57 Years of Bama Vijayam: கூட்டு குடும்பத்தில் வரும் விருந்தாளியால் நிகழும் களேபரங்கள்! வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம்
வெறும் காமெடி படமாக இல்லாமல் அதன் மூலம் கூட்டு குடும்ப வாழ்க்கையையும், அதில் நிகழும் களேபரங்களையும் மிகவும் எதார்த்தமாக காட்டி பாமா விஜயம் படத்தை ரசிக்க வைத்திருப்பார்கள்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி தமிழில் சிறந்த கல்ட் கிளாசிக் காமெடி படமாக இருந்து வருகிறது பாமா விஜயம் திரைப்படம். டி.எஸ். பாலையா, மேஜர் சுந்தர் ராஜன், முத்துராமன், நாகேஷ், செளகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ, ஸ்ரீகாந்த், சச்சு என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
விருந்தாளியாக கூட்டு குடும்பம் ஒன்றில் நுழையும் சினிமா கதாநாயகியால் ஏற்படும் களேபரங்களும், குழப்பங்களும் தான் படத்தின் ஒன்லைன். மற்றவர்களின் பகட்டான வாழ்க்கையையும், சினிமா நடிகர், நடிகைகள் மீது கொண்ட மோகத்தால் பெறும் அவதிகளையும், குடும்பம் துன்பியல் படுவதையும் ப்ரேமுக்கு பிரேம் சிரிப்பலை வரவழைக்கும் விதமான திரைக்கதை, வசனத்துடன் உருவாக்கியிருப்பார்.
சீரியஸ் ஆன வேடங்களிலும், வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் பார்த்து பழகிய மேஜர் சுந்தர் ராஜன் இந்த படத்தில் இந்தி பண்டிட்டாக முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி சிரிக்க வைத்திருப்பார்.
டி.எஸ். பாலையாவின் மூன்று மகன்களாக வரும் மேஜர் சுந்தரராஜன், முத்துராமன், நாகேஷ் ஆகியோரும், அவரது மருமகள்களாக வரும் செளகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, காஞ்சனாவின் தங்கையாக வரும் சச்சு மற்றும் இவர்களின் பிள்ளைகள் என ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள்.
இவர்களின் வீட்டு அருகில் சினிமா நடிகையாக வரும் ராஜஸ்ரீ தங்க வர அடுத்தடுத்து நிகழும் சுவாரஸ்ய திருப்பங்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். நடிகையாக இருந்தாலும் பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் மிகவும் சிம்பிளாக இருந்து வரும் ராஜஸ்ரீயை இம்ரஸ் செய்ய செளகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி செய்யு வேலைகள் அனைத்தும் கலாட்டாவாகே இருக்கும்.
பெண்கள் இப்படியென்றால், இவர்களின் கணவன்மார்கள் ராஜஸ்ரீயிடம் பழக்கம் வைத்துக்கொள்ளும் விதமும் சரவெடி காட்சிகளாக அமைந்திருக்கும். இந்தி சொல்லிக்கொடுக்கிறேன் என மேஜர்சுந்தராஜனும், நடிகனாக ஆசை இருப்பதாக முத்துராமனும், தனது நிறுவனத்துக்கு ராஜஸ்ரீயை மாடல் ஆக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் நாகேஷும் லூட்டி அடித்திருப்பார்கள்.
இந்த களேபரங்களுக்கு நடுவில் நடிகை ராஜஸ்ரீ மேனேஜராக வரும் ஸ்ரீகாந்த், சச்சு இடையே காதல் மலர்வது மற்றொரு தனி செக்மெண்டாகவே இருக்கும்.
முதல் பாதி படம் காமெடி கலாட்டக்களுடன் செல்ல இரண்டாம் பாதியில் மொட்டை கடுதாசியால், டி.எஸ். பாலையா மகன்களின் ஒருவருக்கும் நடிகை ராஜஸ்ரீயிடம் இருக்கும் தொடர்பு என திடுக் திருப்பத்துடன் கொஞ்சம் சீரியஸாகவும் செல்லும். இறுதியில் கடிதம் எழுதியது யார், அதன் பின்னணியுடன் படத்தை முடித்திருப்பார்கள்.
இயக்குநர் பாலசந்தர் சினிமாவுக்கு வந்த புதிதில், பிரபல நடிகையாக இருந்த சவுகார் ஜானகி அவரது வீட்டுக்கு வந்தார். இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் அடைந்த உற்சாகமே பாமா விஜயம் படத்துக்கான மூலக்காரணமாக அமைந்தது.
இந்த படத்துக்கு அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுத, எம்எஸ் விஸ்வநாதன் இசையில் சூப்பர் ஹிட்டாகின. சிறந்த கிளாசிக் பாடலாகவும் எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல்வரிகளாகவும் இருந்து வரும் வரவு எட்டணா செலவு பத்தணா பாடல் இந்த படத்தில் தான் இடம்பிடித்திருக்கிறது. அத்துடன் அந்த காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடலாகவே இது அமைந்ததது.
கூட்டு குடும்பத்தில் நிலவி வரும் அமைதி, சந்தோஷம், பாசம் போன்றவை பகட்டு, வேண்டாத ஆசையால் என்னவெல்லாம் ஆகிறது என்பதை காமெடியுடன் எதார்த்தமாக காட்டிய பாமா விஜயம் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்