‘பாகுபலி ட்ரெயினை மிஸ் பண்ணது எனக்கு அவமானம் சார்.. ஆனா’ - மேடையில் ராஜமெளலியிடம் வாய்ப்பு கேட்ட சூர்யா
“பாகுபலி ட்ரெயினை மிஸ் பண்ணது எனக்கு பெரிய அவமானம். ஆனால் நான் இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்” - மேடையில் ராஜமெளலியிடம் வாய்ப்பு கேட்ட சூர்யா
கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தை புரமோட் செய்வதற்காக, படக்குழு ஊர், ஊராக சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் படக்குழு தெலுங்கில் படத்தை புரோமோட் செய்வதற்காக சென்று இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமெளலி வந்திருந்தார்.
அந்த நிகழ்வில் பேசிய சூர்யா, “குடும்பம் மிகவும் முக்கியம். ராஜமெளலி சார்.. நீங்கள் எங்களுக்காக இங்கே வந்திருப்பது எங்களுக்கான ஆசீர்வாதம். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உங்களது நேரத்தை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரர் அவரது வேலையை நன்றாக செய்யும் போது, அதனை பார்க்கும், அவருக்கு கீழ் இருக்கும் அவர்களது தம்பிகள் மற்றும் குடும்பத்தினர் சந்தோஷமடைவார்கள். அப்படித்தான் நீங்கள் எங்களுக்கு.. நீங்கள்தான் எங்களுக்கான பாதையை காண்பித்தீர்கள். நான் இப்போதும் சொல்கிறேன்.. பாகுபலி ட்ரெயினை நான் மிஸ் செய்து விட்டேன்.. அதை அவமானமாக கருதுகிறேன். பராவாயில்லை. நான் இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்.
வால்பேப்பரில் உங்கள் போட்டோ
ஒரு நாள் நிச்சயமாக அதே போன்ற மற்றொரு ட்ரெயினை மிஸ் செய்யாமல் பிடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். பொதுவாக நாம் நம்முடைய மொபைல் போனில் நம்முடைய மனைவி போட்டோ அல்லது குழந்தைகள் போட்டோ, அல்லது தெய்வத்தின் போட்டோவை வால் பேப்பராக வைப்போம்.
ஆனால், இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவரது மொபைல் போனில் நீண்ட காலமாக உங்களது போட்டோவைத்தான் வால் பேப்பராக வைத்திருக்கிறார். இந்தப்படம் உங்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக எடுக்கப்பட்டது. கங்குவா படத்தை உங்களின் எந்த படைப்புடனும் நாங்கள் ஒப்பிட விரும்பவில்லை. காரணம், எவரெஸ்ட் மலை ஒன்று இருக்கிறது. அதற்கான பாதை எங்கிருக்கிறது, எப்படி செல்ல வேண்டும் என்று தெரிந்தால், அதில் ஈசியாக ஏறி சென்று விடலாம். ஆனால், பாதை போடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று; அதனை அமைத்துக்கொடுத்தது நீங்கள்தான்” என்று பேசினார்.
கங்குவா திரைப்படம்
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படம் வரக்கூடிய நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 3500 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் கங்குவாவும் ஒன்று. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.
கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?:
கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.
கங்குவாவால் அதை மாற்ற முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார். இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை நேரு திரையங்கத்தில் வருகிற 26ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்