13 Years Of Theneer Viduthi: மினிமம் பட்ஜெட்டில் ஈர்த்த ஜனரஞ்சக காதல் கதை ‘தேநீர் விடுதி’
13 Years Of Theneer Viduthi: மினிமம் பட்ஜெட்டில் ஈர்த்த ஜனரஞ்சக காதல் கதை ‘தேநீர் விடுதி’ திரைப்படம் வெளியாகி 13ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

13 Years Of Theneer Viduthi: களவாணி திரைப்படம் வெளிவந்தபின், எண்ணற்ற கிராமம் சார்ந்த காதல் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அதில் பெரும்பாலும் ஹீரோ, ஊரில் ஊதாரியாக ஊர்சுற்றி இறுதியில் தான் விரும்பிய பெண்ணை மணமுடிப்பார். இடையில் அப்படம் கலகலப்பாக இருக்கும். அதே ஒரு பாணியில் எடுக்கப்பட்ட படம் தான், தேநீர் விடுதி. ‘பூ’, ‘களவாணி’ ஆகியப் படங்களுக்கு இசை அமைத்த எஸ். எஸ். குமரன் எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம், தேநீர் விடுதி. இப்படத்தில் ஆதித் அருண், ரேஷ்மி மேனன், பிரபாகர், கொடுமுடி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 1ஆம் தேதி 2011ஆம் ஆண்டு வெளியாகி, ஜனரஞ்சகமான படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி 13ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்துள்ளநிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான விசயங்களை அறிந்துகொள்ளலாம்.
தேநீர் விடுதி திரைப்படத்தின் கதை என்ன?:
தேநீர் விடுதி திரைப்படத்தின் கதைக்களம் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர். படத்தில் ஓப்பனிங்கிலேயே ஒரு பெண் இறந்ததுபோல் காட்டப்படுகிறது. எல்லோரும் அழுதுகொண்டு இருக்க திடீரென உயிர்த்து எழும் அந்த பெண், ’’தான் இறந்தால் யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னீயே தம்பி, இப்போது எவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என்று பார்த்தாயா’’ என்று தனது தம்பியிடன் பேசுகிறார். அதன்பின், ’’தன் மகன்களுக்கு என்ன குறைச்சல்’’ என்கிறார். உடனே, அவரின் தம்பி, தன் மகளின் ஜாதக நோட்டைத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். இப்படி தொடங்குகிறது, இந்தப் படம். ஆரம்பமே படம் காமெடியைப் பின்னணியைக் கொண்டது என்பதை சொல்லும் காட்சி இது. அதன்பின், அந்தப்பெண்ணுக்கு கல்யாண வயதில் இரு மகன்கள். அந்த இருவரும் சேர்ந்து ’பந்தல் ராஜா பிரதர்ஸ்’ என்ற பந்தல் அலங்காரப் பணியினை செய்து வருகின்றனர். பந்தல் ராஜா சகோதரரில் மூத்தவருக்குத்தான், மாமன் மகளின் ஜாதகம் கொடுக்கப்படுகிறது. அதில் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் தம்பிக்கு முதலில் திருமணம் நடந்தால் தான், அண்ணனுக்குத் திருமணம் நடக்கும் எனக் கூறி விடுகின்றனர். இதனால், பந்தல் ராஜா சகோதரரில் மூத்தவர் தனது தம்பியை விரைந்து கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ‘தேநீர் விடுதி’ என்னும் கடைக்குச் செல்லும் ’பந்தல் ராஜா பிரதர்ஸ்’ -களில் இளையவரான தம்பி குமரன், அந்த கடைக்கு எதிரில் மளிகைக் கடையில் தனது அண்ணனுக்காக உதவி செய்துகொண்டிருக்கும் வள்ளியைப் பார்த்ததும் சைட் அடிக்கத் தொடங்குகிறார். ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலைப் புரிய வைத்துவிடுகிறார். வள்ளியும் குமரனின் அலப்பறைகள் மற்றும் காமெடியில் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்கிறார்.