HBD Shakthi Vasudevan: நடிகர் சக்தி வாசுதேவனின் பிறந்தநாள் இன்று!
நடிகர் சக்தி வாசுதேவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி வாசுதேவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் ஆகியப் பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
யார் இந்த நடிகர் சக்தி வாசுதேவன்?: நடிகர் சக்தி, இயக்குநர் பி. வாசு மற்றும் சாந்தி தம்பதியருக்கு பிப்ரவரி 23ஆம் தேதி, 1983ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாத்தா பீதாம்பரம் பழம்பெரும் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக இருந்தவர். நடிகர் சக்திக்கு, அபிராமி என்ற ஒரு சகோதரியும் உண்டு. நடிகர் சக்தி வாசுதேவனுக்கு 2011ஆம் ஆண்டு ஸ்மிருதி என்பவருடன் திருமணம் முடிந்து, ஹர்ஷத் என்னும் மகன் உள்ளார். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம்கொண்ட நடிகர் சக்தி வாசுதேவன், தந்தை பி.வாசுவின் இயக்கத்தில் வந்த பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1990ஆம் ஆண்டு, நடிகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1991ஆம் ஆண்டு சின்னதம்பி திரைப்படத்தில், சிறு வயது சின்னதம்பியாக, நடிகர் சக்தி வாசுதேவன் நடித்துள்ளார். அதன்பின், ரிக்ஷா மாமா, செந்தமிழ்ப் பாட்டு, இது நம்ம பூமி ஆகியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ஹீரோ: 2007ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியான தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம், தந்தை பி.வாசுவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார், சக்தி வாசுதேவன். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ, அரபுக்கவிஞர் உமர்கயாமின் கவிதையா நீ’ என்னும் பாடல் படுபிரபலம். இப்படம் சராசரி வெற்றியைப் பெற்றது. அதன்பின், மகேஷ், சரண்யா மட்டும் மலர் திரைப்படத்தின் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காதல் சந்தியா நடித்து இருந்தார்.
மேலும், 2009ஆம் ஆண்டு, வெளியான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் சக்தி என்னும் இருநாயகர்களில் ஒரு கதாநாயகராக நடித்திருந்தார்.
இப்படம் ஹீரோவாக இவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. இருப்பினும் சரியான கதை தேர்வு செய்ய இயலாமை, சரியான நேரம் அமையாமை ஆகிய காரணங்களால் இவரது அடுத்தடுத்த படவாய்ப்புகள் கேள்விக்குறியாகின. ஆட்டநாயகன் படத்தில் லிங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சரியான வெற்றியைப் பதிவுசெய்யவில்லை. அடுத்து கோ, யுவன் யுவதி ஆகியப் படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார், சக்தி வாசுதேவன்.
அதன்பின், ஏதோ செய்தாய் என்னை படத்தில் அர்ஜூன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார், சக்தி. இருப்பினும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் 4 ஆண்டுகள் கழித்து, தற்காப்பு, சிவலிங்கா ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின், 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து ஓரளவு புகழ்பெற்றார். பின்,அவரது உறவினர் கெளதமின் இயக்கத்தில் 7 நாட்கள் படத்தில் நடித்தார். பின் 2023ஆம் ஆண்டு, அல்ல இல்ல எல்ல என்னும் தெலுங்கு படத்தில் நடித்தார்.
சரியான சூழல் அமையாததால் நல்ல வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் தவித்தாலும், நடிகர் சக்தி வாசுதேவன், நல்ல நடிகர். இதை அவர் தனது முதல் படமான தொட்டால் பூ மலரும் படத்திலேயே நிரூபித்திருப்பார். கிடைக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தயக்கமின்றி நடித்து, தான் ஒரு மாறுபட்ட நடிகராக நடிகர் சக்தி வாசுதேவன் திகழ வேண்டும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்