15YearsOfMayandiKudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசம்.. கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  15yearsofmayandikudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசம்.. கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார்

15YearsOfMayandiKudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசம்.. கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார்

Marimuthu M HT Tamil
Jun 05, 2024 09:28 AM IST

15 Years Of Mayandi Kudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசத்தை, கூட்டுக் குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

15YearsOfMayandiKudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசம்.. கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார்
15YearsOfMayandiKudumbathar: அண்ணன் - தம்பிகளின் பாசம்.. கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை சொன்ன மாயாண்டி குடும்பத்தார்

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் கதை மற்றும் ரசனையான காட்சி அமைப்பு

ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்ற படம் இது. இப்படத்தில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். பிறகு கடைசி தம்பியால் அண்ணிகள் ஒவ்வொருவரும் அவரை கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்து அண்ணன்கள் கோபப்படும் போது பிரச்சினை ஏற்படுவதை மையமாக வைத்து இக்கதை அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பட்டிதொட்டியெங்கும் பிளாக்  பஸ்டர் ஹிட்டானது.

நான்கு மகன்கள் இருந்தாலும், பிறக்கும்போதே தாயை இழந்த தனது கடைசி மகன் பரமனின் மீது தனிப் பிரியம் வைப்பதிருக்கும் தகப்பன் மாயாண்டியாக, மணிவண்ணன் நடித்து அசத்தி இருப்பார். மகன் கல்லூரியில் அடிதடியில் ஈடுபட கல்லூரி முதல்வர் முன்பு தன் மகனைப் போட்டு அடிக்கும் அந்த ஒரு காட்சி ஒரு சராசரி கிராமத்துத் தகப்பனாக மணிவண்ணன் நம்மை மனதை உருக வைத்திருப்பார்.

படிப்பைப் பற்றி பேசும் மணிவண்ணனின் காட்சி:

அந்த காட்சியில் அப்பாவை திட்டியதற்காக சக மாணவனுடன் சண்டையிட்ட மகனை, கல்லூரி முதல்வர் திட்டியதும் அடித்து விட்டு மணிவண்ணன் ’அய்யா, இதுவரைக்கும் என் மகனை அடித்தது இல்லை. என் தாத்தா, அப்பா, நான் படிச்சதில்லை. இவன் மூலம் தான் படிப்பு வாசனை என் வாசலுக்கு வர வேண்டும்’ என்று சொல்லி, கண் கலங்கும் போது கல்லூரி முதல்வர் எழுந்து வந்து, ஆறுதல் சொல்லும்போது, நம் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. மின்சாரம் தாக்கி இறக்கும் தருவாயில், ’’மூத்த மகன்களிடம் தம்பி படிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என தகப்பன் மணிவண்ணன் வேண்டுவது போன்ற காட்சி விவரிக்க வார்த்தைகள் இல்லாதது. 

அடுத்து இப்படத்தில் சிங்கம்புலி முற்றிலும் வேறுவிதமாக நடித்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக திருவிழாவில் சித்தப்பா வீட்டு மகன்களும், அண்ணன்களும் அடித்துக்கொள்ளும்போது, ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே செய்யும் அட்ராசிட்டி, குழந்தை எப்படிப் பிறக்கும் என்று கேட்பது என குழந்தைத்தனமாக நடித்து மக்களை மகிழ்வித்து இருப்பார். தருண்கோபி மீது அண்ணன்கள் மாறி மாறி பாசத்தைப் பொழியும் காட்சிகளைப் பார்க்கும்போது, இவர்களைப்போல் தனக்கும் ஓர் அண்ணன் இல்லையே என்று நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்திருப்பார்கள்.

அக்கா வீட்டு விசேஷத்தில் மொய் வைத்துவிட்டு சாப்பிடாமல் செல்லும் பாசமான தம்பி

இதில் அக்காவாக நடித்திருக்கும் தீபா வீட்டில், கடைசி தம்பி தருணுக்கு சரியான மதிப்பு இருக்காது. இருந்தாலும், மகளின் காதுகுத்துக்கு பத்திரிகை வைக்கச் சென்றபோது, அக்கா வீட்டுக் கணவர், வேலைவெட்டி இல்லாத வெட்டிப்பையன் எனக் கேலி பேசி சரியாக அழைக்காமல் இருப்பார். ஆனால், தருண் கோபி, அக்கா தீபா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுவிட்டு, 50,000- மொய் செய்து விட்டு சாப்பிடாமல் வெளியேறுவார்.

அப்போது அக்காவாக நடித்த தீபாவின் காட்சி, நம் கண்களை குளமாக்கியது என்றே சொல்லலாம். குறிப்பாக அவர், ‘நடைபொணம் மாதிரிப் போறானே என் தம்பி.. இதுவரைக்கும் ஒரு வாய் சோறுகூட போட முடியாத வக்கத்த சிறுக்கியாயிட்டனே’என அவர் கூறும்போது சொல்லமுடியாத ஒரு சோகம் நம்மனதில் ஏறியிருக்கும். இந்தப் படம்தான் தீபாவுக்கு அடையாளத்தைக் கொடுத்தது. சீமான், அவருக்குத் தந்த பாத்திரத்தை உயிரோட்டமாக வழங்கி உள்ளார்.

தருண் கோபி கிராமத்து இளைஞராகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார். குடும்பம் பிரியக் கூடாது என அண்ணி காலில் விழுவது, பள்ளியில் இருந்து ஒரு பெண்ணை காதலிப்பது என அட்டகாசமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். திரையுலகில் முதல்முறையாக 10 இயக்குநர்கள் இணைந்து நடித்த ஒரே படம், இதுதான்.

படத்தின் இசையை செய்த சபேஷ் - முரளியும் ஒரு கூட்டுக்குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால், படத்துக்குத் தகுந்த உயிரோட்டமான இசை இப்படத்தில் இருக்கும். குறிப்பாக, ‘முத்துக்கு முத்தாக’ பாடலின் ரீமேக்கில் கண்கலங்க வைத்துவிடுவார்கள்.

கூட்டுக்குடும்பம் என்றால் என்ன? உறவில் விட்டுக்கொடுத்துப்போதல் என்றால் என்ன? என்பதை மிக அழகாக உணர்வுபூர்வமாக விளக்கி இருக்கும் படம்,மாயாண்டி குடும்பத்தார். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான படம். இப்படம் வெளியாக இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.