தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Story On Solomon Pappaiahs Birthday

HBD Solomon Pappaiah: கிராமத்துச் சிறுவன் முதல் உலக அறிந்த பேச்சாளர் வரை: சாலமன் பாப்பையாவின் பிறந்த தினப் பகிர்வு!

Marimuthu M HT Tamil
Feb 22, 2024 06:47 AM IST

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சாலமன் பாப்பையா பிறந்த தின சிறப்புப் பகிர்வு
சாலமன் பாப்பையா பிறந்த தின சிறப்புப் பகிர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த சாலமன் பாப்பையா?: 1936ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ஆம் தேதி, மதுரை மாவட்டம் சாத்தங்குடியில், சுந்தரம் ஐயா அவர்களுக்கும் பாக்கியம் அம்மா அவர்களுக்கும் 9ஆவது மகனாகப் பிறந்தவர், சாலமன் பாப்பையா. 4 சகோதரர்கள், 4 சகோதரிகள் என பெரிய குடும்பம். நெசவுதான் பிரதானத் தொழில். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் குடும்பத்தின் ஆணிவேர். ஆனால், முதல் உலகப்போர் வந்த சமயம் நெசவுத் தொழில் நலிந்து போக, மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட ’மதுரா கோட்ஸ்’ ஆலையை நம்பி மதுரைக்கு குடிபெயர்ந்தது சாலமன் பாப்பையாவின் குடும்பம்.

இளமை முழுக்க வறுமையின் மறுபக்கமாகவே இருந்தது. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை படித்தவர். அதன் பின்னர் டிஎல்சி பள்ளியில் 6ஆம் வகுப்பு வரை படித்தார். இதனையடுத்து அமெரிக்கன் கல்லூரி ஹைஸ்கூல் எனப்படும்  உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை முடித்தவர். அந்தப் பள்ளி சார்புடைய கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் வரை படித்து முடித்தார்.

படிப்பு முடிந்து அரசாங்க உத்யோகத்திற்கு தேர்வு எழுத செங்கல்பட்டில் வருவாய்த்துறையில் பணியும் கிடைத்தாயிற்று; ஆனால், நண்பர்கள் வற்புறுத்தி முதுகலைத் தமிழ் படிக்க உதவியதால், அந்தப்படிப்பை தியாகராஜர் கல்லூரியில் படித்து முடித்தார், சாலமன் ஐயா. படிப்பு முடிந்ததும் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். 

மேடைகளின் வாயிலாகவே அறியப்பட்ட அவரின் பேச்சார்வத்திற்கு அடித்தளம் பள்ளியில் நடந்த பேச்சுப்பயிற்சி வகுப்புகளே என்கிறார், சாலமன் பாப்பையா. அவர் அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் திருவள்ளுவர் கழகத் தலைவராக இருந்து, தன் பேச்சு வளத்தை வளர்த்தெடுத்தார். பின், அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அப்போது இவர் நடத்திய பேச்சுக்கலை பாடமானது இவரை பிரபலமாக்கியது. குறிப்பாக, எட்டையபுரம் பாரதி விழாவே, சாலமன் பாப்பையாவை கொல்கத்தா வரை சென்று பேசும் அளவுக்கு பிரபலபடுத்தியது என ஒரு பேட்டியில் சிலாகித்தார் சாலமன் பாப்பையா அவர்கள்!

12,000-யிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசியிருக்கும் ஐயா அவர்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்திருக்கிறது. ஆனால், பொருளாதாரச் சூழ்நிலையால் அந்த ஆசை கைகூடாமல் போனது. ஜெயா பாயை திருமணம் செய்த சாலமன் ஐயா அவர்களுக்கு, விமலா சாலமன் என்ற மகளும் தியாகமூர்த்தி என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், மகள் விமலா, ஜப்பான் மொழியில் கற்றுத்தேர்ந்து ஆசிரியராக இருக்கிறார்.

இலக்கியம், மேடை மட்டுமல்ல.. சினிமாவிலும் கால்பதித்த சாலமன் பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய, பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு சிறுவேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சிவாஜி படத்தில் இடம்பெற்ற ‘அங்கவை சங்கவை’ காமெடியில் இவருக்கு நற்பெயரையும், கெட்ட பெயரையும் ஒருசேர பெற்றுத்தந்தது. பின், நிறம் சார்ந்த காமெடியில் தான் நடிக்கவைக்கப்பட்டதை நினைத்து வருந்தினார், சாலமன் பாப்பையா.

ஐயாவின் சாதனைகளைப் பாராட்டி, மாநில அரசு ‘கலைமாமணி’ விருதும்; மத்திய அரசு ’பத்மஸ்ரீ’ விருதும் வழங்கி கெளரவித்தது.மேலும் தான் பயின்ற மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.20 லட்ச ரூபாயை நன்கொடையாக கடந்தாண்டு வழங்கினார் சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் பேரார்வம் கொண்டும் பெரும் தமிழ்த்தொண்டும் ஆற்றி வரும் சாலமன் பாப்பையா ஐயாவை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்! 88ஆவது பிறந்த நாள் வணக்கங்கள் ஐயா!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்