Star Movie Review: ‘ஸ்டார் படம் தாங்குமா? தாங்காதா?’ நேருக்கு நேர் உடைத்து பேசும் விமர்சனம் இது தான்!
Star Movie Review: படத்தின் ஒன்லைன் சின்னதாக இருந்தாலும், அதனை தன்னுடைய திரைக்கதையால் முடிந்த மட்டும் சுவாரசியமாக மாற்றி இருக்கிறார் இளன். முதன்மை கதா பாத்திரங்கள் மட்டுமல்லாது, துணை கதாபாத்திரங்களுக்கும் அளவான இடம் கொடுத்து கவனிக்க வைத்ததிற்கு தனி பாராட்டுகள்.
பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில், இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ஸ்டார். படத்தின் ட்ரெய்லரும், யுவனின் இசையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதையின் கரு என்ன?
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கலையின் தாகமும், அதற்கு உற்றதுணையாக நிற்கும் தந்தையின் அன்புமே படத்தின் படத்தின் ஒன்லைன்.
கலையாக நடித்திருக்கும் கவினின் நடிப்பில் அவ்வளவு நிதானம். பள்ளி, கல்லூரி, வேலை, கனவிற்கான தேடல், குடும்பம் என ஆல் ரவுண்டராக நடிப்பை வெளிப்படுத்த அத்தனை களங்கள். அனைத்திலும் அவர் சிக்ஸர் அடிக்க முயன்று இருந்தாலும், சில இடங்களில் அவை பவுண்டரிகளாக மட்டுமே சென்று இருக்கின்றன.
கலையின் அப்பாவாக வரும் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், ஒவ்வொரு காட்சியிலும் அன்பை நடிப்பால் பொழிந்து இருக்கிறார். பாண்டியனின் மனைவியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
முதல் பாதி கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அழகால் கவர்கிறார். இரண்டாம் பாதி, கதாநாயகியாக வரும் அதிதி நடிப்பால் கவர்கிறார். (சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்கலாமே அம்மணி). துணை கதாபாத்திரங்கள் அனைத்தும் நெஞ்சில் நிற்கின்றன.
எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
படத்தின் ஒன்லைன் சிறியதாக இருந்தாலும், அதனை தன்னுடைய திரைக்கதையால் முடிந்த மட்டும் சுவாரசியமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் இளன். கவின் போன்ற இளம் நடிகருக்கு அனைத்து ஏரியாக்களிலும் நடிக்க களம் அமைத்து கொடுத்து இருந்தது சிறப்பு.
முதன்மை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது, துணை கதாபாத்திரங்களுக்கும், அளவான இடம் கொடுத்து, கவனிக்க வைத்ததிற்கு தனி பாராட்டுகள். ஆனாலும், சில காட்சிகளில் அவர் ஒன் மோர் கேட்டு இருக்க வேண்டும்.
குறிப்பாக, மும்பையில் அவமானப்பட்டு அப்பாவிடம் கவின் டெலிபோனில் பேசும் காட்சியில், கவினின் நடிப்பில் ஒரு கட்டத்திற்கு மேல் செயற்கைத்தனம் தெரிய ஆரம்பித்து விட்டது. அதே போல கவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது, அவரது அம்மாவான கீதா கைலாசம் வெளிப்படுத்திய எமோஷனிலும், ஒருக்கட்டத்திற்கு மேல் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது.
முதல் பாதி கதை ஒரு கலைஞனின் கனவு, அதை நோக்கி வைக்கும் முறையான முயற்சிகள் என சுவாரசியமாக சென்ற நிலையில், இரண்டாம் பாதி அதன் நேர்கோட்டில் இருந்து விலகியது போல தெரிந்தது.
குறிப்பாக கவின் முடங்கி இருக்கும் காட்சிகளில் ஆழம் இல்லாமை, அதிதியின் கிரிஞ்ச் காட்சிகள் கதையை சோதித்தோடு நம்மையும் சோதித்து விட்டன. படத்தை இவர்கள் அனைவரும் ஒரு பக்கம் தாங்கி நின்றால், இன்னொரு பக்கம் முழுவதையும், தன்னுடைய இசையால் தாங்கி நிற்கிறார் யுவன்.
பாடல்களில் பெரிதாக ஸ்கோர் செய்யா விட்டாலும், பின்னணி இசையில் தான் அப்போதும், இப்போதும், எப்போதும் யுவன்தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். முதல் பாதியை சுவாரசியமாக கொண்டு சென்ற இளன், இரண்டாம் பாதியில் கோட்டை விட்டது படத்தின் பெரும் பலவீனம். அதிலும் ஸ்கோர் செய்திருந்தால் இந்த ஸ்டார் ஜொலித்திருக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்