Kanguva First Single: வெளியானது முதல் சிங்கள்..! ஃபயர் பாடல்! தெறிக்கவிடும் பாரம்பரிய இசைக்கருவிகள்
சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ஃபயர் பாடல் வெளியாகியுள்ளது. தெறிக்கவிடும் பாரம்பரிய இசைக்கருவிகள் ஒலிக்கலவையுடன் அமைந்திருக்கும் இந்த பாடலின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளின் பதிப்பை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா. இந் படத்தில் சூர்யா இரண்டு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். வில்லான நடிக்கும் பாபி தியோல், இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
பேண்டஸி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். நட்ராஜ் சுப்பிரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லீ, ஆனந்தராஜ், கோவை சரளா உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
முதல் சிங்கிள்
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருள்செலவில் உருவாகி வரும் கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதையடுத்து விவேகா பாடல் வரிகளில் வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து தி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ என்ற பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது. ஃபயர் சாங் என்ற பெயரில் இந்த பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட இனக்குழு பெருமையை பேசும் விதமாக வரிகளை கொண்டிருக்கும் இந்தப் பாடல் தெறிக்கவிடும் பாரம்பரிய இசைக்கருவிகள் ஒலிக்கலவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை சூர்யாவின் ரசிகர்களை சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இரண்டு ஆண்டுக்கு பிறகு சூர்யா படம்
சூர்யா நடிப்பில் கடந்த 2022 மார்ச் மாதம் எட்டுத்திக்கும் துணிந்தவன் படம் வெளியானது. ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இதே ஆண்டில் கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கதாபாத்திரத்திலும், மாதவன் நடித்த ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் சூர்யாவாகவே சிறிய கேமியோ வேடத்திலும் தோன்றினார்.
இதில் விக்ரமின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர படத்தில் சூர்யாவின் மாறுபட்ட கதாபாத்திரம், பேண்டஸி கதைக்களம், விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற விஷயங்களும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் இருந்து ஆண்டுக்கு ஒரு படம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வந்த நிலையில், முதல் முறையாக 2023இல் இவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. எனவே கங்குவா மீது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் இடையேயும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
கங்குவா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது அவரது 44வது படமாகும். தற்போது இதனை Suriya 44 என அழைத்து வரப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
