40 Years of Payum Puli: 133 நாட்கள் ஓடி சாதனை.. ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் பாயும்புலி
பாயும் புலி திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
பொங்கலை ஒட்டி, ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் 133 நாட்கள் ஓடி சாதனைப் படைத்த திரைப்படம், பாயும் புலி. இப்படத்தின் அன்றைய கலெக்ஷன், ரூ.2 கோடி ஆகும். இப்படத்திற்குண்டான கதையை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். இசைப் பணியை இளையராஜா செய்திருந்தார்.
இப்படத்தில் பரணியாக ரஜினியும்; ரேவதியாக ராதாவும்; ரஞ்சித்தாக ஜெய்சங்கரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
தற்காப்புக்கலை பயிற்றுவிக்கும் ஆசானாக பழம்பெரும்நடிகர் கே.பாலாஜியும், சிலோன் சுந்தரியாக மனோரமாவும், அவரது மாமாவாக வி.கே.ராமசாமியும் நடித்திருந்தனர். சத்யராஜ் அடியாளாகவும், தியாகராஜன் தியாகுவாகவும் நடித்திருந்தனர். மேலும் சில்க் ஸ்மிதா ரூபாவாகவும், ஜனகராஜ் சின்னச்சாமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தங்களது இருப்பை இப்படத்தில் நிலைநாட்டினர்.
பாயும் புலி படத்தின் கதை என்ன? ஒரு கடத்தல்காரன் ஒரு இளம்பெண்ணைக் கொல்கிறான். மரணமடைந்த இளம்பெண்ணை சகோதரியாகக் கொண்ட அண்ணன், சகோதரியின் மரணத்திற்குப் பாடம் புகட்ட ஒரு தற்காப்புக்கலைப் பள்ளியில் சேர்ந்து, ஒரு ஃபைட்டராகிறார். இறுதியில் கற்றவித்தைகளைக் கொண்டு எதிரியைப் பழிவாங்கினாரா, அவரைக் காதலித்த பெண்ணுக்குப் பதில் சொன்னாரா என்பதே மீதிக்கதை. தி 36து சேம்பர் ஆஃப் ஷாலின் என்னும் சீனப்படத்தின் தாக்கத்தில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
இசை: இப்படத்திற்குண்டான இசையை இளையராஜாவும் பாடல் வரிகளை வாலியும் எழுதினர். இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றன. அதில், 'ஆப்பக்கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ணக்கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா’எனும் பாடலும், ’ஆடி மாசம் காத்தடிக்க ஆவணியில் சேர்ந்து அணைக்க வாடி’ என்னும் பாடலும் இன்றும் பலரால் கிராமங்களில் விஷேசங்களில் ஒலிபரப்பு செய்யப்படுவதுண்டு.
சுவாரஸ்யமான தகவல்: இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு முதலில் திருலோக்சந்தர் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கராத்தே மணி நடிக்க இருந்தார். ஆனால், இறுதியாக நடித்தது என்னவோ, ஜெய்சங்கர் தான். அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா அருகே ஒருகிராமத்தில் நடந்துகொண்டிருந்தபோது, படப்பிடிப்புக் கருவி ஒன்று பழுதாகி விட்டது. அதன் பழுதை சென்னை கொண்டு சென்று நீக்கினால் தான், அடுத்தகட்ட படப்பிடிப்பினை நடத்தமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. அப்போது அதே ஊரிலுள்ள கிராமத்தில் வீட்டில் தங்கி மொட்டை மாடியில் தூங்கி, அங்கிருக்கும் ஆற்றில் குளித்து ரஜினி படப்பிடிப்புக்குத் தயாரானதாக படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் எளிமை குறித்த அப்பேட்டி சமீபத்தில் வைரல் ஆனது.
படம் வெளியாகி நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்தாலும், ரஜினியின் நடிப்பு, எஸ்.பி.முத்துராமனின் திரை இயக்கம் ஆகியவை இன்றும் பலரால் ரசிக்கவைக்கிறது. எனவே, மீண்டும் ஒருமுறை பொழுதுபோக்காகப் பார்க்க, இப்படம் ஏற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்