Raghuvaran Memorial Day: தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வில்லன் ரகுவரனை மறக்கமுடியுமா?
Raghuvaran Memorial Day: நடிகர் ரகுவரனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Raghuvaran Memorial Day: தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன்கள், ஒவ்வொரு காலத்திலும் கோலோச்சினர். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பாவனைகள், கண் சமிஞ்கைகள், நடை உடை, அதட்டல்கள் இருந்தன. அதில் மிகவும் அதட்டிப் பேசாமல், ஹே ஹே ஹே எனச் சொல்வதைக் கூலாக சொல்லி வில்லத்தனம் செய்வதில், கெட்டிக்காரர் தான், ரகுவரன். வில்லன்களில் சூப்பர் ஸ்டார் என்றே கூறலாம். அந்தளவுக்கு, இவர் தோன்றும் காட்சிகள் மிகவும் கொடூரமாக இருக்கும். ஒருமுறை இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய சிவப்பதிகாரம் திரைப்படத்தில் படப்பிடிப்புத்தளத்தில் ரகுவரன் அவர்களின் காட்சிகள் எடுக்கப்படும்போது, அவர் கேரவனில் இருந்து வராமல் தாமதம் செய்திருக்கார்.
வெகுநேரத்துக்குப் பின் அங்கு சென்று இயக்குநர் கரு.பழனியப்பன் பார்த்தபோது, தனக்கு கொடுக்கப்பட்ட பேராசிரியர் கதாபாத்திரம் எப்படிப் பேசுவார் எனப் பேசி, தன்னைத்தானே ரிகர்சல் செய்து கொண்டு இருந்திருக்கிறார், ரகுவரன். உடனே, அவர் எதிர்பார்க்கும் பேராசிரியர் பிம்பத்தை எளிமையாகச் சொல்லி, நடிப்பினைப் பெற்றிருக்கிறார். அந்தளவுக்கு தான் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருந்திருக்கிறார், ரகுவரன். அதேபோல், ரகுவரன் ஒவ்வொரு படத்தின் சூட்டிங்கின்போதும் தான் ஏற்ற கதாபாத்திரத்தில் முழுமையாக இன்வால்வ் ஆகிவிடுவாராம். அஞ்சலி படத்தின் படப்பிடிப்பின்போது, தனது அம்மாவை குழந்தைபோல் பார்த்துக்கொண்டாராம்.
ரகுவரனின் பின்னணி என்ன?கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு ஊரில் வேலாயுதம் நாயர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு டிசம்பர் 11ஆம் தேதி, 1958ஆம் ஆண்டு பிறந்தவர், ரகுவரன். இந்த தம்பதியரின் நான்கு குழந்தைகளில் ரகுவரன் மூத்தவர். மாத்தூர் என்னும் கிராமத்தில் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த வேலாயுதன் நாயர், தனது தொழிலை கோவைக்கு மாற்றியபோது,ரகுவரின் குடும்பமே கோவைக்கு புலம்பெயர்ந்தது. அதன்பின், கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரிப் படிப்பும், கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலையில் வரலாறு படிக்க ஆரம்பிக்கையில், அதை நிறுத்திவிட்டு, ஸ்வப்ண திங்கள் என்னும் கன்னடப் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின் சென்னை சென்று எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்புத் தொடர்பான டிப்ளமோவை பயின்றுவிட்டு, சினிமாவில் குணச்சித்திர நடிகராகும் முனைப்பில் வாய்ப்புத்தேடி அலைந்துகொண்டிருந்தார். அப்போது ஏழாவது மனிதன் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்றாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் ரகுவரனுக்கு கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களுக்குப் பின், சில்க் சில்க் சில்க் என்னும் படத்தில் வில்லனாக நடிக்கத் தொடங்கினார், ரகுவரன். அதன்பின், வில்லனுக்கு சினிமாவில் பஞ்சம் இருப்பதை அறிந்து, கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வில்லன் ரோல்களிலேயே வெரைட்டியாக நடித்து மிரட்டத்தொடங்கினார். மிஸ்டர் பரத், பூவிழி வாசலிலே, ஊர்க்காவலன் ஆகியப் படங்களில் வில்லன் நடிகராக முத்திரை பதித்தாலும், சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் துணை நடிகராகவும் நடித்து பெயர் பெற்றார்.
ராம் கோபால் வர்மாவின் சிவா படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுமைக்கும் பிரபலமானார், ரகுவரன். இடையிடையே தாய்மொழியான மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கத்தவறவில்லை ரகுவரன். அதனால், தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான வில்லன் ஆனார், ரகுவரன். அதிலும் குறிப்பாக, 1995ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்னும் முக்கிய வில்லனாக களமிறங்கி அநயாசமாக நடித்து மிரட்டினார். அதன்பின், ரஜினியின் முத்து படத்திலும் பெரியவரின் தம்பியாக நடித்திருப்பார், ரகுவரன். இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் அவரை நம்பர் ஒன் வில்லன் ஆக்கியது.
முக்கியத்துவம் பெற்ற படங்கள்: ரகுவரன் மணிரத்னத்தின் இயக்கத்தில் அஞ்சலி என்னும் படத்தில், மனநலம் பிறழ்ந்த குழந்தையின் தந்தையாக நடித்துப் பலரால் பாராட்டப் பட்டார். இவர் செய்த கதாபாத்திரங்களில் முக்கியமானது, முதல்வன் படத்தின் ஊழல் செய்த முதல்வர் அரங்கநாதனாக, அர்ஜூனை திரையில் மிரட்டியிருப்பார். இன்று வரை, ட்ரோல்களில் இக்காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்பின், அலை, யாரடி நீ மோகினி, போன்ற படங்களில் தந்தையாக நடித்திருந்தார், ரகுவரன். அதிலும் யாரடி நீ மோகினி ரிலீஸுக்குப் பின் சில மாதங்களில் இறந்துவிட்டார், ரகுவரன். அப்போது தான் இறப்பதற்கு முன்பு, யாரடி நீ மோகினி படத்தில் தனது மகனாக நடித்த தனுஷ், தன் மரணம் குறித்து விசாரிக்க, வீட்டிற்கு வந்தாள் அவரிடம் கொடுக்கச் சொல்லி ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார், ரகுவரன். இதனைப் பெற்றபின் கண்கலங்கிய நடிகர் தனுஷ், தனது அடுத்த படமான வேலையில்லா பட்டதாரி படத்தில் ஹீரோ கதாபாத்திரத்துக்கு ரகுவரனின் பெயர் வைத்தார். தெலுங்கில் இப்படம் ரகுவரன் பிடெக் என்னும் பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரோகிணியை காதலித்து 1996ஆம் ஆண்டு கல்யாணம் செய்திருந்த ரகுவரனுக்கு, ரிஷிவரன் என்னும் மகன் இருக்கிறார். பியானோ வாசிக்கத்தெரிந்த, ரகுவரன் ஆறு பாடல்களுக்கு தனி ஆல்பமாக இசையமைத்து, அதனை ரஜினிகாந்த் மூலம் வெளியிடச்செய்து மனைவி ரோகிணி மற்றும் மகன் ரிஷிவரன் இருவரும் பெற்றுக்கொள்ள வைத்தார்.
இத்தகைய பல்வேறு செயல்களை செய்த ரகுவரன், மார்ச் 19, 2008ஆம் ஆண்டு சென்னையில் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது நினைவைப் போற்றுவோம்.