தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Article Related To Tamil Film Autograph Completing 20 Years Of Release

20 Years Of Autograph: ஓர் ஆணின் மனதில் மூன்று பெண்கள் தந்த பரிதவிப்பு, காதல், நட்பு தான் ஆட்டோகிராஃப்!

Marimuthu M HT Tamil
Feb 20, 2024 06:29 AM IST

20 Years Of ஆட்டோகிராஃப்: 90’ஸ் கிட்ஸ்களின் மனதை வருடிய ஆட்டோகிராஃப் என்னும் காவியம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

20 Years Of ஆட்டோகிராஃப்
20 Years Of ஆட்டோகிராஃப்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆட்டோகிராஃப் படத்தின் கதைக்கரு என்ன?: விளம்பர நிறுவனம் நடத்தும் செந்தில் குமாருக்குத் திருமணம் ஏற்பாடு ஆகிறது. தான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒருதலைப் பட்சமாக காதலித்த கமலா, கல்லூரி படிக்கையில் காதலித்த மலையாளப்பெண் லத்திகா மற்றும் சில பால்யகால நண்பர்களுக்கும் நேரில் சென்று திருமணப் பத்திரிகை வைக்கிறார். அப்போது ஒவ்வொரு நினைவுகளையும் அசைபோடுகிறார்.

இறுதியாக, தன் வாழ்க்கைப் பயணத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்திய தோழி திவ்யா, இவனது கல்யாணப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் சின்சியராகப் பார்க்கிறார். இறுதியில் அந்த மூன்று பெண்களையும் நினைத்துப் பார்க்கிறார், செந்தில். அருகில் மனைவி இருக்கிறார். மிகவும் எமோஷனாலான நினைவுகளோடும் வலியோடும் படம் முடிகிறது.

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ரசித்த காட்சிகள்:

 • திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டரின் மகன் செந்தில் குமார். தனது சொந்த ஊருக்கு, தனது திருமணப் பத்திரிகையை வைக்க வரும்போது, அவரை அடையாளம் கண்டுகொண்டு அவ்வூர் மக்கள் வாஞ்சையாகப் பேசும்போது கிராமத்து மனிதர்களின் அன்பு மிகையில்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
 • தந்தையின் சவரக்கத்தியை எடுத்து யாருக்கும் தெரியாமல் பதின்மவயதில் முளைத்த அரும்பு மீசையை செந்தில் ஒதுக்குவார். அதைக் கண்டுபிடித்து வந்து அடிப்பார், அவரது தந்தை. இக்காட்சி பலரது வாழ்வில் நடந்திருக்கும்.
 • அதன்பின், பத்தாம் வகுப்பு படிக்கையில், கம்மாபட்டியில் இருந்து வரும் கமலா என்னும் பெண்ணுக்காக, காத்திருந்து பள்ளிக்கு வரும் செந்தில், ஒரு கட்டத்தில் அவளுடன் பேசிக்கொண்டிருப்பார். ரொமான்டிக்காகப் பேசவும் தெரியாமல் அந்த உரையாடலை நீட்டிப்பதற்காக, தூரத்தில் குயில் கூவிக்கொண்டிருக்கையில் திடீரென பார்த்து ‘குயில்’ என்பார். உடனே, கமலாவும் ’குயில்’ எனச்சொல்ல அந்த இடமே சிரிப்பலைத் தெறிக்கும்.
 •  அடுத்து, பஞ்சர் ஆன சைக்கிளுடன் கமலா வருகையில், சடாரென்று தன் சைக்கிளிலும் இருக்கும் காற்றினை வெளியேற்றிவிட்டு, தன் வண்டியும் இப்போதுதான் பஞ்சர் ஆனதுபோல் பேசுவார், செந்தில். அப்போது, திடீரென்று வரும் கமலாவின் தந்தை ஒரு மிரட்டு மிரட்டுவார். இப்படி பள்ளிப் பருவ சொல்லாத காதலில் பலர் மாட்டியதை நினைவுகூரச்செய்தது அக்காட்சி. 
 • பள்ளியில் பிராக்ரஸ் கார்டில் கையெழுத்துப்போடுவது, வாத்தியாரிடம் மாட்டும்போது அலறுவது, நாடகம்போட கமலாவிடம் வந்து செந்தில் தாவணி கேட்பது, பள்ளி இறுதி நாளில் புகைப்படம் எடுக்கும்போது கமலாவின் ஜடையைக் கட் செய்து எடுத்துச்செல்வது எனப் பலரும் தன் வாழ்நாளில் அனுபவித்த காட்சிகளை எடுத்திருப்பார், இயக்குநர் சேரன். 
 • அடுத்து கமலாவிடம் தனது கல்யாணப் பத்திரிகையை வைக்க செந்திலும், அவரது நண்பர் சுப்ரமணியும் சென்றபோது, கமலா மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பார். அப்போது, கமலாவின் இரண்டாவது மகன், செந்திலிடம் சென்று தன்பெயரும் ’செந்தில்’ என்பார். உடனே, அருகில் இருக்கும் சுப்பிரமணி, கமலாவின் மூத்த மகனின் பெயரைக்கேட்டு, ’உனக்கு முன்னாடி ஒருவர் இருக்கிறார்’ எனச்சொல்லுவார். உடனே, கடுப்பாவார் செந்தில். அக்காட்சி செம சிரிப்பலையை ஏற்படுத்தும். 
 • கேரளா சீக்குவென்ஸ்: செந்திலின் அப்பா பணியிடமாறுதலின்போது, ஆலப்புழா மாவட்டத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணியமர்த்தப்பட்டிருப்பார். அப்போது செந்திலின் கல்லூரிக்காலம் அங்கு கழியும். அப்போது லத்திகா என்னும் பெண்ணைப் பார்த்தவுடன் பிடித்துப்போய்விடும் செந்திலுக்கு. அவரது பிறந்தநாளின்போது தேடி அலைந்து ஒரு புரோபோஸ் செய்வதுபோல், ஒரு கிஃப்ட் ஒன்றை வாங்கி வந்து கொடுப்பார். லத்திகாவும் அதை ஏற்றுக்கொள்வார். அக்காட்சி அருமையாக இருக்கும்.
 •   இடையில் கல்லூரியில் இருந்து என்.எஸ்.எஸ்.கேம்ப்க்காக சென்றிருந்தபோது செந்தில் காதலை முன்மொழிவார். அப்போது திட்டிவிடுவார், லத்திகா. அதன்பின் சில நாட்கள் கழித்து வேறு ஒரு என்.எஸ்.எஸ். முகாமில் அந்தக் காதலை லத்திகா, செந்திலிடம் சொல்வார். காதலைச் சொல்லும் இடம் புனிதமானதாக காட்டப்பட்டிருக்கும். அதன்பின், செந்தில் தமிழ்ப்பெண்கள் மூக்குத்தி அணிந்திருப்பார்கள் என்று லத்திகாவிடம் சொன்னதும், அதைக்கேட்ட மறுநாள் தானும் மூக்குத்தி அணிய மூக்கில் துளைபோட்டிருப்பார், லத்திகா. அதில் அவருக்கு ரத்தம் வந்திருக்கும். உடனே, அதையறிந்த செந்தில் காதலின் உண்மைநிலையை, காதலுக்காக ஒருவருக்கு ஒருவர் தமது சுயத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையை உணர்ந்து லத்திகாவை கட்டியணைத்து முத்தமிடுவார். அந்தக் காட்சி பலரையும் உலுக்கிவிடும். 
 • அதைவிட கொடூரமாக, லத்திகாவின் காதலுக்கு அவரது வீட்டில் எதிர்ப்பு அதிகம் ஆகி, செந்திலின் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சியில், தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சியில் செந்தில் மறுமுனைத் தாக்குதலில் ஈடுபடுவார். அக்காட்சி தமிழ் இன உணர்வைப் பலர் இடையே தூண்டும். 
 •  அடுத்து, லத்திகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்த விரக்தியில் கோவையில் இருக்கும் சித்தப்பாவின் வீட்டுக்கு அழைத்து வரப்படும் செந்தில் குடித்துவிட்டு, வீதியில் படுத்துறங்குவார். தந்தை அழுவார். அக்காட்சி காதல் தோல்வியைச் சந்தித்த பலராலும் கனெக்ட் செய்துகொள்ள முடிந்த காட்சி.
 • அடுத்து வேலை தேடி, செந்தில் சென்னை சென்றபோது, ரூம் மேட்டுடன் அலைவார். அப்போது ஒரு மதியநேரத்தில் அனைவரது கையிலும் பெரும்பாலும் பணம் தீர்ந்திருக்கும். ஒரு பிரெட் பாக்கெட் வாங்கி அதை ஷேர்செய்ய முயற்சிப்பார்கள். அப்போது ’ரொம்ப பசிக்குது செந்தில்’ என நண்பன், செந்திலிடம் ஒரு பிரெட்டை கேட்பார். அப்படியே மொத்தப் பங்கையும் தருவார், செந்தில். எவ்வளவு பெரிய ஊதாரியையும் வறுமை தான், பொறுப்பானவனாக உணரவைக்கும் என்பதை தோலுரித்த காட்சி அது.
 • அடுத்து திவ்யா என்னும் தோழி செந்திலுக்குக் கிடைப்பார். திவ்யா செந்திலுக்கு நம்பிக்கை தந்துகொண்டே இருக்கும் தோழி. ஒரு கட்டத்தில் முதல் விளம்பரத்தை இயக்கும் வாய்ப்பினைப் பெறுவார், செந்தில். அப்போது செந்திலுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த தோழி திவ்யாவின் தாய் மரணம் அடைந்திருப்பாள். அதை வெளியில் சொன்னால், நண்பனின் சூட்டிங் கேன்சல் ஆகிவிடும் என்பதால், அது முடியும்வரை அவரிடம் சொல்லாமல் மறைப்பாள், தோழி திவ்யா. அதை இறுதியாக அறிந்த செந்தில், திவ்யாவிடம் ஒரு வித மிகுந்த நன்றியுணர்ச்சியுடனும் சுயவெறுப்புடனும் இருப்பார். இறுதியில் போய் இறுதிச்சடங்கினை செய்வர்.  
 •  இறுதியாக, செந்திலின் திருமணத்திற்கு வந்த கமலா, லத்திகா, அவரை வாழ்த்திச் சென்றுவிட்டு விடைபெறும்போது ஒரு பார்வை பார்ப்பார்கள். அக்காட்சி பலரது மனதையும் கனமாக்கிவிடும்.
 • இப்படத்தில் செந்திலாக சேரன் நடித்திருப்பார். லத்திகாவாக நடிகை கோபிகாவும், கமலாவாக நடிகை மல்லிகாவும், திவ்யாவாக நடிகை சினேகாவும் நடித்திருப்பர். மேலும், மனைவி கதாபாத்திரத்தில் கனிகா நடித்திருப்பார். 
 • மொத்தத்தில் ‘ஆட்டோகிராஃப்’ ஒரு காதல் காவியம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்