HBD Sheela: கிராமம் முதல் நகரம் வரையிலான பயணம்.. தமிழில் முக்கிய நடிகையான ஷீலாவின் கதை.. பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
HBD Sheela: கிராமம் முதல் நகரம் வரையிலான பயணம் மூலம் தமிழில் முக்கிய நடிகையான ஷீலாவின் கதையினை, அவரது பிறந்த நாளான இன்று அறிந்துகொள்வோம்.
HBD Sheela: தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே, மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களும் மலையாளக் கரையில் இருந்து தமிழ்நாட்டில் கரை ஒதுங்கியவர்களும் தான் அதிகம். இருந்தாலும், அத்திப் பூத்தாற்போல, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த, தமிழ் மக்களின் வாழ்வியலை உணர்ந்து நடிக்கக் தெரிந்த நடிகைகள் அங்கொருவரும் இங்கொருவருமாக வருவர். அத்தகைய நடிகை தான், ஷீலா. அவரது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி அறிந்துகொள்வோம்.
யார் இந்த நடிகை ஷீலா?:
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகிலுள்ள சவேரியார்பட்டி என்னும் சிற்றூரில் 1992ஆம் ஆண்டு, ஜூன் 14ஆம் தேதி பிறந்தவர் தான், ஷீலா. தனது பள்ளிப்படிப்பை, ஜெயங்கொண்டத்தில் உள்ள புனித பாத்திமா, ஹாஸ்டலில் தங்கிப் பயின்றார். அப்போது மாறுவேடப்போட்டி மற்றும் நடனப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுபெற்றபோது, அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தை மேலும் தூண்டியது. அதன்பின், திருச்சியில் உள்ள கலைக்காவேரி கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியத்தை ஒரு மேஜர் கோர்ஸாக எடுத்து படித்து முடித்தார். அப்போது நடிப்புப் பயிற்சியினை சொல்லிக் கொடுத்து வந்த ராஜ்குமார் என்கிற தம்பிச் சோழனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் குடியேறிய ஷீலா:
அதன்பின், சென்னையில் உள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது ஷங்கரின் உதவி இயக்குநரும் கிரைம் பாணியிலான கதைகளை எடுப்பவதில் வல்லவருமான அறிவழன் ஷீலாவை தனது ’ஆறாவது சினம்’ என்னும் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
நடிப்புத்துறையில் படிப்படியாக வளர்ந்த ஷீலா:
பின், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் செழியனின் இயக்கத்தில் உருவான ‘டூலெட்’ என்னும் படத்தில் அமுதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. அதனால், அண்டை மாநிலம் வரை, ஷீலாவின் புகழ் பரவியது.
மலையாளத்தில், கும்பளாங்கி நைட்ஸ் என்னும் திரைப்படத்தில் ‘சதி’ என்னும் கனமான ரோலில் நடித்து தமிழ் மற்றும் மலையாள இன்டஸ்ட்ரியில் பிரபலமானார். அதன் அசுரவதம் என்னும் படத்தில் கஸ்தூரி என்னும் கதாபாத்திரத்திலும், நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இதற்கிடையே ஜி தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான ‘அழகிய தமிழ் மகள்’ என்னும் நெடுந்தொடரில் நடித்து, இல்லங்களில் உள்ள பல தாய்மார்களின் ஆதரவைப் பெற்றார்.
பின், லிவ் இன் எனப்படும் வெப் சீரிஸிலும், சாட்சி, எது தேவையோ அதுவே தர்மம், சீதை போன்ற குறும்படங்களிலும் நடித்திருந்தார். பின், இவர் நடித்திருந்த திரெளபதி படம், 2020ஆம் ஆண்டு வெளியானது. பின் மண்டேலா என்னும் தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில், யோகி பாபுவுக்கு ஜோடியாக களமிறங்கியிருந்தார், நடிகை ஷீலா. அதன்பின், பிச்சைக்காரன் 2-ல் ராணி என்னும் கதாபாத்திரத்திலும், நூடுல்ஸ் என்னும் படத்தில் சக்தி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஹைலைட்டாக கடந்தாண்டு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில், ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.
முறிவுக்கு வந்த காதல் திருமணம்:
இந்நிலையில் ஷீலா, தான் விரும்பிக் காதலித்து திருமணம் செய்த தம்பிச்சோழன்(ராஜ்குமார்) என்கிற நடிப்புக் கலைப் பயிற்றுநரைப் பிரிந்ததாக அறிவித்தார். அந்தப் பிரிவின்போது கூட, நன்றியும் அன்பும் என்று தன் முன்னாள் வாழ்க்கைத் துணைக்கு அறிவித்து இருந்தார்.
சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இன்றி, நடிகையாவது என்பது நடக்காத, இயலாத காரியம் எனப் பலர் கூறுவர். அதனைத் தன் நடிப்புத் திறமையாலும், கதை தேர்வாலும் தன் வசப்படுத்தி, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறிய நடிகை ஷீலாவை வாழ்த்துகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
டாபிக்ஸ்