அதிகார முகத்தின் முன் உண்மையைப் பேசுகிற ஒரு கலை வடிவமே வீதி நாடகம் - மனம் திறக்கும் நாடக கலைஞர் பிரளயன்!
நாடகம் என்றால் காமெடி என்றோ.. கருத்து என்றோ தனியாக ஒன்று இல்லை. வீதி நாடகம் என்பது செய்தி சொல்கிற சாதனம் அல்ல.. அது பண்பாட்டு ரீதியாக நடக்கும் ஒரு குறுக்கீடு. அதிகாரத்தின் முகத்திற்கு முன் உண்மையைப் பேசுகிற ஒரு கலை வடிவம் தான் வீதி நாடகம். காமெடியும் கதையாடலோடு பின்னிப்பிணைந்தது.
நாடகங்கள் பலவிதம். வீதி நாடகம் ஒரு விதம்.. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் செல்போன்களின் ஆதிக்கத்தால் சமூக வலை தளங்களில் காட்டும் ஆர்வத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில் கூட குழந்தைகள் காட்டுவதில்லை. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அப்படித்தான்.. தொலைக்காட்சிக்கே இந்த நிலை என்றால் பாரம்பரிய கலைகளின் நிலைமை பற்றி யோசித்தால் கொஞ்சம் அதிருப்தி வரத்தான் செய்கிறது. அப்படி இருக்கும் காலத்தோடு எதிர்நீச்சல் போட்டு தன்னை தக்க வைத்து கொண்டிருக்கும் ஒரு கலை வடிவம் தான் வீதி நாடகம். இந்த கலையை உயிர்ப்புடன் வைத்துகொள்ள விரல் விட்டு எண்ணும் அளவிலே மனிதர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வீதி நாடகத்திற்காக தன்னை ஒப்புவித்த முக்கிய ஆளுமைகளில் ஒருவரும், சென்னை கலைக்குழுவின் நிறுவனருமான பிரளயனிடம் பேசிய போது வீதி நாடகத்தின் தொடக்கம் முதல் இன்றைய நிலை வரை பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீதி நாடகத்தின் தோற்றம் எப்படி இருந்தது.. வீதி நாடகம் பொழுது போக்கிற்கானதா?
வீதி நாடகத்தின் வரலாற்றை பாதல் சர்கார், சப்தர்ஹாஸ்மி போன்ற முக்கியமான நாடக கலைஞர்கள் துவக்கினர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்த பணி முடிந்து வீடு திரும்பும் போது ஆலைகளின் முன்புற கேட்டில் தங்களின் பிரச்சினைகளை நாடமாக தொழிலாளர்களே கலைஞர்களாக மாறி நடத்தினர். அது தொழிலாளர்களை அணி திரட்டவும் பயன்பட்டது. லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞர் I am singer.. I am the song.. என்றார். அதுபோல தொழிலாளர்கள் தங்களுடைய கதைகளில் தாங்களே நடித்தனர். இதனால் வீதி நாடகம் பொழுது போக்கிற்காக அல்ல.. அதிகாரத்திற்கு முன் அடித்தட்டு மக்கள் தங்களது தேவைகளை பேச வைத்த ஒரு வலுவான ஆயுதம். அதில் மனித இயல்புகளான, கோபம், சலிப்பு, பகடி, சோகம் என அனைத்தும் வெளிப்படும்.
வீதி நாடகம் என்ற வடிவத்தில் உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ஆரம்பத்தில் வீதி நாடகம் என்று தேர்வு செய்தெல்லாம் வேலை பார்க்கவில்லை. ஆரம்பத்தில் நாடகம் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் எல்லோரையும் போல வழக்கமான மேடை நாடகங்கள் தான் செய்து கொண்டிருந்தோம். அப்போது வீதி நாடகம் குறித்து ஒரு அறிவு இருந்ததுதான். ஆனால் அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு தோன்றவில்லை. அப்போது தான் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன், சென்னை கலைக்குழுவுடன் சேர்ந்து ஒரு கலைப்பயணம் நடத்த ஆசைப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் நாடகங்கள் போட்டோம். அதன் பின்னர் தான் வீதி நாடகத்தின் மீது உள்ள ஈர்ப்பு மற்றும் தேவையை உணர்ந்து அதில் தொடர்ந்து செயல்பட ஆரம்பித்தோம்.
வீதி நாடகம் என்றாலே முற்போக்கு கருத்துக்கள் அதிக அளவில் இருக்கும் என்பதால் அரசு ஆதரவு தருவது இல்லை என்பது குறித்த உங்கள் பார்வை?
அரசும் தொண்டு நிறுவனங்களும் தான் இப்போது அதிகமாக வீதி நாடகங்களை நடத்துகின்றனர். வீதி நாடகத்தின் தன்மை முழுமையாக மாறி உள்ளது. அபூர்வமாக ஒரு சில குழுக்கள் தான் தற்போது வீதி நாடகம் போடுகின்றனர்.
அறிவொளி இயக்கத்தின் வெற்றியில் வீதி நாடகத்தின் பங்கு குறித்த உங்கள் கருத்து?
அறிவொளி இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது வீதிநாடகங்கள் தான். நாங்கள் திரும்ப திரும்ப சொல்வோம் அறிவொளி இயக்கம் ஒரு ரயில் வண்டி என்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற எஞ்சின் வீதிநாடக கலை பயணம்தான். நாங்கள் போட்ட நாடகங்கள் மக்கள் மத்தியில் அறிவொளி இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றது.
நாடகங்கள்.. புராதன நாடகங்களில் கூட காமெடியை மையமாக வைத்து தான் மக்களை கவர்கின்றனர். வீதி நாடகங்களின் உயிர் நாடியாக நீங்கள் எதை சொல்வீர்கள்.. காமெடியா.. கருத்தா!
நாடகம் என்றால் காமெடி என்றோ.. கருத்து என்றோ தனியாக ஒன்று இல்லை. வீதி நாடகம் என்பது செய்தி சொல்கிற சாதனம் அல்ல.. அது பண்பாட்டு ரீதியாக நடக்கும் ஒரு குறுக்கீடு. அதிகாரத்தின் முகத்திற்கு முன் உண்மையைப் பேசுகிற ஒரு கலை வடிவம் தான் வீதி நாடகம். காமெடியும் கதையாடலோடு பின்னிப்பிணைந்தது. பார்வையாளர்களை எழுச்சி ஊட்டுவதற்கும், ஆற்றல் கொடுப்பதற்குமானதே பகடி எனலாம். அதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வுக்கான கலை வடிவம் தான்
வீதிநாடகத்தின் மாற்றம் குறித்த உங்கள் பார்வை!
எந்த ஒரு கலையும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்கள் உள் வாங்க வேண்டியது அவசியம். அதுபோல சின்ன சின்ன மாற்றங்களை வீதி நாடகமும் உள்வாங்கி உள்ளது என்றார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்