Rajinikanth: நாங்கெல்லாம் அப்பவே அப்படி.. சாண்டாளன் வேஷம் முதல் சிறந்த நடிகர் விருது வரை.. பள்ளி குறித்து ரஜினி உருக்கம்
Rajinikanth: பெங்களுருவில் இருக்கும் ஏபிஎஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது பள்ளி படிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறப்பு முன்னாள் மாணவர் நிகழ்வில், பல்வேறு நினைவுகளை கன்னட மொழியில் பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவின் உலக அடையாளமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 முதல் தற்போது வரை 50 ஆண்டுகளாக சினிமாவில் உச்ச நடிகராக ஜொலித்து வருகிறார். தனது கலைப்பயணத்தில் பொன்விழா ஆண்டை எட்டியிருக்கும் ரஜினிகாந்த் இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஹீரோவாக திகழ்கிறார்.
பெங்களருவில் பிறந்த ரஜினிகாந்த் நிஜ பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதும், அங்குதான் அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பயின்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்து விஷயம்தான்.
ரஜினிகாந்தின் பள்ளி, கல்லூரி படிப்பு
பெங்களுருவில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஏபிஎஸ் பள்ளியில் கன்னட மொழிப்பாடத்தை தேர்வு செய்து படித்தார் ரஜினிகாந்த். இதையடுத்து தனது பள்ளி நாள்களை நினைவு கூறும் விதமாக விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த். ஏபிஎஸ் பள்ளியின் சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான நிகழ்ச்சி குறித்து பேசியிருக்கும் ரஜினிகாந்த் தனது பள்ளி கால நினைவலைகளை உணர்வுபூர்வமாக பேசியுள்ளார்.
அந்த விடியோவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, "நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் பாங்காக்கில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததில் பெருமைப்படுகிறேன்.
நான் தான் கிளாஸ் லீடர்
முதலில், நான் கவிப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்க வந்தேன். அப்போது கன்னட மீடியத்தில் சேர்ந்தேன். அப்போது நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். நன்றாக படிக்கும் மாணவனாகவும் இருந்தேன். அப்போது நான் தான் கிளாஸ் லீடர். பாடங்களில் 98 மதிப்பெண்கள் பெற்றேன்.
நன்றாக படித்து வந்த என்னை எனது அண்ணன் ஏபிஎஸ் பிள்ளியின் ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்தார். முழுக்க முழுக்க கன்னட மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில மீடியத்துக்கு மாற்றப்பட்ட பின், முதல் பெஞ்ச் மாணவனான நான் கடைசி பெஞ்சில் மாணவனாக மாறினேன்.
பெயில் ஆகிவிட்டேன்
படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் மூழ்கினேன். ஏபிஎஸ் உயர்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் எனது சிரமத்தை புரிந்துகொண்டு என் மீது தனி கவனம் செலுத்தி பாடம் கற்பித்தனர். எப்படியோ ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றேன். ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெயில் ஆகிவிட்டேன். ஆசிரியர்கள் எனக்கு சிறப்பு கவனம் செலுத்தி, டியூஷன் எடுத்து மீண்டும் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றேன்.
குறைவான மதிப்பெண்கள் பெற்ற போதிலும் ஏபிஎஸ் கல்வி நிறுவனத்தின் கல்லூரியில் சேர்ந்தேன். பல்வேறு காரணங்களால், கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
சிறந்த நடிகனாக கிடைத்த விருது
என் பள்ளி நாட்களில், நான் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு, வகுப்பில் சக மாணவர்களின் வெவ்வேறு கதைகளைச் சொல்வேன். நான் பார்த்த படங்களை என் நண்பர்கள் முன் நடித்துக் காட்டுவேன். நான் இப்படி செய்வது ஆசிரியர்கள் பலருக்கும் தெரியும். இதன் காரணமாக அவர்கள் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்தனர். ஆதி சங்கரர் சண்டாளர் நாடகத்தில் நான் சண்டாளனாக நடித்தேன்.
எங்களுடைய நாடகம் பரிசு பெற்றது. அதற்காக கேடயமும் வழங்கப்பட்டது. அன்று எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது நடிப்பதே எனது தொழில் ஆகிவிட்டது. முடிந்தவரை பல குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரி. அதுதான் பெருமை. ஏபிஎஸ் கட்டிடம், மைதானம், நாங்கள் அங்கு கழித்த நாட்கள், நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், இவை எதையும் மறக்க முடியாது.
நான் அந்தப் பள்ளிக்குச் சென்றபோது, என் வீடு ஹனுமான் நகரில் இருந்தது. ஒரு பெரிய கணேஷ் கோயில் இருந்தது. ஒரு பெருமையான தருணம்" என்று உணர்வு பொங்க பேசியுள்ளார்.
கூலி திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு சினிமா ஹீரோ நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்பட பலரும் நடித்து வருகிறார்கள். படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்