Poovellam Kettuppar: யுவனின் அட்டகாசமான இசை, சூர்யா - ஜோதிகா காதல் கெமிஸ்ட்ரி! சிறந்த ஃபீல் குட் படம்
யுவனின் அட்டகாசமான இசை, சூர்யா - ஜோதிகா காதல் கெமிஸ்ட்ரி, காமெடி என சிறந்த ஃபீல் குட் படமாக பூவெல்லாம் கேட்டுப்பார் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
படங்களின் இயக்குநரான வசந்த் இயக்கத்தில், காதலும் காமெடியும் கலந்த ட்ராமா பாணியில் உருவாகியிருந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தியதோடு சூர்யா - ஜோதிகா ஆகியோருக்கு பேன்ஸ்களை உருவாக்கிய படமாக அமைந்திருந்தது.
சூர்யா - ஜோதிகா ஜோடியின் முதல் படம்
தமிழ் சினிமாவின் புதுமுகங்களாக இருந்த சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் படமாக இருந்த பூவெல்லாம் கேட்டுப்பார், குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக அமைந்தது. இப்படம் நகைச்சுவை, காதல், இரு இசையமைப்பாளர்களுக்கு இடையே உள்ள முரண்கள் எனப் பல உணர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.
காதல், பேமிலி செண்டிமெண்ட் கதை
தமிழ் சினிமாவில் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களாக வலம் வரும் விஜயகுமார் - நாசர் ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்ட பிரிகிறார்கள். விஜயகுமாரின் மகனான சூர்யாவும், நாசரின் மகளாக ஜோதிகாவும் கல்லூரி மாணவர்களாக முதலில் மோதல், பின்னர் காதல் என உறவாடுகிறார்கள்.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதற்கு பிரிந்த தனது தந்தைகளை மீண்டும் சேர்க்க இருவரும் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். இறுதியில் சுபம் என முடியும் க்ளைமாக்ஸ் காமெடி, காதல் பேமிலி, செண்டிமெண்ட் என அனைத்து கலந்த கலவையாக ருசியுடன் விருந்து படைத்திருப்பார் இயக்குநர் வசந்த்.
வசத்தின் திரைக்கதைக்கு பக்க பலமாகவும், ரசிக்க வைக்கும் விதமாக கிரேசி மோகனின் வசனங்கள் இடம்பிடித்திருக்கும். அம்பிகா, கரண், வடிவேலு, டெல்லி கணேஷ், கோவை சரளா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
சினிமாவை பின்னணியாக கொண்ட கதைக்களமாக இருப்பதால் இயக்குநர் அகத்தியன், நடிகர்கள் ராம்கி, பார்த்திபன், மனோரமா, நடிகை குஷ்பூ, இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் உள்பட பலர் ரியலான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்கள்.
சூர்யா - ஜோதிகா டேட்டிங்
நேருக்கு நேர் படத்துக்கு பிறகு வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த இரண்டாவது படமாக பூவெல்லாம் கேட்டுப்பார் அமைந்திருந்தது. அதேபோல் ஜோதிகா தமிழில் ஹீரோயினாக தோன்றியது இந்த படத்தில் தான். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சூர்யா - ஜோதிகா ஆகியோர் டேட்டிங்கில் இருப்பதாக அப்போது ஊடகங்களில் வெளியான வதந்தி பின்னர் 2006இல் இருவரும் திருமணம் செய்து கொண்டபோது உண்மையானது.
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு திருப்புமுனை
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களையும் பழநிபாரதி எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். இது அவரது இசையமைப்பில் வெளியான நான்காவது படமாகம், யுவனின் திறமையை தமிழ் திரையுலகுக்கு எடுத்துக்காட்டிய படமாகவும் அமைந்தது.
படத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். அதிலும் சென்யோரிட்டா சிறந்த பெப்பி பாடலாகவும், ஹரிஹரன் பாடிய இரவா பகலா அவரது சிறந்த மெலடியாகவும் திகழ்கிறது.
அதேபோல் சுடிதார் அணிந்து, பூவ பூவ பூவே போன்ற பாடல்களும் இன்று வரையிலும் அதிகம் பேரால் ரசிக்கும் பாடலாக உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
சுவாரஸ்யம் மிக்க திரைக்கதை, காமெடி, காதல் காட்சிகள் என பேமிலி ஆடியன்சை கவரும் விதமாக சிறந்த ஃபீல் குட் படமாக நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டும் ஆனது. புதுமுக நடிகர்களாக இருந்த சூர்யா - ஜோதிகாவுக்கு நல்ல முகவரி கொடுத்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. அதாவது சூர்யா - ஜோதிகா ஜோடியின் பயணமும் வெள்ளி விழா ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்