30 Years Of Seevalaperi Pandi: ‘திருநெல்வேலிச் சீமையில..’: துரோகங்களால் குற்றவாளியாகும் சீவலப்பேரி பாண்டியின் கதை!
30 Years Of Seevalaperi Pandi: துரோகங்களால் குற்றவாளியாகும் சீவலப்பேரி பாண்டியின் கதை, சினிமாவில் படமாகி 30 ஆண்டுகளைத் தொட்டுள்ளது.
30 Years Of Seevalaperi Pandi : புலனாய்வு இதழான ஜூனியர் விகடனில் மறைந்த எழுத்தாளர் செளபா, உண்மை நாயகன் ஒருவரைப் பற்றி எழுதிய தொடர் தான், ‘சீவலப்பேரி பாண்டி’. இதை திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் பிரதாப் போத்தன், எழுத்தாளர் செளபாவை அழைத்து, இப்படத்தின் கதையை எழுதித்தரச் சொல்லி பெற்றுக்கொண்டு, பின், கே. ராஜேஸ்வரை அழைத்து, சீவலப்பேரி பாண்டி தொடர்பான தகவல்களை, அவரது ஊர் வாசிகளிடம் கேட்டு, திரைக்கதை அமைத்து தரச்சொல்லி எடுத்த படம் தான், சீவலப்பேரி பாண்டி. இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் 1994ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தின் கதை என்ன?
சீவலப்பேரி பாண்டி, தைரியமான வம்பு வழக்குகளுக்கு அஞ்சாத ஆள். இவர் வேலம்மாள் என்னும் பெண்ணை மணமுடித்துவிட்டு, தனது தாய் மற்றும் அண்ணன் மலையாண்டியுடன் வாழ்ந்து வந்தார்.
அப்போது ஊர்ப்பெரியவராக இருப்பவர், கிராம்ஸ். சீவலப்பேரி பாண்டியின் வீரம் அறிந்து அவரை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்கிறார்.
கிராம்ஸ் வழங்கிய தீர்ப்புகளால் பாதிக்கப்பட்ட நாயனார், சிவன் காளை, கருப்பையா, மூக்கையா மற்றும் ஒச்சாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து கிராம்ஸை கொல்லத்திட்டமிடுகின்றனர். அதற்கு, சீவலப்பேரி பாண்டி, உதவவேண்டும் என்று கேட்கின்றனர். அதன்பின், பாண்டியும், கிராம்ஸால் பாதிக்கப்பட்டவரும் சேர்ந்து கிராம்ஸை கொன்று விடுகின்றனர். இவ்வழக்கில் பின் அனைவரும் சரண் அடைகின்றனர். இறுதியாக பாண்டியுடன் சேர்ந்து குற்றம்புரிந்தவர்களுக்கு விடுதலையும், பாண்டிக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
கடைசியில், பாண்டிக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக, தண்டனை குறைக்கப்படுகிறது. சிறையில் ஒரு நாள் பாண்டியைப் பார்க்க வரும் அவரது மனைவியும், அவரது அண்ணனும் கிராம்ஸை கொல்லத்தூண்டிய யாரும் நமது குடும்பத்தை வந்து பார்க்கவில்லை என்றும், நாயனார் வாக்கு கொடுத்தபடி எந்தவொரு உறுதியைப் பின்பற்றவில்லை என்பதையும் சொல்லிவிடுகின்றனர். இதனால், நமது தாய் சரியான உணவின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் கோபம் அடைந்த பாண்டி, நாயனார் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கொல்ல சிறையில் இருந்து தப்புகிறார். அப்போது நாயனாரைச் சந்திக்கும் பாண்டியிடம், நாயனார் சில பொய்க்கதைகளைச் சொல்லி, பாண்டியை தன் சகோதரனுக்கு எதிராகத் திருப்புகிறார். இதனால் அவ்விடத்தில் இருந்து தப்புகிறார், சீவலப்பேரி பாண்டி. பின், பாண்டி குறித்து போலீஸுக்குத் தகவல் சொல்லிவிடுகிறார்.
அப்போது காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாகிறார், சீவலப்பேரி பாண்டி. இருந்தாலும் போலீஸின் கண்களில் இருந்து தப்பும் சீவலப்பேரி பாண்டி, இருக்கும் நபர்களிடம் இருந்து திருடி, இல்லாத ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதனால் விரைவில் சீவலப்பேரி பாண்டிக்கு தென் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் நல்ல பெயர் கிடைக்கிறது. ஒரு நாள் அவரை கைதுசெய்ய சென்ற காவல் துறையினருக்கு, பாண்டியால் பயனடைந்த மக்கள் ஒத்துழைப்புத்தர மறுத்து, காட்டிக்கொடுக்கவும் மறுத்துவிடுகின்றனர்.
அப்போது கொடைக்கானல் மலைக்கிராமங்களில் தன் மனைவியுடன் தஞ்சம் புகும் சீவலப்பேரி பாண்டி. தன்னை கோனார் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவ்வூர் தலைவரின் உதவியாளர் ஆகிறார். ஒரு நாள் மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு, காவல் துறையில் சரண் அடைய நினைக்கும் சீவலப்பேரி பாண்டியை, காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிடுகின்றனர்.
இதில் போலீஸ் உயர் அதிகாரிகள், அவரை என்கவுன்ட்டர் செய்ய நினைக்கின்றனர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, சீவலப்பேரி பாண்டிக்கு எதிராக நடக்கும் சதியைச் சொல்கிறார். இருந்தாலும், பாண்டி அவ்விடத்தில் இருந்து தப்பிக்க மறுக்கிறார். இறப்பதற்கு முன் அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்றும்; சாதி ரீதியான பாகுபாடு கூடாது என்றும் கூறிவிட்டு, போலீஸாரின் குண்டுகளை நெஞ்சில் தாங்கி இறக்கிறார்.
சீவலப்பேரி பாண்டி படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் நெப்போலியன் சீவலப்பேரி பாண்டியாகவும், வேலம்மாளாக சரண்யாவும் நடித்துள்ளனர். மேலும், ஒயிலாவாக அஹானாவும், அலியனாக சந்திரசேகரும், ரவி முதலியாராக நிழல்கள் ரவியும் நடித்துள்ளனர். கிராம்ஸ் ஆக விஜயசந்தரும், நாயனாராக ஆர்.பி.சிவமும் சிவன் காளையாக அலெக்ஸும், கருப்பையாவாக சூர்ய காந்தும், மூக்கையாவாக வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்துள்ளனர்.
சீவலப்பேரி பாண்டி படத்தின் வெற்றிக்கு உதவிய இசை:
இப்படத்தின் இசையை ஆதித்யன் செய்திருந்தார். அதில் கிழக்கு செவக்கையிலே கீரை அறுக்கையிலே, ஒயிலா பாடும் பாட்டிலே, திருநெல்வேலி சீமையில சீவலப்பேரி பாண்டியன்னா ஆகியப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
ஆரம்பத்தில் படத்தின் இயக்குநர் பிரதாப் போத்தன், இப்படத்தின் கதையை கமல்ஹாசனிடமும், மெகா ஸ்டார் மம்முட்டியிடமும் சொல்லி நடிக்க வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், கால்சீட் பிரச்னையால், இருவருக்கும் கதைப் பிடித்திருந்தும் நடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தான், இப்படத்தில் ஹீரோவானார், நடிகர் நெப்போலியன். இப்பட நெப்போலியனுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
படம் வெளியாகி, இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனாலும் கிளாஸிக் ஆன படங்கள் வரிசையில், ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு ஒரு இடம் உண்டு.
டாபிக்ஸ்