16 ஆண்டு கனவு..பிரபஞ்சம் நடத்தி வைக்கும்..மீண்டும் ஜோதிகாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த சூர்யா
கங்குவா படத்தின் புரொமோஷனுக்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சுற்று வருகிறார் நடிகர் சூர்யா. ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், இந்த பிரபஞ்சம் அதை செய்யும் என நம்புவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக சூர்யா ஜோதிகா இருந்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு முன் சில படங்களில் ஜோதியாக இணைந்து நடித்திருக்கும் இவர்கள் திரையிலும் தங்களது கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசியாக சூர்யா - ஜோதிகா இணைந்து 2006இல் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார்கள். இதன் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் சூர்யா. பல்வேறு ஊர்களில் படத்தின் புரொமோஷன் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கனவாக இருக்கும் ஆசை
"ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. அதை நான் விரும்புகிறேன். விரைவில் நடக்கும் என நம்புகிறேன்.
எங்கள் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என எந்த இயக்குநரையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை. மாறாக அது தானாகவே நடக்க வேண்டும். ஏதாவதொரு இயக்குநர் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்குமாறு பொருதமான கதையை கொண்டு வர வேண்டும். இந்த பிரமபஞ்சம் அதை நடத்தி வைக்கும்" என்றார்.
இரட்டை வேடங்களை தவிர்க்கிறேன்
முடிந்த அளவில் இரட்டை வேடங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் 7 படங்கள் வரை இரட்டை வேடங்களிலும், 24 படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளேன். சில சமயங்களில் கனெக்ட் ஆகாத பட்சத்தில் நான் இயக்குநர்களிடம் வாக்குவாதங்களில் கூட ஈடுபட்டுள்ளேன்.
நான் என் அப்பா போல் இல்லை. அதேபோல் எனது தந்தையும் என்னை போல் இல்லை. ஆனால் கங்குவா படத்தில் ஒரு டைம்லைன் இருக்கிறது. நீங்கள் படம் பார்க்கும் போது இந்த கதாபாத்திரத்தை ஒரே நடிகர் ஏன் நடிக்கிறார் என்பதை புரிந்து கொள்வீர்கள்" என்றார்.
கங்குவா கதை
கங்குவா படத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். அங்கு 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறுகிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது.
கங்குவாவின் உலகம் நெருப்பை கடவுளாக கும்பிடுகிறார்கள். அதேபோல் ரத்தத்தை கடவுளாக வணங்கிறார்கள் உதிரனின் உலகம். நீரை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை பேண்டஸி, ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
கங்குவா ரிலீஸ்
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா படம் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இந்த படம் மூலம் பாலிவுட் இளம் நாயகி திஷா பதானி, பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் தமிழில் அறிமுகமாகிறார்கள். படம் தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அத்துடன் வட இந்தியாவில் மட்டும் 3000 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற பெருமையை கங்குவா பெற இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.