Manoj Bharathiraja: கண்கலங்கிய பாரதிராஜா.. கைகளை பற்றிக்கொண்ட சூர்யா - மனோஜ் பாரதிராஜவுக்கு அஞ்சலி
இயக்குநர் இமயம் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்

Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. இதையடுத்து சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருக்கும் மனோஜ் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத்தொர்ந்த நடிகர் சூர்யா, நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜா கைகளை பற்றிக்கொண்ட சூர்யா
மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சூர்யா, அவர் உடல் அருகே அமர்ந்திருக்கு பாரதிராஜாவிடம் சென்றார். பின் பாரதிராஜாவின் கைகளை பற்றிக்கொண்ட சூர்யா, ஆறுதல் தெரிவித்தார். மகனின் இழப்பால் வாடி போயிருந்த இயக்குநர் பாரதிராஜா, சூர்யா பார்த்ததும் கண்கலங்கினார்.
பிரபலங்கள் அஞ்சலி
முன்னதாக, தளபதி விஜய், உயிரிழந்த மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "நடிகர் பாரதிராஜாவின் மகனும், எனது ஆத்ம தோழருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அன்பு மகனை இழந்து துயரத்தில் வாடும் பாரதிராஜா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்திருந்தார்
இதைப்போல் நடிகை குஷ்பூ, இயக்குநர் வெங்கட் பிரபு உள்பட பிரபலங்கள் பலரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இயக்குநர் அவதாரம்
கடந்த 1999இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர், சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுடனான ரஜினிகாந்தின் பல காம்பினேஷன் காட்சிகளில் மனோஜ் பாரதிராஜா தான் டூப் போட்டு நடித்துள்ளார்.
இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் சுசிந்திரன் எழுதியதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
மனோஜ் பெயரில் பாரதிராஜா 'மனோஜ் கிரியேஷன்ஸ்’ என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சாதுர்யன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நந்தனா என்பவருடன் காதலில் விழுந்த மனோஜ், அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
மனோஜுக்கு ஆர்த்திகா, மதிவதினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மனோஜ் பாரதிராஜாவுக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது.

டாபிக்ஸ்