Tamil Movies Rewind: தமிழர்களை இந்தி பேச வைத்த தமிழ் படம்.. மார்ச் 27ஆம் தேதி ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies Rewind: தமிழர்களை இந்தி பேச வைத்த தமிழ் படம்.. மார்ச் 27ஆம் தேதி ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்

Tamil Movies Rewind: தமிழர்களை இந்தி பேச வைத்த தமிழ் படம்.. மார்ச் 27ஆம் தேதி ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 27, 2025 05:30 AM IST

2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 27ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் காமெடி படம் வெளியாகி இருக்கிறது. அதேபோல் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரின் ஹிட் படங்களும் இந்த நாளில் வெளியாகி இருக்கின்றன.

தமிழர்களை இந்தி பேச வைத்த தமிழ் படம்.. மார்ச் 27ஆம் தேதி ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழர்களை இந்தி பேச வைத்த தமிழ் படம்.. மார்ச் 27ஆம் தேதி ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்

மார்ச் 27, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆருக்கு கமர்ஷியில் ரீதியாக வெற்றியாக அமைந்த பணம் படைத்தவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சமயத்தில் வெளியான ஆட்டோ ராஜா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாக்யராஜ் இயக்கி, நடித்து தமிழ் சினிமாவின் ஆல்டைம் பேவரிட் ரொமாண்டிக் காமெடி படமான இன்று போய் நாளை வா படமும் மார்ச் 27ஆம் தேதியில் தான் வெளியாகியுள்ளன. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

பணம் படைத்தவன்

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர், செளகார் ஜானகி, கேஆர் விஜயா, டிஎஸ் பாலையா, நாகேஷ், அசோகன், ஆர்எஸ் மனோகர் உள்பட பலர் நடித்து காதல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியிருந்த பணம் படைத்தவன் 1965இல் வெளியானது. படத்தின் ஸ்போர்ட்மேனாக தோன்றியிருப்பார் எம்ஜிஆர். வழக்கம்போல் எம்ஜிஆர் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இடம்பிடித்திருந்த இருந்த இந்த படம் சிறந்த விருந்தாகவே அமைந்தது. படத்தின் நாகேஷின் காமெடி அந்த காலகட்டத்தில் வெகுவாக பேசப்பட்டது.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் எனக்கொரு மகன் பிறப்பான், கண்போன போக்கிலே, மாணிக்க தொட்டில் போன்ற பாடல்கள் காலத்தில் அழியாத பாடல்களாக உள்ளன.

கண் போன போக்கிலே பாடல் காட்சி படமாக்கும்போது எம்.ஜி.ஆர் திடீரென படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். அந்த காட்சியில் சவுக்கார் ஜானகி அணிந்திருந்த உடை ட்ரான்ஸ்ப்ரண்டாக இருந்துள்ளது. லைட் போட்டால், அசிங்கமாக தெரிவது போல் உள்ளது. இதைக்கண்டு படப்பிடிப்பை நிறுத்திய எம்ஜிஆர், செளகார் ஜானகியிடம் நல்ல கேரக்டர்கள் நடித்து வரும் நீங்கள் இதுபோன்று ஆடை அணிந்து நடித்தால் இமேஜ் கெட்டுப்போய்விடும் என்று கூறினாராம். பின்னர் செளகார் ஜானகி உடை மாற்றிய பிறகே படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். எம்ஜிஆருக்கு கமர்ஷியல் ஹிட்டாக அமைந்த பணம் படைத்தவன் படம் 100 நாள்களுக்கு மேல் ஓடியது.

இன்று போய் நாளை வா

பாக்யராஜ் இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து காதல் கலந்த காமெடி படமாக 1981இல் வெளியான படம் இன்று போய் நாளை வா. ராதிகா, கள்ளாப்பட்டி சிங்காரம், காந்திமதி, செந்தில் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு பெண்ணை காதலிக்க மூன்று நண்பர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய திரைக்கதையுடன் அமைந்திருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

படத்தில் பாக்யராஜ் பிரண்ட் கதாபாத்திரத்துக்கு, ஹீரோயின் ராதிகா அப்பா இந்தி கற்றுக்கொடுக்கும் காட்சி மிகவும் பிரபலமானதுடன், காமெடி சரவெடியாக அமைந்தது. இந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து, இந்தி மொழியை தமிழ் மக்கள் எப்படி பார்த்தார்கள், அவர்கள் மீது எப்படி திணிக்கப்படுகிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த காட்சியை வைத்ததாக பாக்யராஜ் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்தி கற்றுக்கொடுக்கும் காட்சியில், பாக்யராஜ் பிரண்டாக வரும் ரமலி, "ஏக் கவுன் மே ஏக் கிசான் ரகதாத்தா" என பேசும் இந்தி வார்த்தை பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த இந்தி வார்த்தையாகவே மாறியது. தமிழ் சினிமாவின் கல்ட் அந்தஸ்தை பெற்ற இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகவும் மாறியது.

ஆட்டோ ராஜா

கே. விஜயன் இயக்கத்தில் விஜயகாந்த், ஜெய்சங்கர், சங்கிலி முருகன், தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடித்து காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்த சிறந்த ஜனரஞ்சக படமான ஆட்டோ ராஜா 1982இல் வெளியானது. கன்னடத்தில் இதே பெயரில் வெளியாகி ஹிட்டடித்த படத்தின் தமிழ் பதிப்பாக இந்த படம் விஜயகாந்த் நடிப்பில் உருவானது. கன்னடத்தில் ஹீரோயினாக நடித்த காயத்ரி, தமிழிலும் ஹீரோயினாக நடித்திருப்பார். படத்தில் தேங்காய் சீனிவாசன் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. விஜயகாந்த் ஆட்டோகரானாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருப்பார். சங்கத்தில் பாடாத கவிதை என்கிற பாடலை மட்டும் சங்கர் கணேஷ் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நட்புக்காக இளையராஜா இசையமைத்து ஜானகியம்மாவுடன் இணைந்து பாடியும் கொடுத்தார். இந்த பாடல் பலரால் ரசிக்கப்படும் சிறந்த மெலடி பாடலாக உள்ளது

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.