விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய தருணம்.. சூர்யா ரியல் லைஃப் ஹீரோ - பாடகர் கிரிஷ் சொன்ன உண்மை விஷயம்
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய சூர்யா ரியல் லைஃப் ஹீரோ. அவர் செய்ததை நானாக இருந்தால் செய்திருக்க மாட்டேன் என சிங்கம் 3 ஷுட்டிங் சமயத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார் பாடகரும், நடிகருமான கிரிஷ்.
சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் தோல்வியை தழுவியது அவரது ரசிகர்களை அப்செட் ஆக்கியது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ரெட்ரோ படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சூர்யா மீது விமர்சனம்
கங்குவா ரிலீஸின் போது படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், சூர்யா மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர் கடைசியாக ஹிட் கொடுத்த பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சூரரைபோற்று, ஜெய்பீம் படங்கள் வரவேற்பை பெற்றாலும் அவை நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தன.
இந்த சூழ்நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சூர்யா ரியல் லைஃப்பில் வெளிப்படுத்திய ஹீரோயிசம் குறித்து பாடகரும், நடிகருமான கிரிஷ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கிஸில் ஒளிபரப்பாகும் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனிடமான உரையாடலில், விபத்தில் சிக்கிய நபரை சூர்யை காப்பாற்றிய பரபரப்பான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாடர் கிரிஷ் கூறியிருப்பதாவது, "சிங்கம் 3 ஷூட்டிங் நெல்லூரில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து நானும் சூர்யாவும் காரில் சென்றுகொண்டு இருந்தோம். நான் தான் ட்ரைவ் செய்தேன். எனது அருகே சூர்யா அமர்ந்திருந்தார். குவாரி ஒன்றில் இருந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் ஒருவர் தலையில் அடிபட்டு கீழே கிடந்தார். அருகில் பெண் ஒருவர் அழுதுகொண்டிருந்தார். சுற்றி பலரும் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.
யோசிக்காமல் ரியாக்ட் செய்த சூர்யா
படார் என நிறுத்து வண்டியை என கூறிய சூர்யா, உடனே கீழே இறங்கினார். அவரை பார்த்தை அண்ணா என்ன இறங்கிடீங்க என்றேன். எங்கள் பின்னால் வந்த கார்களில் இருந்த உதவியாளர்கள் உள்பட அனைவரும் கீழே இறங்கினார்கள். அடிப்பட்டவர்கள் அருகில் சென்று பார்த்தார்.
சொன்னா நம்பமாட்டீங்க. அவர் அப்போது ஜாக்குவார் ப்யூட் ஒயிட் நிறத்தில் கார் வைத்திருந்தார். அந்த காரில் அடிபட்டவரை மெதுவாக தூக்கி வைத்து ஹாஸ்பிடலுக்கு சென்றார். உடனே போன் அடித்தார். அந்த பகுதியில் அருகில் இருந்த சிறந்த மருத்துவமனை ஆக சிம்ஸ் ஹாஸ்பிடல் திருப்பதியில் தான் இருந்தது. நண்பர்களுக்கு போன் செய்து சிம்ஸ் ஹாஸ்பிடலில் மருத்துவர்களை ஏற்பாடு செய்தார். நான்கு டாக்டர்களை எப்படியோ மருத்துவமனைக்கு வரவழைத்து, விபத்துக்குள்ளானவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினார். கண்டிப்பாக இப்படியொரு விஷயத்தை நான் செய்திருக்க மாட்டேன்.
விபத்தில் சிக்கிய கார்த்தி
இந்த சம்பவம் பற்றி சூர்யா பின்னர் ஒருநாள் சொல்லும்போது, "எப்படி க்ரீஷ் இதையெல்லாம் விட முடியும். அப்படி விட்டிருந்தால் என் தம்பி கார்த்தி உயிரோடவா இருந்திருக்க மாட்டான். கார்த்தி கல்லூரி படிக்கும்போது கோடம்பாக்கம் பிரிட்ஜ் அருகே விபத்தில் சிக்கினார். தலையில் பயங்கர அடிப்பட்டது. யாரோ அப்போது பார்த்துவிட்டு இவர் சிவக்குமார் மகன் என்று கூறி, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். கார்த்தியும் உயிர் பிழைத்தார்.
அன்னைக்கு அவர் அப்படி யோசிக்கலைன்னா கார்த்தி உயிரோடவே இருந்திருக்க மாட்டார். இதேபோல் தான் சூர்யா காப்பாற்றிய நபர் பற்றி விசாரித்து பார்த்தால் விபத்து நடந்த அடுத்த வாரத்தில் அவரது மகளுக்கு கல்யாணம் வைத்திருந்தார். எனவே இதை கண்கூடாக பார்த்தவன் என்கிற ரீதியில் சூர்யா மதிக்கப்பட வேண்டியவர்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.