HBD Sriman: விஜய், கமல் படங்களில் ஆஸ்தான நடிகர்.. தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு உயிரை தரும் பிரண்ட்.. ஸ்ரீமன் பிறந்தநாள்
HBD Sriman: தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு உயிரை தரும் பிரண்ட் கேரக்டர்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் ஸ்ரீமன், விஜய், கமல் படங்களில் ஆஸ்தான நடிகராகவும் இருந்துள்ளார். குணச்சித்திரம் தவிர காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பில் கலக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், ஹீரோக்களின் பிரண்டாகவும் பல படங்களின் தோன்ற ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ஸ்ரீமன். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு என 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் பரத நாட்டியம் நன்கு கற்றி தேர்ந்த கலைஞராகவும் உள்ளார்.
சினிமா பயணம்
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரயில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் நடிகர் ஸ்ரீமன். இவரது அப்பா தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் பிரகாஷ் ரெட்டி. திரைப்பட தயாரிப்பாளர் மகன் என்பதால் பிறந்த 1972ஆம் ஆண்டிலேயே கொரடா ராணி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். தொடர்ந்து 1984 வரை பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தார். இதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
தமிழ் பட வாய்ப்பு
சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீமன், டான்ஸ் மாஸ்டர் கலாவிடன் இணைந்து டான்ஸ் மற்றும் பரதநாட்டியம் கற்றுகொண்டார். அப்போது தனது கண்ணில் பட்ட ஸ்ரீமன் ஆட்ட திறமையால் வியந்த இயக்குநர் கஸ்தூரி ராஜா தான் இயக்கிய மெளன மொழி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். தமிழ் என்ட்ரி கொடுத்த ஸ்ரீமனின் திறமை கண்டு வியந்த இயக்குநர் விக்ரமன் தான் இயக்கிய புதிய மன்னர்கள் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
தொடர்ந்து அருண் விஜய் நடித்த ப்ரியம், அஜித்தின் ராசி படங்களில் நடித்த ஸ்ரீமனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படமாக விஜய் நடித்த லவ் டுடே படம் அமைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தார். தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு உயிரை தரும் பிரண்ட் கேரக்டர்களில் பல படங்களில் தோன்றியுள்ளார்.
விஜய், கமல்ஹாசன் படங்களின் ஆஸ்தான நடிகர்
ஹீரோக்களின் பிரண்ட், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றி தனது திறமையை வெளிப்படுத்தும் நடிகராக இருந்து வந்தார் ஸ்ரீமன். விஜய் படங்களில் அவரது பிரண்ட் கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பில் கலக்கிய ஸ்ரீமன், விஜய்யின் படங்களின் ஆஸ்தான நடிகராகவே மாறினார்.
இதேபோல் தான் கமல்ஹாசனுடன் பம்மல் கே சம்மந்தம் படத்தின் ஹீரோயின் சிநேகாவின் அண்ணணாக தோன்ற காமெடியில் கலக்கியதோடு, பஞ்ச தந்திரம், நளதமயந்தி, உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு போன்ற படங்களில் நடித்தார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் மக்கள் மனதில் எளிதில் பதியும் விதமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் ஸ்ரீமன். விஜய்யுடன் இணைந்து லவ் டுடே படத்தில் தொடங்கிய இவரது பயணம், நெஞ்சினிலே. பிரண்ட்ஸ், வசீகரா, போக்கிரி, அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா, பைரவா, மாஸ்டர், வாரிசு வரை தொடர்ந்தது. விஜய்யின் 50வது படமான சுறா, ஸ்ரீமனுக்கு 100வது படமாகும்.
டான்ஸ், பைட், எமோஷனல் காட்சிகள் மட்டுமல்லாமல் காமெடி காட்சிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்துபவராக ஸ்ரீமன் இருந்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படத்தில் ஸ்ரீமன் சைலண்ட் காமெடி வயிற்றை புண்ணாக்கும் விதமாக அமைந்திருக்கும்.
மறக்க முடியாத படங்கள்
ஸ்ரீமன் நடிப்பில் மறக்க முடியாத படங்களும், அவரது கதாபாத்திரங்களும் ஏராளமாக உள்ளன. சேது படத்தில் விக்ரமின் பிரண்ட், ஆய்த எழுத்து படத்தில் மாதவனின் பிரண்ட், உன்னைப்போல் ஒருவன் படத்தில் மாஸ் ஹீரோவை இமிடேட் செய்த நடிப்பு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் அகண்டமுத்து என்ற கதாபாத்திரம் என சொல்லிக்கொண்ட போகலாம். சாரி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, உணர்ச்சிகள் போன்ற பி கிரேடு அடல்ட் படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். கர்லி ஹேர் ஸ்டைல், கொஞ்சம் கொழு கொழு என பப்ளியான தோற்றம், எதார்த்த நடிப்பு மூலம் சினிமாக்களில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமனுக்கு இன்று பிறந்தநாள்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்