5 Years of Nedunalvadai: குடும்பத்தின் ஏழ்மை சூழலுக்காக காதலை தியாகம் செய்யும் இளைஞர் - வலியுடன் வாழும் காதலியின் கதை!
5 Years of Nedunalvadai: நெடுநல்வாடை திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
5 Years of Nedunalvadai: நெடுநல்வாடை, 2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் மற்றும் குடும்பம் சார்ந்த திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா, சாமி மற்றும் காந்தி கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்த செல்வ கண்ணன் என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தை திருநெல்வேலி சங்கர் நகர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் கல்லூரி மாணவர்கள், தனது வகுப்புத்தோழன் செல்வ கண்ணனுக்காக பணம் திரட்டி தயாரித்து, அவரை இயக்குநர் ஆக்கி இருந்தனர். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடித்திருந்தனர். பூ ராமு தாத்தாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மைம் கோபி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களைத் தவிர, அங்கு யாரும் பெரியளவில் தொழில்முறை நடிகர்கள் இல்லை. இருப்பினும் இப்படத்தின் கதையின்மீது நம்பிக்கை கொண்ட கவிஞர் வைரமுத்து, படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் எழுதி ஒப்படைத்தார். இதற்காக அவர் பணம் வாங்கவில்லை.
அதில் கருவத்தேவா என்னும் பாடல் பலரையும் ஈர்த்தது. ஜோஸ் பிராங்க்ளின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு, அன்றைய பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளான வாசுதேவநல்லூர், புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் முழுக்க முழுக்க நேச்சுரல் லைட்டிங்கில் எடுக்கப்பட்டது.
நெடுநல்வாடை படத்தின் கதை என்ன?:
செல்லையா வயதில் மூப்பான ஒரு விவசாயி.இவரது மற்றொரு பெயர் கருவத்தேவர். தனது குடும்பத்திற்காக அள்ளும் பகலும் நிலத்தில் பாடுபடுகிறார். இவருக்கு கொம்பையா என்ற மகனும், பேச்சியம்மா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பால்ய வயது அடையும் பேச்சியம்மா, அப்பகுதியைச் சார்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, இளங்கோ என்ற மகனையும் ஒரு மகளையும் பெற்றுவிட்டு, குடிகார கணவனுடன் வாழ முடியாமல் தந்தை செல்லையாவிடமே தஞ்சம் அடைகிறார்.
அப்போது மகள் பேச்சியம்மா மீது வெறுப்பு இருந்தாலும், தந்தைக்கே உண்டான அரவணைப்புடன், தனது மகளையும் பேரப்பிள்ளைகளையும் அடைக்கலம் கொடுத்து, பேரன் இளங்கோவை நன்கு படிக்கவைத்து ஆள் ஆக்க முயற்சிக்கிறார். இருப்பினும், மகன் கொம்பையா சுத்தமாக வெறுக்கிறார்.
இந்நிலையில் காலங்கள் ஓடுகிறது. பேரன் பெரியவன் ஆகிறான். குடும்பத்தின் சூழல் புரியாத பேரன் இளங்கோ கல்லூரியில் படிக்கும்போதே, அதே ஊரில் இருக்கும் அமுதா என்ற பெண்ணை காதலிக்கிறார். அமுதாவும் இளங்கோவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றார். இருவரும் கிராமத்தின் வயல் வரப்புகளில் குடும்பத்திற்குத் தெரியாமல் மறைந்து மறைந்து சந்தித்து ரொமான்ஸ் செய்கின்றனர்.
இதனை ஒருநாள் செல்லையா கவனித்துவிட்டு, இளங்கோவுக்கு யதார்த்தத்தைச் சொல்லி, குடும்பத்தின் மீது பொறுப்பாக இருப்பது குறித்து வலியுறுத்துகிறார். மேலும் காதலினால் குடும்பம் சிதைவது குறித்தும் எடுத்துக் கூறுகிறார். அதனைத்தொடர்ந்து படித்து முடித்து பணிக்குச் செல்லும் இளங்கோ, வெளிநாடு சென்றுவிடுகிறார். பின், சம்பாதித்து கிராமத்தில் வீடு கட்டுகிறார். ஒரு நாள் சொந்த ஊர் திரும்பும் இளங்கோ, அப்பெண்ணைப் பார்க்க ஒரு தோட்டத்துக்கு வரும்போது, கையில் ஒரு குழந்தையுடன் வருகிறார். தான் வீட்டை விட்டு வெளியேறியபோது, தாத்தா செல்லையா தனது காலில் விழுந்து, அவனை வாழவிடு என்று கெஞ்சியதைக் கூறுகிறார். இதனால் சூழ்நிலைக் கைதியான அமுதா வீட்டின் சூழலுக்காக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து குழந்தை பெற்றதாகவும் கூறுகிறார். இறுதியில் இளங்கோவையும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு நல்ல வாழ்க்கை வாழ் என அறிவுரை சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
குடும்பத்துக்காக, குடும்பப் பொறுப்புகளுக்காக வீட்டை விட்டு, வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பலர், தனது காதலையும் தியாகம் செய்து ஒரு வெறுமையான வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் என்பதையும், குடும்பத்துக்காக காதலனைத் துரந்து, வேறு ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் ஒருவேதனைமிக்க வாழ்க்கையைத் தான் வாழ்கின்றார்கள் என்பதனையும் சொல்லாமல் சொல்லி முடிக்கிறது, இப்படம்.
2019ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதி ரிலீஸான இப்படத்தை பலரும் கொண்டாட மறுத்தாலும், இப்படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகள் ஆகியவைப் பலரையும் யூட்யூப் தளத்தில் ரசிக்கவைக்கின்றன. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் காணக்கிடைக்கிறது.
இதேபோல், என் புருஷன் குழந்தை மாதிரி படம் தொடர்பான கட்டுரையின் லிங்கிற்கு இங்கு சொடுக்கவும்.
அதேபோல், நடிகை நமீதா நடித்த அழகான பொண்ணுதான் படம் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது தொடர்பான கட்டுரையைப் படிக்க இங்கு சொடுக்கவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்