17 Years of Veerasamy: 'வைச்சிருக்கேன் மச்சான்' - வீராசாமி எனும் 90’ஸ் கிட்ஸ்களின் காவியம்
படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு பெரிய அளவில் தீனி போட்டதும், 90’ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்த திரைப்படம், வீராசாமி. ஒரு சீரியஸான படம் காமெடியான கதையறிவோம்.
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் டி.ஆர்., என அழைக்கப்படும் டி.ராஜேந்தர். இவரது படங்களில் டைட்டில் கார்டுகள் மிக குறைவாக இருக்கும்; காரணம், பெரும்பாலான பணிகளை இவரே செய்து விடுவதால், மொத்த கிரெடிட்டும் இவருக்கே வரும்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல், பாடகர், நடிப்பு என ஒரே ஆளாக, ஒட்டுமொத்த பணிகளையும் செய்து முடிப்பதில் டி.ஆர்.,யை மிஞ்ச வேறு யார்?
அவரது மகன் சிம்பு, உச்சத்தில் இருந்து கொண்டிருந்த 2007ஆம் ஆண்டு, திடீரென ஒரு அறிவிப்பு வந்து, தமிழ் திரையுலகையே அது புரட்டிப் போட்டது. ஆம், வீராசாமி படத்தின் அறிவிப்பு தான் அது.
2002ல் அவர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்திற்குப் பின் டி.ஆர்.,யின் புதிய பட அறிவிப்பு அது. தான் அறிமுகப்படுத்திய மும்தாஜ், அப்போது அவுட்ஆஃப் ஃபார்மில் இருந்த சமயம். அவர் தான் வீராசாமியில் டி.ஆர்.,யின் ஹீரோயின்.
வீராசாமி என்கிற சுயேச்சை எம்.எல்.ஏ., தனது ஏரியாவில் மக்களுக்கு ஹாட் ஃபாதர். ஊழலைக் கண்டால் துடிப்பவர் அல்ல, துவம்சம் பண்ணுபவர்; அது ஒரு ஏரியா. மற்றொரு புறம், தன் தங்கை மீது பாசம் அல்ல, அதில் கால் வைத்தால் வழுக்கும் அளவிற்கு நேசமானவர்; இது ஒரு புறம்.
மற்றொன்று, சரசு என்கிற பெயரில் வரும் மும்தாஜ் உடன் காதல் அல்ல, காதலை கடந்த கா…தல்! இப்படி மூன்று ஜானரில் படம், பாத்ரூமில் விழுந்த சோப்பு போல, சறுக்கிக் கொண்டே போவார், வீராசாமி என்கிற டி.ஆர். ‘லவ் வேணுமா… இருக்கி, ஃபைட் வேணுமா… இருக்கி… ரொமான்ஸ் வேணுமா… இருக்கி… டி.ஆர்.,யின் அக்மார்க் லுக் வேணுமா… அதுவும் இருக்கி’ என தில் ராஜூ ஸ்டைலிலும் சொல்லலாம்.
திடீரென ஒரு 150 பேரை அடித்து துவைப்பார், அடுத்த நொடியே திடீரென சரசு உடன் நடு ஹாலில் நட்டுவாக்கிளி மாதிரி சுற்றிக்கொண்டிருப்பார். அப்புறம் அடுத்த 5ஆவது நிமிடத்தில் தங்கையோடு தரை தளம் மூழ்கும் அளவிற்கு அழுது கொண்டிருப்பார். இந்த மூன்றுக்கும் மூன்று விதமான பி.ஜி.எம்., மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆனால், லிரிக்ஸ் ஒன்று தான். அது ‘ஏலேலே வீராசாமி…’ என்பது தான். இந்த ஒரே வரி தான், சண்டை, காதல், பாசம் என மூன்றுக்கும் மாறி மாறி பயன்படுத்தப்படும். டோன் மட்டும் மாறும்.
ஊழலை எதிர்க்கும் வீராசாமியை அவர் தங்கையை வைத்து பழிதீர்க்க நினைக்கும் எதிரிகள். தன் பாசமா? பணியா? என்றால் வீராசாமிக்கு பணி தான் பெரிசு. எல்லா சூழ்ச்சிகளையும் முடித்து இறுதியில் தன் தங்கைக்கு அவள் விரும்பியவனை மணம் முடித்து வைத்து இறுதியில் மூச்சையும் முடிப்பார் வீராசாமி. அடுத்த நொடியே அவர் மடியில் தன் மூச்சை விடுவார் சரசு. அதே ‘ஏலேலே வீராசாமி…’ சோகப்பாடலுடன் படம் முடியும்.
இது தான் ‘காலத்தால் அழியாத’ காதல் காவியம், வீராசாமியின் கதை. இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது வீராசாமி. டி.ராஜேந்தர் இயக்கி தயாரித்து நடித்து வெளியான இப்படத்தில் ஹீரோயினாக மும்தாஜூம், தங்கையாக ஷீலா கவுரும் மற்றும் தங்கையின் நாத்தனாராக மேக்னா நாயுடுவும் வில்லத்தனத்தில் நடித்திருப்பர்.
படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு பெரிய அளவில் தீனி போட்ட திரைப்படம். எப்போது சீரியஸ் மோடில் இருந்தாலும் இப்படம் கே டிவியில் போட்டாலும் ஜாலி மோடில் குடும்பத்துடன் ரசித்து மகிழலாம். ஒரு சீரியஸ் திரைப்படம் காமெடியாகி ஹிட்டானது எல்லாம் அரிதாகப் பூ பூப்பதுபோல் தான். அப்படி ஒரு பூ, வீராசாமி.
இன்னும் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக தவம் புரியும் எத்தனையோ 90’ஸ் கிட்ஸ்களில் நானும் ஒருவர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்