Squid Game season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Squid Game Season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!

Squid Game season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 03, 2025 09:52 AM IST

இரண்டாவது சீசன், இந்திய ஃபார்மெட்டில் இருந்ததாக தெரிந்தது. குறிப்பாக, முதல் 2 எபிசோடுகள் சிவா படம் போலவும், அடுத்த 2 பாகங்கள் ஹரி படம் போலவும், கடைசி எபிசோட் சங்கரின் இந்தியன் 2 போலவும் தான் இருந்தது.

Squid Game season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!
Squid Game season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!

முதல் சீசனில், ஸ்க்விட் கேமில் பங்கேற்று அனைவரும் உயிரிழந்த நிலையில், பல பில்லியன் வெற்றிப் பணத்துடன் வெளியேறிய லீ ஜங்-ஜே, மீண்டும் அந்த விளையாட்டை தடுத்து நிறுத்தி, அதன் தலைவனாக அறியப்படும் மாஸ்டர் என்பவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். அதற்காக, தனக்குக் கிடைத்த பணத்தில், ஒரு டீம் ரெடி செய்து, ஆயுதப்பயிற்சியோடு மறைமுகமாக தயாராகிக் கொண்டிருக்கிறார் லீ ஜங்-ஜே. 

முதல் சீசனும்.. இரண்டாவது சீசனும்..

இதற்கிடையில், முதல் சீசனில் தன் அண்ணனை தேடி தீவுக்கு வந்து, குண்டடிப்பட்டு, கடலில் விழுந்த போலீஸ்காரரான வை ஹா-ஜூன், மீண்டும் தன் சகோதரரை தேட, சம்மந்தப்பட்ட தீவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த இரு தேடலும், ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் இணைகிறது. லீ ஜங்-ஜே மற்றும் வை ஹா-ஜூன் இணைந்து, விளையாட்டு குழுவின் மாஸ்டரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். இதற்காக மீண்டும் லீ ஜங்-ஜே தீவுக்குச் செல்ல முடிவு செய்கிறார். கூட்டுத் திட்டம் போட்டு உள்ளே செல்லும் அவர்களின் திட்டம் நிறைவேறியதா? ஸ்க்விட் கேம் நடந்ததா? போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டார்களா? அதை முழுமை பெறாமல் முடித்து, மூன்றாவது சீசனுக்கு காத்திருக்க வைத்திருப்பது தான், சீசன் 2 தந்திருக்கும் தாக்கம்.

முதல் பாகத்தில், கொரியன் சீரிஸின் ஃபார்மட் கொஞ்சமும் குறையாமல், பரபரப்பாகவும், டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், இரண்டாவது சீசன், இந்திய ஃபார்மெட்டில் இருந்ததாக தெரிந்தது. குறிப்பாக, முதல் 2 எபிசோடுகள் சிவா படம் போலவும், அடுத்த 2 பாகங்கள் ஹரி படம் போலவும், கடைசி எபிசோட் சங்கரின் இந்தியன் 2 போலவும் தான் இருந்தது. 

எடிட்டிங்கில் செய்ய நினைத்த மாயாஜாலத்தை, திரைக்கதையில் செய்திருக்கலாம். இந்த சீரிஸின் பிரதானமே விளையாட்டு தான். ஆனால், இரண்டாவது சீசனில் அந்த விளையாட்டை பார்க்கவே 3 எபிசோட் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. முதல் அரை மணி நேரத்தில் கதைக் களத்தை செட் செய்து விட்டு, தீவுக்குள் பயணித்திருக்கலாம். 

மாறாக, முன்னாள் வெற்றியாளர், அண்ணனை தேடும் போலீஸ்காரர், வேலையில் சிரமப்படும் இளம் பெண் என மூன்று பேரைச் சுற்றி, மூன்று எபிசோடுகளை இழுத்தது, இந்த சீசனின் பெரிய மைனஸ். மேலும், ட்விஸ்ட் அனைத்துமே யூகிக்கும் அளவில் தான் இருந்தது. அதுவும், அனைத்து ட்விஸ்ட்களும். ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முதல் சீசனின் இரண்டாம் பாகத்தை, கொரிய கோடாரியால் கொத்தி கொலை செய்திருக்கிறார்கள் என்று கூட கூறலாம். 

சுமாரான விளையாட்டுகளாக இருந்தாலும், அதன் பின் நடக்கும் கொலைகள் கோரமாக இருக்கிறது. உண்மையில் அது மட்டும் தான், இந்த சீசனின் பயங்கரம். மற்றபடி, முதல் சீசனன் பல ஃபார்மெட், இந்த சீசனில் எடுபடாமல் போனதற்கு முக்கிய காரணம், 3வது எபிசோடுக்குப் பிறகு, ஹீரோ யார்? என்கிற குழப்பமும் ஒரு காரணம். நிறைய கதாபாத்திரங்கள், திரைக்கதையை ஆக்கிரமித்து, தனித்துவமான ஒருவரை பின்பற்ற முடியாமல் போக காரணமானது. 

இந்திய திரைப்படங்களுடன் ஏன் ஒப்பிடலாம்?

இப்போது, ‘இந்தியன் 2’ லெவல் க்ளைமாக்ஸ் எபிசோடுக்கு வரலாம். ஏன் இந்தியன் 2 என்கிறோம்? புரட்சி செய்ய நினைத்து துப்பாக்கியோடு புறப்படும் ஹீரோ, இறுதியில் ஜெயித்தாரா? தோற்றாரா? என்று காட்டாமல், 2025ல் மூன்றாவது சீசன் வருகிறது என்று முடிக்கிறார்கள். அது இந்தியன் 3 மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அப்படி தான், இந்த சீரிஸூம், இன்னும் வெளிவராத இந்தியன் 3 உடன் ஒப்பிடப்படுகிறது. இது முதல் சீசனுடன் ஒப்பிடும் போது, அறம் இல்லாத செயலாக தெரிகிறது. அதாவது ஒரு கதையை முடித்து, அதிலிருந்து கதையை தொடங்குவது தான் நியாயமானது. அது தான் அனைவரும் செய்வது. இங்கு, சொத்தமாக ஷூட் செய்துவிட்டு, அதை சரி பாதியாக பிரித்து, இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று சொன்னால், அது சீசன் என்பதற்கு பதில் எபிசோடாகத் தான் இருக்க முடியும். இந்தியன் 2 இதை தான் செய்தது. இந்த ஸ்க்விட் கேம் சீசன் 2 அதை தான் செய்திருக்கிறது. 

விளையாட்டுகளின் பின்னணியில் வரும் இசை, உண்மையில் பிரமாண்டம். கேமரா வேலை, கிட்டத்தட்ட இயக்குனர் சிவா படத்தில் வரும் ஒளிப்பதிவாளர் வெற்றியை நியாபகப்படுத்துகிறது. அதே கேமரா, மூன்றாவது எபிசோடிலிருந்து இயக்குனர் ஹரி படத்தின் கேமரா போல மாறி, பாய்கிறது. அதே பாய்ச்சல் திரைக்கதையில் இல்லை என்பது தான், இந்த சீசனின் சோகம். 

முதல் சீசனின் தாக்கம் அதிகமாக இருந்திருந்தால், அவர்கள் இந்த சீசனில் ஏமாற்றத்தை சந்திக்கலாம். மற்றபடி, ஒரு தேடுதல் பயணம் முற்று பெறாமல் முடிந்ததைத் தவிர, பரபரப்பு இல்லாமல் இல்லை. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.