ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு.. மீண்டு வருமா ஃபீனிக்ஸ்! வெளியாகும் முன்பே அடிமேல் அடி வாங்கும் வீழான்..
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடிக்கும் ஃபீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல ஆண்டுகள் நடித்தும் மக்கள் மத்தியில் கவனம் பெறாமல் இருந்த விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் உதவியால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து, அவர் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதும், துணை கதாப்பாத்திரம், வில்லன் கதாப்பாத்திரம் போன்றவற்றையும் ஏற்று நடித்து தற்போது சினிமா உலகின் புகழின் உச்சியில் இருக்கிறார்.
சூர்யா சேதுபதி
இந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்திலும், சிந்துபாத் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து தற்போது, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு எடுக்கும் ஃபீனிக்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்காக சூர்யா சேதுபதி பிரத்யேகமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை
இவர், இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிய சமயத்தில் இருந்தே பிரச்சனை தான். சமூக வலைதளங்களில் பலரும் சூர்யா சேதுபதி நடிக்க வருவதை எதிர்த்து பல கருத்துகளைக் கூறி வந்தனர். இந்நிலையில், பீனிக்ஸ் திரைப்படம் நாளை நவம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது.
ரிலீஸிற்கு ஒரு நாள் முன்பு வந்த அறிவிப்பு
ஆனால், இதனிடையே ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், ஃபீனிக்ஸ் வீழான் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், ரசிகர்களே, நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஃபீனிக்ஸ் படத்தின் வெளியீடு குறித்து இந்த செய்தியை தெரிவிப்பதில் வருத்தமடைகிறோம்.
ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படம் நவம்பர் 14ம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது, எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்படுகிறது.இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு குழுவாக அயராது உழைத்து வருகிறோம், உங்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தர, திருத்தப்பட்ட வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்போம்.
உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், புரிதலுக்கும், பொறுமைக்கும் நன்றி. ஃபீனிக்ஸ் முன்னெப்போதையும் விட வலுவாக உயரும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷன் என்டெர்டெயினாக உள்ள ஃபீனிக்ஸ்
இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் மற்றும் மூனர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் முன்னதாக வெளியிடப்பட்ட டீஸர் சரியான ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் இருக்கும் என உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் மற்றும் பிரவீன் கேஎல் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கையாள்கின்றனர்.
தொடர்ந்து தள்ளிப் போகும் ஃபீனிக்ஸ்
'பீனிக்ஸ்' படம் வெளியாவது தாமதமானதற்கு தணிக்கை குழுவின் சான்றிதழ் இன்னும் கிடைக்காதது ஒரு காரணம் என சிலர் கூறுகின்றனர்.ஆனால், பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும், கங்குவா படக்குழு ப்ரோமோஷனுக்காகவே அதிக செலவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஃபீனிக்ஸ் வீழான் படத்தின் ரிலீஸ் தள்ளி்ப் போவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் எகிறும் வசூல்
நாளை கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 2டியில் வெளியாகும் 974 காட்சிகளில் 33,720 டிக்கெட் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 60 லட்சத்து 20 ஆயிரத்து 79 ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
டாபிக்ஸ்