HBD Actress Samantha: செல்ஃபி புள்ள.. பல்லாவரத்து பதுமை.. சமந்தாவுக்குப் பிறந்தநாள்!
HBD Actress Samantha: நடிகை சமந்தாவின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை..
யார் இந்த சமந்தா? : ஜோசப் பிரபு மற்றும் நினைட் பிரபு தம்பதியினருக்கு 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி மகளாகப் பிறந்தவர், சமந்தா. தந்தை ஜோசப் பிரபு, பிறப்பால் ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் நினைட் பிரபு, ஒரு மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். சமந்தாவுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர். மூத்தவர் பெயர், ஜோனத் மற்றும் இரண்டாவது அண்ணனின் பெயர் டேவிட்.
சென்னையின் பல்லாவரம் பகுதியில் வசித்து வந்த நடிகை சமந்தா, சென்னையின் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் கல்வியும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் படித்தார். சிறுவயது முதலே மாடலிங் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, அவ்வப்போது சிறு சிறு விளம்பரங்களில் நடித்தார். பின், நாயுடு ஹாலில் பணிபுரிந்த சமந்தா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மனால் கண்டெடுக்கப்பட்டு, திரைத்துறையில் நுழைந்தார்.
சினிமாவில் சமந்தாவுக்கு கிடைத்த நல்ல தொடக்கம்: நடிகை சமந்தா கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டில் ரிலீஸான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ’யே மாயா சேசவே’ என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதேநேரம் அப்படத்தின் தமிழ் வெர்ஷனான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், சிம்புவைக் காதலிக்கும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக நடித்திருப்பார். இப்படத்திற்காக, தெலுங்கில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது, நந்தி சிறப்பு ஜூரி விருது ஆகியவற்றைப் பெற்றார்.
அதே ஆண்டு, அதர்வா முரளி நடிப்பில் வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதே ஆண்டு, இவர் முதன்முதலில் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’ பல்வேறு தடைகளுக்குப் பின் ரிலீஸாகிறது. இப்படத்தின் இயக்குநர் தான், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் பிஸி: அதன்பின் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டினார், நடிகை சமந்தா. தெலுங்கில் பிருந்தாவனம், அதன்பின் தமிழில் நடுநிசி நாய்கள், தெலுங்கில் டோக்குடு,ஈகா, அடுத்து தமிழில் ஈகாவின் தமிழ் வெர்ஷனான நான் ஈ, அதன்பின் நீ தானே என் பொன்வசந்தம், என அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என நடித்தார்.
தெலுங்கில் சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்கிற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து, முன்னணி நடிகை ஆனார். பின், அட்டாரிண்டிகி தாரேதி, ராமய்யா வஸ்தாவய்யா, மனம், ஆட்டோ நகர் சூர்யா, அல்லுடு சீனு, என அடுத்தடுத்து தெலுங்கின் பிளாக் பஸ்டர்களில் இடம்பெற்று தெலுங்கின் தவிர்க்கமுடியாத நடிகையானார், சமந்தா.
அதேபோல், தமிழில் கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கம், பெங்களூரு நாட்கள், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா ஆகியப்படங்களில் நடித்த சமந்தா, தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ்,சூர்யா,விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார்.
அதன்பின் சூப்பர் டீலக்ஸ், புஷ்பா முதல் பாகம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்களும் சமந்தாவின் கேரியரில் முக்கியப் படங்களாக அமைந்தன.
சமந்தாவின் வாழ்வில் நிகழ்ந்த இறக்கங்கள்:
தனது முதல் படமான ‘யே மாயா சேசவே’ என்னும் படத்தில் நடித்த நாகசைதன்யாவை வெகுநாட்களாக காதலித்து திருமணம் செய்த நாகசைதன்யா, 2017ஆம் ஆண்டு கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி கோவாவில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த ஜோடி, 2021ஆம் ஆண்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது ஒரு புறமிக்க, ’மயோசிடிஸ்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக சமந்தா தெரிவித்தார். இதனால் தன்னால் சில காலங்கள் தொடர்ந்து நடிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
ஒரு பெண்ணாக இருந்து பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடிகையாக மிளிர நினைக்கும் நடிகை சமந்தாவுக்கு இன்று 37ஆவது பிறந்தநாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
டாபிக்ஸ்