15 Years Of Thoranai: பல தடைகளைத் தாண்டி காணாமல் போன அண்ணனை மீட்டு வரும் தம்பியின் கதை'தோரணை’!
15 Years Of Thoranai: நடிகர் விஷால், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்த ‘தோரணை’ திரைப்படம் வெளியாகி 15ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக் கட்டுரை
15 Years Of Thoranai: ஜி.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில், சபா அய்யப்பன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பைலிங்குவலாக உருவான படம், தோரணை. இப்படம் தெலுங்கில் 'பிஸ்தா’ என வெளியிடப்பட்டது. ’தோரணை’ திரைப்படம் தமிழில் 2009ஆம் ஆண்டு, மே 29ஆம் தேதி ரிலீஸாகிய நிலையில், படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுடன், ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும்; பிரகாஷ் ராஜ், கிஷோர் மற்றும் சந்தானம் ஆகியோர் மற்ற துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்தனர்.
'தோரணை’ திரைப்படத்தின் கதை என்ன?:
மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், முருகன். முருகனின் தாய் 10 வயதில் இருந்த தனது மூத்த மகன் கணேசனை, ஒரு பெண்ணின் பெயரை பச்சை குத்தியதற்காக அடித்துவிடுகிறார். அம்மா அடித்துவிட்டார் என்னும் காரணத்திற்காக, மூத்த மகன் கணேசன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இந்நிலையில் தனது மூத்த மகனைக் காண வேண்டும் என ஆசைப்படுகிறார், முருகனின் தாய். எனவே, அம்மாவின் ஆசையை நிறைவேற்ற, இருபது ஆண்டுகளுக்குப் பின், தனது இல்லத்தில் இருந்து சிறுவயதில் ஓடிப்போன, தனது அண்ணன் கணேசனை தேடி சென்னைக்குச் செல்கிறார், முருகன்.
அப்போது ரவுடி குரு செய்யும் கொலையை முருகன் பார்த்துவிடுகிறார். இதனால் முருகனை அச்சுறுத்துகிறார், குரு.
ஒரு கட்டத்தில் குரு தான், தனது அண்ணன் கணேசன் என முருகனுக்குத் தெரியவருகிறது. அப்போது, அவரது அண்ணன் கணேசனின் எதிரியாக இருக்கும் அமைச்சரின் அடியாளும் போதைப்பொருள் வியாபாரியுமான தமிழரசுவிடம் இருந்து அடிக்கடி மிரட்டல் வருகிறது.
இதனை சமாளித்து முருகன், தனது அண்ணன் குரு என்கிற கணேசனை சொந்த ஊருக்கு எப்படி அழைத்துச் சென்று, தனது அம்மாவைப் பார்க்க வைக்கிறான் என்பதே கதை. இதற்கிடையே இந்து என்கிற பெண்ணைக் காதலிக்கிறார், முருகன். அந்தக் காதல் எப்படி கை கூடியது. இடையிடையே அவரது நண்பன் வெள்ளைச்சாமி எப்படி கலகலப்பூட்டுகிறார் என்பதே மீதிக்கதை. இறுதியில் தமிழரசுவை போலீஸ் என்கவுன்ட்டர் செய்துவிடுகிறது. அனைவரும் குடும்பமாக ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.
படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் சி.முருகன் (சி.எம்) என்னும் கதாபாத்திரத்தில், விஷால் நடித்திருப்பார். இந்து என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா சரண் நடித்திருப்பார். தமிழரசன் என்கிற தமிழரசுவாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். மேலும், வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் சந்தானமும், கணேசன் என்கிற குரு கதாபாத்திரத்தில் கிஷோரும், முருகனின் தாய் ஆக கீதாவும், அமைச்சராக ஷாயாஜி ஷிண்டேவும் நடித்துள்ளனர். இதுதவிர, எம்.எஸ். பாஸ்கர், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், லால், சுருளி மனோகர், மயில்சாமி, டி.பி.கஜேந்திரன், சுமன் ஷெட்டி, முத்துகாளை, பெஷண்ட் ரவி, சண்முகராஜன் ஆகியோர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படத்தின் இசையின் பங்களிப்பு:
மணி சர்மாவின் இசையில் 5 பாடல்கள், இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. வெடிவெடி சரவெடி அடிஅடி அதிரடி பொடிப்பொடியாக்கும் என் தோரணை, வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே ஆறடி ஆள்தான் செல்லம் கொதிக்கிற குச்சிமிட்டாய் நான் தானே, பட்டுச்சா பட்டுச்சா என்னோடப் பார்வை விட்டுச்சா விட்டுச்சா வெட்கம் விட்டுச்சா, பெலிகன் பறவைகள் ரெண்டு பசுபிக் கடலோரம் நின்று, மஞ்ச சேலை மந்தாகினி மாமன் தின்ன மாங்கா கனி ஆகிய ஐந்து பாடல்களும் அடிக்கடி விழாக்களில் ஒலிக்கவிடும், பலரின் விருப்பப் பாடல்கள் ஆகின.
15 ஆண்டுகளுக்கு முன், ஒரு சாதாரண வழக்கமான கதைக்களத்தில் பக்கா கமர்ஷியல் படமாக வந்த ‘தோரணை’ படத்தை டிவியில் போட்டால் இன்னும் ரசிக்கலாம்.