8 years of Visaranai: உண்மையை படம் எடுத்த வெற்றிமாறன்.. ஆஸ்கர் வரை சென்ற விசாரணை
விசாரணை திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
எழுத்தாளர் எம்.சந்திரகுமாரின் லாக்கப் நாவலை அடிப்படையாகக் கொண்டு, வெற்றிமாறன் எழுதி இயக்கி 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், விசாரணை. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இப்படத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ், கிஷோர், பிரதீஷ் ராஜ், சிலம்பரசன் ரத்னசாமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ஆகியப் பிரிவுகளில் 63ஆவது தேசிய விருதினை வென்றது. மேலும் 2016ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
விசாரணை படத்தின் கதை என்ன? ஆந்திராவின் குண்டூரில் உள்ள பூங்காவில் தங்கி, அன்றாட வேலையை செய்து வரும் தமிழ்த்தொழிலாளர்கள், பாண்டி, முருகன், அஃப்சல் மற்றும் குமார். ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை மூடி மறைப்பதற்கு வழி தேடிய ஆந்திர காவல்துறை, குண்டூரில் பணி செய்யும் நான்கு தமிழர்களைப் பிடித்து, அவர்களை திருட்டு வழக்கில் சிக்கவைக்க முயற்சிக்கிறது. ஒப்புக்கொள்ளும்வரை அடிமேல் அடி அடிக்கிறது. அப்போது விசாரணைக்காக அதிகாரப்பூர்வமற்ற முறையில் வந்த முத்துவேல் என்ற தமிழ் போலீஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரின் பிரச்னைகளையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துபேசி, அவர்களைக் காப்பாற்றுகிறார். அதற்கு கைமாறாக தமிழக போலீஸ் அதிகாரி முத்துவேலின் உத்தரவுக்கு இணங்க, கே.கே. என்னும் பெரிய ஆடிட்டரை பிடிக்க உதவுகின்றனர். மேலும், அன்ஃஅபிஷியலாக தான், இந்த வழக்கை முத்துவேல் டீல் செய்தது தெரிகிறது. தமிழ்நாட்டிற்கு 4 தொழிலாளர்களும் அழைத்து வரப்படும் நிலையில் குமார் என்னும் தொழிலாளர் வழியில் இறங்க, மீதித்தொழிலாளர்கள், முத்துவேலுடன் செல்கின்றனர். அங்கு மூவரும் காவல் நிலையத்தைச் சுத்தம் செய்கின்றனர்.
சூடுபிடிக்கும் கதைக்களம்: அப்போது, தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் செய்த ஊழல்களை தெரிந்த ஆடிட்டர் கே.கே.வை நீதிமன்றத்தில் சிக்கவைத்து ஆளுங்கட்சி தனதுகட்சிக்கு நற்பெயரை சம்பாதிக்க நினைக்கிறது. ஆனால், இதைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சியினர், உதவி ஆணையரிடம்(ஏசிபி) மறைமுகமாக மூன்றுகோடி ரூபாயைக் கொடுத்து கே.கே.வை தீர்த்துக்கட்ட முயற்சிக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கே.கே. லாக்கப்பில் இறந்துவிடுகின்றார். முத்துவேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டேஷனில் தான், அந்த மரணம் நடக்கிறது. அதை தற்கொலையாக மாற்ற முத்துவேல் முயற்சிக்கின்றார். இதை பாண்டியும் அப்சலும் குளிக்கும்போது கேட்டுவிடுவதால், ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூவரும் சிக்க வைக்கப்படுகின்றனர். இறுதியில் மூவர் மீது என்கவுன்ட்டர் பாய்கிறது. முத்துவேலும் இறக்கிறார். போலீஸுக்கு இருக்கும் அழுத்தத்தையும் உளவியல் பிரச்னைகளையும் இப்படம் வெளியில் பேசியது.
இப்படத்தில் பாண்டியாக அட்டகத்தி தினேஷும், முருகனாக முருகதாஸூம், முத்துவேல் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும், கே.கே.வாக கிஷோரும் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவுசெய்து இருந்தாலும் ‘விசாரணை’ தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத பொக்கிஷம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்