிமாவை மற்றவர்கள் கண்டு வியக்கும் அளவிற்கு கொண்டு சென்ற இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா பிரம்மாண்டத்தின் வழிக்காட்டி ஏ.பி. நாகராஜன் என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்