தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதை

தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதை

Marimuthu M HT Tamil
Nov 20, 2024 05:45 AM IST

தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதை
தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதை

யார் இந்த ஜான் விஜய்?: 

நவம்பர் 20, 1976ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்தார், ஜான் விஜய். பின் பள்ளிப்படிப்பை தூத்துக்குடியில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். இதனையடுத்து, சென்னையிலுள்ள லயோலோ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை விசுவல் கம்யூனிகேசன் தொடர்பான படிப்பைப் படித்திருந்தார். 

அதன்பின், ரேடியோ ஒன் என்னும் பண்பலையில் பணி செய்து, இறுதியில் நிகழ்ச்சியின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்தார். பின், சென்னை நுங்கம்பாக்கத்தில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திமுக தலைமைக்கழக நிர்வாகி டி.கே.எஸ் இளங்கோவனின் மகள் மாதவி இளங்கோவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் ’தலைமகன்’ என்னும் படத்தில் முதன்முறையாக துணைவேடத்தில் நடித்தார். இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் அவரது கல்லூரி துறை சீனியரான ஜான் விஜயை, தங்களது முதல் படமான ‘ஓரம் போ’ படத்தில் பிச்சை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். அன்றிலிருந்து தனது நடிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஜான் விஜய் பல்வேறு காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். சிறுவேடங்கள் என்றாலும் எந்தவொரு தயக்கமும் இன்றி நடிக்கக்கூடிய நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டார், ஜான் விஜய்.

ஜான் விஜய் தமிழில் நடித்த திரைப்படங்கள்: 

ஜான் விஜய் தமிழில் தலைமகன், ஓரம் போ, பில்லா, பொய் சொல்லப்போறோம், ராவணன், அங்காடி தெரு, பலே பாண்டியா, தில்லாலங்கடி, வா, கோ, ஆண்மை தவறேல், வந்தான் வென்றான், மெளன குரு, கலகலப்பு, ஏதோ செய்தாய் என்னை,சமர், டேவிட், மூன்று பேர் மூன்று காதல், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, ஐந்து ஐந்து ஐந்து, விடியும் முன், வாயை மூடிப் பேசவும், திருடன்போலீஸ், வெள்ளைக்கார துரை, எனக்குள் ஒருவன், ரொம்ப நல்லவன் டா, சகலகலா வல்லவன், திரு.வி.க.பூங்கா, டம்மி டப்பாசு, அழகு குட்டி செல்லம், பேய்கள் ஜாக்கிரதை, சாகசம், கோ2, கபாலி, நம்பியார், கூட்டத்தில் ஒருவன், துப்பறிவாளன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கடைக்குட்டி சிங்கம், வஞ்சகர் உலகம், சாமி2, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சார்பட்டா பரம்பரை, பிச்சைக்காரன் 2, பார்ட்னர், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி, கொலை, கருங்காப்பியம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அது சிறுவேடம் என்றாலும் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நடித்துக்கொடுத்துள்ளார். இது தவிர, ஜான் விஜய் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் பிஸியான நடிகராக வலம்வருகிறார். 

ஜான் விஜய் நடித்த படங்களிலேயே பெருமளவு வரவேற்பினை பெற்ற கதாபாத்திரங்கள்:

கபாலி: கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வரும் நண்பன் அமீர் கேரக்டரில் ஜான் விஜய் நடித்திருப்பார். ரஜினியை சிறையில் இருந்து வரவேற்பது முதல் ரஜினி தனது எதிரிகளை பழிவாங்கும் வரை உடன் நிற்கும் நண்பனாக வாழ்ந்திருப்பார். ரஜினியை சிறையில் இருந்து வரவேற்கும் காட்சியில் ஜான் விஜய் கண்கலங்கி நடித்தது, அவரது முந்தைய காமெடி, வில்லத்தன ஜான் விஜயை மறக்கடிக்கச் செய்தது.

காம்ரேட் இன் அமெரிக்கா (Comrade In America): மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் காம்ரேட் இன் அமெரிக்கா என்னும் படத்தில் அருள் ஜெபராஜ் பீட்டர் என்னும் இலங்கையைச் சார்ந்த ஈழ ஆதரவு ஓட்டுநராக, தமிழ்ப் பேசி நடித்திருப்பார், ஜான் விஜய். அமெரிக்காவுக்கு மெக்சிகோ சுவர் வழியாக முறைகேடாகச் சென்று தனது காதலியைப் பார்க்கச் செல்லும் துல்கருக்கு, கார் ஓட்டுநராக கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருப்பார், ஜான் விஜய். குறிப்பாக, துல்கர் சல்மான், ஜான் விஜய் வீட்டுக்குச் செல்லும் காட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் இருக்கும். இதனைப் பார்த்தவுடன் பயத்துடனேயே இருக்கும் துல்கர், காரில் ஏறியவுடன் ஒரு கட்டத்தில் ’நீங்கள் புலியா’ என கேட்டே விடுவார். சிறிதுதூரம் சென்றவுடன், மெக்சிகோ எல்லையில் குண்டு சத்தம் கேட்கும்.காரும் பழுதாகி இருக்கும். அப்போது ’போகும்வழியில் இறக்கிவிட்டுப் போகுமளவுக்கு நான் மோசமானவன் இல்லை’ என்பார், ஜான் விஜய். இந்த ஒரு சீனில் பெரும்பான்மை தமிழ் மக்கள் ஒருவருக்கு உதவ களமிறங்கிவிட்டால் பின்வாங்குவதில்லை என்னும் குணத்தைக் காட்டியிருப்பார், இயக்குநர், அமல் நீரத். அப்படத்தில் வரும் ’வானம் திலதிலக்குனு’ என்னும் பாடலில் மெக்சிகன் மொழியில் பேசி அசத்தியிருப்பார், ஜான் விஜய்.

சார்பட்டா பரம்பரை: சார்பட்டா பரம்பரை படத்தில் கெவின் என்னும் கதாபாத்திரத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவின் காட் ஃபாதராக, குத்துச்சண்டையில் அவரை ஊக்குவிக்கும் நபராக நடித்திருப்பார், ஜான் விஜய். மேலும், கபிலனுடைய தந்தையின் உற்றநண்பனாக ஜான் விஜய் காட்டப்பட்டிருப்பார். குறிப்பாக, அவரை அந்தப் பகுதி மக்கள் செல்லமாக ’டாடி’ என அழைப்பதும், ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் பதிலளிப்பதும் என ஜான் விஜய் பக்காவாக நடித்திருப்பார்.

இப்படி பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜான் விஜய்க்கு இன்று பிறந்தநாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.